தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, March 8, 2014

மகளிர் தின நல வாழ்த்துக்கள் ......

மகளிர் தின நல வாழ்த்துக்கள் ......
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம் அணிசேர்வோம் ,

 


Women's Day Special: Historical Women - Tips for Women
பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர்.
காப்பிய நாயகிகள்
சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.
பெண்பாற் புலவர்கள்
சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.
இலக்கியத்தில் பெண்ணின் பெருமை
பக்தியை பேசும் இலக்கியத்தில் பெரிய புராணம் முதன்மையானது. 28 பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. இருபத்தியொருவர் நாயன்மாரது மனைவியர், தாயார் நால்வர், மகள்மார் இருவர், உடன் பிறப்பு ஒருவர், காரைக்காலம்மை, இசைஞானியார், மங்கயர்க்கரசியார் ஆகிய மூவரும் நாயன்மார்களுக்கு இணையான பேறு பெற்றனர். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த, சிறுத் தொண்டர் மனைவியை "மனையறத்தின் வேராகி" என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார்.. புராணக் கதைகள் கற்பனை என்று சாதித்து வாதிப்பவரும் உண்டு.
வீர மங்கைகள்
சங்க காலத்தில் வீரத்தின் விளை நிலமாகவும் பெண்கள் விளங்கினர். போர்க்களத்தில் தீரமுடன் போராடிய வீர மங்கையர்களையும் படித்திருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா? இவையே ஆணின் வெற்றிக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பதை நிரூபித்துள்ளது.
பாரதியும் பெண்ணியமும்
பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியதில் பாரதிக்கு பெரும் பங்குண்டு. பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார், தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை சுகுண சுந்தரியில் குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது. தொழில் பகுதி உயர்ந்தது, மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். மாதவையா, கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின் வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர். மகளிருக்கென சிறந்த ஊடகங்கள் பறைசாற்றின.
எழுத்தாளர்கள், இசையரசிகள், சொற்பொழிவாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்து பெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும். நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR