தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, January 31, 2020

31-01-2020  இன்று BSNL ல் வரலாறு காணாத  சூழல்.

இன்னும் சில மணித் துளிகளில் நாடு முழுவதுமுள்ள 90000 BSNL ஊழியர்கள், அதிகாரிகள் துறையை விட்டு வெளியேறுகிறார்கள். 
நவீன தொழில்நுட்பத்தில் தொலைத் தொடர்பு துறை எதைக் கையாள வேண்டுமோ அதை JIO, VODAFONE, AIRTEL ஆகியவை கையாள்கின்றன. அவைகளுக்கு அரசு கடன் கொடுக்கிறது, கடன் தள்ளுபடி செய்கிறது.  ஆனால் பல லட்சம் கோடி சொத்துக்கள் கொண்ட BSNL க்கு கடன் கொடுக்காமல், 4G யும் கொடுக்கப்படாததால் துறை நலிவடைந்து  இன்று 1 லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அரசுக்குப் பிறந்த குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. 
ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்து தன் பிள்ளையை தவிக்க விட்ட மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது. 
பொறுத்திருந்து பார்ப்போம்!

சென்று வாருங்கள் தோழர்களே!   நல்லதே நடக்கட்டும். துறையில் ஒரு கண் வைத்து காத்திருப்போம்.   பிரியா விடை பெறும் உங்களுக்கு என்றும் துணை நிற்போம்! 

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

Wednesday, January 29, 2020



விருப்ப ஓய்வில் பணி நிறைவு பெரும் தோழர்களுக்கு 
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
***********************************************
அருமைத் தோழர்களே!
அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்!   இன்றைக்கு திரளாக தோழர்கள் பணி ஒய்வு பெற்றிருக்கிறீர்கள்!   உங்களை நேரில் வாழ்த்தி, மரியாதை செய்து, வழியனுப்ப வேண்டிய கடமையை செய்ய முடியாமல் காலம் நம்மை பிரித்து விட்டது.   ஆனாலும், இந்தத் துறையில் பல ஆண்டுகள் சேவை செய்ததற்கு, உழைத்ததற்கு  ஓரளவிற்கு பணப்பலனை அடைந்திருக்கிறீர்கள் என்பது ஓர் ஆறுதல்.
           மற்ற கேடர்களைப் போலல்லாது மூன்றாம் பிரிவு ஊழியர்களின் உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல.  மஸ்தூர் காலத்தில் பட்ட கஷ்டங்கள், கால காலத்திற்கும் நம் நெஞ்சைவிட்டு அகலாது. அதைப் போல நம்மை முன்னெடுத்துச் சென்று, நமக்கெல்லாம் நல்ல பதவி உயர்வு, உயர்ந்த சம்பளம்  பெற்றுத்தந்தது தொழிற்சங்கம்தான் என்றால் மிகையாகாது.  தோழர்கள், குப்தா, ஜெகன், சந்திரசேகர், விச்சாரே போன்ற தலைவர்களின் பங்களிப்பு உயிர் உள்ளவரை நெஞ்சில் நிற்கும். குறிப்பாக மஸ்தூர்களுக்கு சங்கம் செய்த பணி, அளப்பரியது. 

            தொலைத்தொடர்புத் துறை பொதுத் துறையாக மாற்றப்பட்டபோது, தவிர்க்கவியலாமல் நமது சங்கம் அதை ஏற்றுக் கொண்டது.  அப்போது முன் நிபந்தனையாக தோழர் குப்தா அரசுப் பென்சனைக் கேட்டு 3 நாள் வேலை நிறுத்த அறிவிப்பு செய்தார்.  FNTO தலைவர் வள்ளியோடு இணைந்து போராடி அதில் வெற்றியும் கண்டார்.   போராடிப் பெற்ற அந்த 37A சட்டத் திருத்தம்தான் BSNL ஊழியர்களின் ஓய்வு காலப் பாதுகாப்பு.

          நமது பகுதியில் தோழியர் லைலாபானு அவர்களின் முயற்சிகள், உழைப்பு மாநில அளவில் போற்றப்பட்ட ஒன்று. விருப்ப ஓய்வில் செல்லும் அவர்களையும் இந்த நேரத்தில்  நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

                  தோழர்களே! எதிர்காலச் செயல்பாடுகளை ஒரு முறைக்கு நான்கு முறை ஆய்வு செய்து, மற்றவர்களிடம் கலந்து, குறிப்பாக மனைவி, மக்களிடம் நன்கு கலந்து  தேவையென்றால் சங்கத்தையும் கலந்து முடிவெடுங்கள்.  NFTE இயக்கத்தில் நீங்கள் தந்த பங்களிப்பு, உழைப்பு, கேட்டபோதெல்லாம் அளித்த நிதி இவைகளை மறுக்கவோ,  மறக்கவோ முடியாது. நீங்கள் ஓய்வு பெற்றாலும் உங்களோடு NFTE என்றும் பயணிக்கும். 

                    நமது தோழர்கள் அதிக அளவில் பங்கேற்பதும், பல்வேறு கருத்தோட்டங்கள், பல்வேறு சங்கங்களைச் சார்ந்த தோழர்கள் இணைந்திருப்பதுமான சங்கம் என்பது AIBSNLPWA ஒன்றுதான்.  நாம் ஒன்றாய் இருந்த காலத்தில்தான் முதன் முதலாக போனஸைப் பெற்றோம்.  LTC, MRS மற்றும் இரண்டு கட்டப் பதவி உயர்வுகளை பெற்றோம்.  40000 கோடி இருப்பையும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி லாபத்தையும் கண்டோம்.  பின் சங்கங்கள் பிளவுண்டன. தனித்தனியானோம்.  லாபம், கையிருப்பு, போனஸ், LTC, MRS எல்லாம் போய், நட்டத்திற்கு ஆளாகி இன்று சம்பளமும் கிடைக்காமல் தவிக்கிறோம்.  தெளிவான முடிவெடுக்க முடியாத இக்கட்டான சூழலில் 78000 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்ல வேண்டிய நிலை.   இவ்வளவு சிக்கலுக்குப் பின்னரும் தனிக்கடை ஆரம்பிக்க எண்ணுகிறது சில சங்கங்கள்.  எந்தச் சங்கத்தில் பலரும் இணைந்திருக்கிறார்களோ, அதில்தான் நீங்கள் இணைய வேண்டும்.  இனியும் நம் தோழர்கள் பிளவுக்கு ஆளாகக் கூடாது.  ஓய்வுக்குப் பிறகும் நீங்கள் ஒற்றுமைப் பாதையில் செல்லும் சங்கமான AIBSNLPWA  வுக்கு சென்று அதற்கு வலு சேருங்கள்.  NFTE யின் பாரம்பரியத்தை, முத்திரையை அங்கு பதித்திடுங்கள்.

                   ஏனென்றால், அகில இந்திய அளவில் அந்தச் சங்கம் பெரிய வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறது.    நல்ல தேர்ந்த தலைவர்கள் மேல்மட்டத்தில் அங்கம் வகிக்கிறார்கள். மேலும் சமூக அக்கறையோடு செயல்படுகின்ற சங்கமாகவும் விளங்குகிறது. எனவே, அதில் இணைவது என்பதே சாலச் சிறந்தது.

                   அடுத்து வழக்கம்போல், ஓய்வு பெரும் தோழர்கள் ஒலிக்கதிர் நிதியினை அளித்திடவும்.  அதைக் கொடுக்கும்போது, ஒரு போட்டோவும், பெயர், முகவரி, பதவியுடன் கூடிய சிறு குறிப்பும் எழுதித் தாருங்கள். அது நமது பத்திரிகையில் வெளியிட உதவியாயிருக்கும்.  கூடிய மட்டும் விரைவாக தாருங்கள்.

                     நன்றி தோழர்களே!  மீண்டும் சந்திப்போம்!!

என்றும் உங்கள்,
கா. கிள்ளிவளவன்,
NFTE, தஞ்சை மாவட்டச் செயலர்.

Tuesday, January 28, 2020

புத்தாண்டில் உங்களோடு
ஒரு சில கருத்துக்கள்.  

அன்பு நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்.

ஆங்கிலப் புத்தாண்டு 2020 இன்று துவங்குகிறது. துவக்கத்தில் சில வேலைகளை செய்ய நமக்குப் பிடிக்கும். நாளாகிவிட்டால் அதில் நமக்கு நாட்டம் குறைந்து விடும்.  எனவே, இன்றிலிருந்து சிலவற்றில் கவனம் செலுத்துவோம். 


முதலாவதாக தினசரி டைரி எழுதுவோம். குறைந்த பட்சம் ஒவ்வொரு நாளும் ஒரு வரியாவது எழுதியே தீருவது என்பதை கடமையாகக் கொள்வோம்.   இது தவிர வேறு குறிப்புகள் எது எழுதினாலும், தேதி, நேரம் போட்டு ஆரம்பிப்பது நல்லது.  இது நமது மூளையில் நினைவாற்றல் பகுதியை அதிகரிக்கிறது, மேலும் புதிய செய்திகளுக்கும் இடமளிக்கிறது. 


ஒவ்வொருவரிடமும் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது.  எனவே, ஒருவரிடமிருந்தே நமக்கு நல்லவையும் கிடைக்கும். தவிர்க்க வேண்டியவையும் கிடைக்கும். ஒருவரின் குறைகளை சுட்டிக் காட்டுவதாயிருந்தால், அதை அவரிடம் தனியே சொல்லவும்.  நிறைகளை  குறைந்தது 4 பேராவது இருக்கும் போது சொல்லுங்கள்.  ஒருவரின் குறையை தொடர்ந்து விமர்சிக்க வேண்டாம். ஏனெனில், அவர் சரியாகும் வாய்ப்பை தடுத்தவராக நாமே கூட இருக்கலாம். 


ஆங்கிலத்தில் ஒரு செய்தி உங்களுக்கு வந்தால், அதைத் தூக்கிக் கொண்டு யாரிடமும் செல்வதற்கு முன் நீங்களே அதன் அர்த்தத்தை 90 சதவீதம் தமிழில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கூகுளில் உள்ளது. அந்த ஆப்ஸ் ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.   


கொஞ்சம் புத்தகம் படிப்போம். 


எங்காவது கூட்டம், ஆர்ப்பாட்டம், நிகழ்ச்சி என்று எது நடந்தாலும் ( அது எந்தக் கட்சியாக  அல்லது  அமைப்பாக இருந்த போதிலும்) அவைகளை கவனிப்போம். ஏற்புடையதாக இருந்தால் அதில் கலந்தும்  கொள்வோம். மாற்றுக் கருத்துக்களை மதிப்போம். 


நிர்வாகம் அல்லது பொறுப்புக்களில் ஏற்றுக் கொண்டவைகளை, ஒப்புக் கொண்டவைகளை நிறைவேற்றுவோம்.  தவணை வாங்குவது, தவணை தவறுவது தவிர்ப்போம்.


நமது பணியை முடிக்க அல்லது பணம் கட்ட காலம் இருந்தாலும், அதற்காக காத்திருக்காமல் உடனே அதைச் செய்யவும் அல்லது கட்டவும்.  


புதிய முயற்சிகளுக்கு ஆதரவாக, பக்க பலமாக இருப்போம்.  


நாட்டு நடப்பில் நாட்டம் கொள்வோம்!


முடிந்தவரை முகம் புன்னகையோடு இருக்கட்டும். 


இதில் இன்னும் சேர்க்கலாம், நீக்கலாம் அல்லது பாராட்டலாம்.  

அது உங்களுடைய வேலை.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன், 

எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை. 
01-01-2020

Wednesday, January 15, 2020

அன்புடன், 
கா. கிள்ளிவளவன்.
**************************************************************
  புத்தாண்டு மற்றும் 
     பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
=============================
உழைப்பவன், உழுபவன் 
உலகிற்கோர் வரம்! -அதை 
உணர்ந்து வாழ்ந்திடல் 
நல்லோரின் தரம்.

கூட்டாய், குடும்பமாய் 
வாழ்ந்தவர்கள் நாம்! - அந்தக் 
கூட்டைக் கலைப்போரை
கொல்ல வேண்டாம்!  
கொட்டித் தீர்ப்போம், தேனீக்களாய்!

வளர்ந்த தேசம்  இந்தியா!
வல்லோர்களின் வழியில், வலியில் 
வாழ்வு பெற்றவர்கள் நாமெல்லாம்.
இனியுமா இப்படி! என்பதே கேள்வி.
வருந்திட வேண்டாமென்றால் 
திருந்திட வேண்டுமன்றோ!

தமிழ் கூறும் நல்லுலகின் 
திருவள்ளுவர் ஆண்டு 
துவங்கியது தையிலே! -அதைக்
கொள்வோம் நாம், சிந்தையிலே!  

ஆண்டின் ஆரம்பம் 
அறுவடை ஆகிடும்.
புத்தாண்டும், பொங்கலும் 
இணைந்து வரும் தையிலே 
நம் பிள்ளைகள் சிந்தையும் 
செழுமையுற விரும்புவோம்.

என்ன நிலை எடுப்போரும் 
என்ன விலை கொடுப்போரும் 
சொந்த தேச மக்களே!
இந்த நிலை வாரா வண்ணம்
மனங்களை ஊடுருவி,
மந்த நிலை போக்கிடுவோம்!

அனைவருக்கும் இனிய பொங்கல், 
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன் உங்கள்,
எஸ். சிவசிதம்பரம்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR