தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, December 31, 2017


ஆங்கிலமோ, தமிழோ, 
திருவள்ளுவர் ஆண்டோ 
எதுவாயிருந்தாலும் 
ஆண்டு துவக்கமென்றால் 
அதில் ஒரு மகிழ்ச்சிதான்.

விடுபட்ட காரியங்களை 
விரைந்து முடிக்கலாம்.
நண்பர்களை, உறவுகளை 
நாற்புறமும்  சந்திக்கலாம்.
 மகிழ்ச்சியை பகிரலாம்.

விட வேண்டியதை விடலாம்.
துவங்க வேண்டியதை 
உடனே துவங்கலாம்.

இடப்பட்ட பணியை 
இனி வரும் காலங்களில் 
ஆன்மசுத்தியோடு செய்வோம்.
தொழிற்சங்க செயல்பாட்டில் 
ஈடுபாட்டை இருத்துவோம்.

பதவியில் இருப்போர் 
தனது பங்கைச் செலுத்தணும்.
முன்னிலும் முனைப்பாய் 
சங்கத்தை வளர்க்கணும்.

குடும்ப உறவுகள் 
குதூகலம் காணட்டும் 
உங்களின் குலம் தழைக்க 
செயல்பாடு சிறக்க 
மாவட்டச் சங்கத்தின் 
மகிழ்வான வாழ்த்துக்கள்!

தோழமையுடன்,


Saturday, December 30, 2017

18 பிறக்குது!
 பல கேள்விகள் குடையுது!
என்ன செய்யலாம் தோழர்களே!
ஏதாவது சொல்லுங்கள்!

கருத்தில்லை என்று சொல்லி 
கம்பி நீட்ட வேண்டாம்.
வாயைத் திறந்து பேசுவது
வலியினைப் போக்கி விடும்.

ஆள் மூலம் பேசுவது 
அடியோடு இனி வேண்டாம்  
நேரடிப் பேச்சே 
நியாயத்தை வெளிக் கொணரும்.
2017 ல் என்ன செய்தோம்!
18 ல் என்ன செய்யப் போகிறோம்!! 

சாதனைகள் புரிந்த நமக்கு 
சோதனைகள் ஏன் வருது?

நல்ல துறை நலிந்த துறையாவது எதனால்?
அதில் நமக்கேதும்  பங்குண்டா?

நாளும் உழைக்கும் நம்மோடு 
உழைக்காமல் உலா வருபவரும் இருக்கிறாரே?

வாழ்வளித்த சங்கத்தை 
வச்சு வதை செய்வோரும் இருக்கின்றார்!
உளமகிழ்ந்து உழைப்போரும் இருக்கின்றார்!

வார்த்தையில் வலுவேற்றி 
போராடிய தோழர்கள், 
உட்கட்சி சண்டையை 
உளமார நேசித்தவர்கள்  
தனிக் கட்சி துவங்கலாமா!
 இது தகுதியான ஒன்றா!

சம்பள மாற்றம் வந்திடுமா!
சம்பளத்தில் பிரச்சினை வருமா!

ஒப்பந்த ஊழியர் வாழ்வு 
நித்திய கண்டமா!

பென்சன் நிலைக்குமா!
போனஸ் கிடைத்திடுமா!

துறையை வளர்த்திட 
சங்கத்தை வளர்த்திட 
சங்கங்கள் இணைந்திட 
புதிய கருத்துக்கள் ஏதும்  உண்டா!

தெரிந்தைக் கூறுங்கள்! 
புத்தாண்டில் சந்திப்பேன்!
வாழ்த்துவேன்! வாழ்த்தும் பெறுவேன்!! 
K. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர்.  

BSNL ன் புத்தாண்டு பரிசு  ?

லேண்ட் லைன் இணைப்புக்கு இதுநாள் வரை 
ஞாயிறு தோறும் இலவசம் 
இரவு 9 மணி முதல் காலை 7 மணிவரை இலவசம்.
==========================================
இனி 
01-01-2018 முதல் 
இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை.
ஞாயிறு தோறும் இலவசம்.

லாபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் வேளையில்,
மற்ற நெட்ஒர்க் எல்லாம் ஊத்தி மூடும் வேளையில், 
புத்தாண்டு பிறக்கின்ற வேளையில்,
வாடிக்கையாளருக்கு புரிய வைத்து 
வெற்றி கொள்ளும் நிலையில்,
இந்த அறிவிப்பு தேவைதானா! 

ஆண்டு துவங்கும் நேரத்தில் 
சலுகைகளை அதிகரிப்பதே நலம்.


சம்பள மாற்றம்
 0 %,   5 %,   10 %,   15 %   
என்ற அளவில் உயர்வு இருக்குமாம்.

BHEL க்கு 10 % 
அறிவிக்கப்பட்டுள்ளது.
லாபமீட்டும் துறைக்கே 10 % தான் 
கிடைத்துள்ளது.

நமக்கு?
0 % லிருந்து 
துவங்குவதுதான் 
நமக்கு கவலையளிக்கிறது.

பார்ப்போம். 
6 ம் தேதி திட்டமிடலில் 
அலசி ஆராய்வோம்!

Friday, December 29, 2017


இம் மாதம் 31-12-2017 அன்று பணி ஓய்வு பெறுபவர்கள்

தோழர். R. பார்த்தசாரதி அவர்கள்,  
டெலிகாம் டெக்னீசியன் , CSC, தஞ்சை. 

தோழர். R. ராமன் அவர்கள்,


டெலிகாம் டெக்னீசியன், அம்மாபேட்டை.

தோழர்களின் பணி நிறைவுக்காலம் சிறந்தோங்க NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.


சொசைட்டி டைரி, காலண்டர்
""""""""""""""""""""""""""""""
தஞ்சாவூர்  தொலைதொடர்பு 
சொஸைட்டி அங்கத்தினர்களுக்கு  
28/12/17 வெள்ளிக் கிழமை முதல் 
காலண்டர் டைரி மற்றும் டிராவல் பேக் 
RGB தோழர்கள் மூலம் வழங்கப்படும். 
இடம் GM office .

மேலும் தகவல்களுக்கு
RGB மற்றும் Director ஐ தொடர்பு கொள்ளவும்.

தோழமை வாழ்த்துக்களுடன்,
ஆர். இராஜேந்திரன்,
 இயக்குனர், GTECS , திருவாரூர்.
01-01-2018 முதல் IDA 2.6 % உயர்வு...!
இத்துடன் மொத்த IDA 
(124.3% + 2.6%) 126.9% 
சதவீதம் ஆகும்.

30-12-17 போராட்டம் ஒத்திவைப்பு.


BSNL  செலவுக்கு இம் மாத பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யபடவில்லை.
நிதிச் செயலரும் தொகை அறவே இல்லை என்று சொன்னதாக நமது GM அவர்கள் CGM அலுவலகத்தில் இருந்து பெற்ற செய்தியைக் கூறினார்.  
இதற்கிடையில் மாநிலச் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

எனவே, 30-12-17 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.

03.01.2018 அன்று
சென்னையில் NFTE மற்றும் TMTCLU  
இரு மாநிலச் சங்கங்களும் 
இணைந்து நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 
அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன்!

அன்புடன்,
கே. கிள்ளிவளவன்.


Thursday, December 28, 2017

நாடாளுமன்றத்தில் 
நமது துறை ஸ்டேட் மினிஸ்டர் 
மனோஜ் சின்கா  
கொடுத்த பதிலில் ஒரு சில:

                                2016 - 17 நிலவரம்.

                                நட்டம்                       கடன் 

BSNL         4786 கோடி       3813 கோடி 

MTNL        2970 கோடி     15160 கோடி 

AIRTEL                            91480 கோடி 
( கடனை கட்டுமா இல்ல புஸ்க்காவா! )

Wednesday, December 27, 2017

இடைக்கால ஏற்பாடு.

ஒப்பந்தக்காரர் திரு. சாமிஅய்யா அவர்கள் 
இடைக்காலமாக ரூபாய் 2000 அளிப்பதாக கூறியுள்ளார். 
மற்ற ஒப்பந்ததாரர்களிடமும் கேட்டிருக்கிறோம். 
இந்த காரியத்தில் நமது GM அவர்களும், 
தோழர். கிள்ளிவளவன் அவர்களும் 
முயற்சித்து வருகிறார்கள். 
நாளைக்குள்(28-12-17) கிடைக்க 
முயற்சிக்கப்பட்டு வருகிறது.

தோழமையுடன்,
D. கலைச்செல்வன்,
மாவட்டச் செயலர், TMTCLU,
தஞ்சை. 
NFTE  TMTCLU 
தஞ்சை மாவட்டம்.
====================================
இன்றைய தேதி வரை ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் வழங்கப் படாததைக் கண்டித்து மாவட்டச் செயலர்களின்
இணைந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 
=============================
நாள்: 30-12-2017 சனி காலை 10 மணி 
இடம்: தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம்.
==============================
உண்ணாவிரதம் இருப்போர்:

தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள் 
மாவட்டச் செயலர், NFTE.

தோழர். D. கலைச்செல்வன் அவர்கள்
மாவட்டச் செயலர், TMTCLU. 
-------------------------------------------------------
2017 நமக்கு பல அனுபவங்களைத் 
தந்திருக்கிறது.
அதில் கசப்பான அனுபவம் 
குறைந்த சம்பளம் பெறும் 
நமது ஒப்பந்தத் தொழிலாளிக்கு 
இம் மாதச் சம்பளம் 
இன்னும் வரவில்லை.

மாவட்டத்தில் பிரச்சினையில்லை 
மாநில மையத்திலும்  பிரச்சினையில்லை 
மத்தியில்தான் குழப்பம்.

மாதம் முடியப் போகிறது!
ஆண்டும் முடியப் போகிறது.
என்ன செய்வான் தொழிலாளி.
கையைப் பிசைந்து நிற்கும்  காட்சி 
காணச் சகியவில்லை.  

என்ன செய்வது!
 ஏதாவது செய்ய வேண்டும்.
முதல் கட்டமாக 
உடலை வருத்திக் கொள்வோம். 
உண்ணாவிரதம் மூலம் 
எச்சரிக்கைப் படுத்துவோம்.

தூங்கும் நிர்வாகத்திற்கு 
  துவங்கும் பதினெட்டில் 
பதிலையும் தருவோம்,
பாடமும் புகட்டுவோம்.
===========================
வாழ்த்துக்கள் தோழர்களே!
K. கிள்ளிவளவன்  -  D. கலைச்செல்வன்
மாவட்டச் செயலர்கள். 
NFTE  மற்றும் TMTCLU 


Tuesday, December 26, 2017


தாட்சாயிணி
ஆர். பட்டாபிராமன் 

இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலித் உறுப்பினர்.

தாட்சாயிணி வேலாயுதம் இன்றுள்ள இளையதலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டியபெயர். விடுதலை இந்தியாவின் கனவுகள் குறித்து பெருமித பார்வை கொண்ட ஒருவர்.இந்தியாவின் அரசியல் சட்ட நிர்ணயஅசெம்பிளிக்கு சென்ற 15 பெண்களுள் ஒருவர்.அங்கு இடம் பெற்ற ஒரே தலித்(அரிசன)பெண்மணியும் அவர்தான்என்பது வரலாற்றுமுக்கியம் வாய்ந்த அம்சம். தற்காலிகநாடாளுமன்ற அவையில் அவர் 1946 முதல் 1952வரை சிறப்பாக செயல்பட்டார். அவர் அரசியல்நிர்ணய சபைக்கு செல்லும் போது  அவரின் வயது 34  மட்டுமே. சிறு வயதிலேயே பெரும் பொறுப்புகளுக்கு தயாராகும் பயிற்சியும் பக்குவமும்  குடும்ப சூழலில் , சமுக சூழலில் கிடைக்கப்பெற்றது.

கேரளா சமூகத்தில் நிலவிவந்த சாதியஏற்றத்தாழ்வுகளின் சூழலில்தான் புலையர்சமூகத்தில் தாட்சாயிணி முலவக்காடு கிராமம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 1912ல் பிறந்தார்.  தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் பெரும் சமுககேட்டிற்கு ஆளாக்கப்பட்டிருந்த சூழல்மேலாடைகூட போடமுடியாது. தெருவில் செல்லமுடியாது.நிமிர்ந்து  பார்த்துவிட முடியாது. ஆபரணங்கள்அணிந்து செல்லவும் தடையிருந்தது. அப்போது சாதியக் கொடுமைகளை எதிர்த்து நாராயணகுரு, அய்யங்காளி இயக்கங்கள்வலுப்பெற்றசூழல் நிலவியது.
அய்யங்காளி 1904லேயே புலையர்களுக்கானபள்ளியை தொடங்கியிருந்தார். அய்யங்காளியும்கற்பி, ஒன்றுசேர் என்கிற முழக்கத்தை வைத்தார். தாட்சாயிணி தந்தை வேலுத குஞ்சன் ஆசிரியராக இருந்தவர். அவரின் சகோதரர்கிருஷ்ணதி ஆசான் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக இருந்தார்.. குஞ்சன்வீட்டில் புலைய குடும்பத்து சிறுவர்களுக்குபாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்குசமஸ்கிருதம் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டது.கிருஷ்ணதி தங்களுக்கு தடையாக வைக்கப்பட்டிருந்த சங்கீதம், சமஸ்கிருதம்ஆகியவற்றை கற்றார். புலையன் மகாசபையில்அனைவரும் கூடுவதற்கு ஏற்பாடு, ஆபரணங்கள்அணிவது, தலைமுடி வெட்டிக்கொள்ள ஏற்பாடு,சாதி எதிர்ப்பு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.  முலவக்காடு பகுதியில் உள்ளபுனித ஜான் தேவாலயம் கட்ட கிருஷ்ணாதி நிலம்கொடுத்து உதவினார்
கிருஷ்ணாதி ஆசான், கே பி வல்லான் ஆகியோர்1913ல் புலையர் மகாசபை அமைத்துஉரிமைகளுக்காக போராடத்துவங்கினர்.தாட்சாயிணி சமுக கட்டுக்களை மீறி மேலாடைஅணிந்தார். பள்ளிப்படிப்பு, கல்லூரி எனசென்றார். பட்டப்படிப்பு முடித்த முதல் தலித்பெண்மணி என்கிற வரலாற்றையும் அவர் தன்சாதனையில் சேர்த்துக்கொண்டார். கொச்சிஅரசாங்கத்தின் கல்வித்தொகை மூலம்இச்சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது.சென்னை பல்கலையில்தான் அவர் பட்டம்பெற்றார்.
கொச்சின் அரசாங்க பள்ளியில் தாட்சாயிணி1935-42வரை  திருச்சூர் பெரிகோதிகராஉயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகபணியாற்றினார். அங்கும் தீண்டாமையின்கேடுகளை உணர்ந்தார். தன் குடும்ப அரசியல்பின்புலம் மீது பெருமிதம் கொண்டு  கொச்சிசட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சென்னைராஜதானி சார்பிலான அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினர்களில் ஒருவராக அங்குஇடம் பெற்றார்.
தாட்சாயிணி காந்தி, அம்பேத்கார் என்கிற இருஆளுமைகளின் செல்வாக்கில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். சட்டமுன்வரைவுஎன்பதை தாண்டி அரசியல் சட்ட நிர்ணயசபைசிந்திக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.வாழ்க்கை குறித்த புதிய பார்வையை அரசியல்நிர்ணயசபை நாட்டிற்கு வழங்கவேண்டும்என்றார். தீண்டாமையை சட்டவிரோதமானதுஎன்பதுடன் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்டஅம்மக்களுக்கு நெறிசார்ந்த பாதுகாப்பைவழங்க உறுதி செய்யப்பட வேண்டியதன்அவசியத்தை அவர் வற்புறுத்தினார். மற்றஅனைவரும் உணரத்தகுந்த சுதந்திர உணர்வைதலித்களும் பெறவைக்க உதவவேண்டும்என்றார்.
நேரு பேசியவுடன் தாட்சாயிணி அரசியல் சட்ட நிர்ணய சபையில் பண்டைய இந்தியாவின்லிச்சாவி குடியரசு குறித்து  டிசம்பர் 19, 1946அன்று விவாதத்தில் எடுத்துரைத்தார்.கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனபார்வையும் அவ்வுரையில் காணப்படுகிறது.அதே நேரத்தில் சோசலிஸ்ட் குடியரசின்மூலம்தான் தலித்களின் நலன்களைகாக்கமுடியும் என்கிற தனது நம்பிக்கையும் அவர்தெரிவிக்க தவறவில்லை.
அதேபோல் சர்தார் வல்லபாய்உரையாற்றியவுடன் சிறுபான்மையினர் குறித்ததனது பார்வையை அவர் ஆகஸ்ட் 28, 1947 அன்றுநடந்த விவாதத்தில் முன்வைத்தார். தனித்தொகுதி, இட ஒதுக்கீடுஎன்பவற்றையெல்லாம் புறந்தள்ளிஉரையாற்றினார். இந்தியாவில் தாழ்த்தப்பட்டமக்கள் பொருளாதார அடிமைகளாகஇருக்கும்வரை தனித்தொகுதி,இணைத்தொகுதி, கூடுதல் சதவீத   ஒதுக்கீடுஇடங்கள் என்ற முறையெல்லாம் பயனளிக்காதுஎன தனது உரையில் அவர் கருத்துக்களைவெளிப்படுத்தினார். அனைவருக்கும் வாய்ப்புகள்நிறைந்த பொதுவான அடையாளம்தான்இந்தியாவின் எதிர்காலத்திற்கு உகந்தது எனஅவர் கருதினார். இல்லையெனில்பிரிட்டிஷ்காரர்கள் விட்டு செல்லும் சமூகமோதல்கள் அதிகரிக்கும் களமாக இந்தியாமாறும் என்கிற எச்சரிக்கை அவர் உரையில்இருந்தது.
அதேபோல்  அவர் நவம்பர் 8 1949ல் அரசியல் சட்டநகல் குறித்து கடுமையான விமர்சனத்தைஎழுப்பினார். கொள்கை கோட்பாடுகளற்றதரிசுநிலமாக நகல் இருக்கிறது என்ற காட்டமானவார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. .கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசில்குவித்துக்கொள்வதை அவர் ஏற்கவில்லை.பிரிட்டிஷ் 1935 சட்டத்தில் சில மாற்றங்களைமட்டும் செய்து ஏற்பதுபோல் இருக்கிறது என்றார்.கவர்னர் என்கிற பதவி தொடர்வதை சாடினார்.அவசியம் எனில் 1952 பொதுத்தேர்தலில் மக்கள்வாக்கிற்குவிட்டு பின்னர்கூட முடிவெடுக்கலாம்என்றார் குடியரசு ஆவதற்கான ஜனநாயகஏற்பாக கூட அது இருக்கும் என்றார்.
தீண்டாமை குறித்து ஷரத்து இல்லாமல் இந்தியஅரசியல் சட்டம் இருக்க முடியாது என்கிறகருத்தை அழுத்தமாக தன் உரையில்முன்வைத்தவர் தாட்சாயிணி. அவர் கல்லூரிகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை அவர் உரையில் எடுத்துரைத்தார். தீண்டாமை எதிர்ப்புஎனக்கோரி நண்பர்கள் சிலர் அவரிடம்நன்கொடை கேட்டபோது, இதற்குகாரணமானவர்களிடம் மட்டும்கேட்டுப்பெறுங்கள். அதனால் பாதிக்கப்பட்டஎன்போன்றவர்களால் தர இயலாது எனகாரணம் சொல்லி அவர் மறுத்தார்.. தனது பள்ளி,கல்லூரி காலங்களில் பொதுவிழாக்களில்பங்கேற்கமுடியாமல் தான் கட்டாயமாக ஒதுங்கிநின்ற அவலத்தை அவர் சுட்டிக்கட்டினார்.
தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்கிறதீர்மானத்தை அவையில் நிறைவேற்றவேண்டும்என தாட்சாயிணி கேட்டபோது பண்டிதநேரு இதுகாங்கிரஸ் காரியகமிட்டியல்ல தீர்மானம்போடுவதற்கு என்றார். ஆனால் கண்டிப்பாகஇப்பிரச்சனை மீதான அணுகுமுறையைமேற்கொள்ளலாம் என்ற உறுதியை அவர் தரவேண்டியிருந்தது.  ஆனாலும் மீண்டும் அழுத்தம் கொடுத்து  தனது கோரிக்கையையை அவர் வலியுறுத்தினார்ர். இச்சபையில்நிறைவேற்றப்படும் பிரகடனம் பயன்விளவிப்பதாக அமையும் என மிகத்துணிச்சலாகதன் கருத்துக்களை முன்வைத்தார் தாட்சாயிணி.தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றினால்மட்டும்போதாது, நடைமுறையில் நாம் எப்படிநடந்துகொள்ளப்போகிறோம் என்பதைபொறுத்துதான் இந்தியா உலக நாடுகளில்தலைநிமிர்ந்து நடக்கமுடியும் என்றார் அவர்.
லிச்சாவி குடியர்சில் குடிமகன் ஒவ்வொருவரும்ராஜா என்றே அழைக்கப்பட்டனர். இன்று இடர்களுக்கு ஆளாகி பரிதவிக்கும் தலித்கள்போன்றவர் நாளை இந்தியாவில் ஆள்வோர்என்கிற நம்பிக்கையை விடுதலை இந்தியாதரவேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் எந்தபிரிவினையும் கோரவேண்டாம் என  ஹரிஜனஉறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்அவர். கிறிஸ்துவம் , முஸ்லீம், சீக்கியர்,அரிஜனங்கள் என எவ்வகையிலும்பிரிவினைவாதமற்ற தேசியம் உருவாக வேண்டும் என்கிற விழைவை அவர் தனதுஉரையில்  தெரிவித்தார். சர்ச்சில்அரிஜனங்களின் பாதுகாப்பிற்கு பிரிட்டிஷ்காரணம் என பீற்றுகிறார். அவர்கள் என்னசெய்தார்கள் என்கிற கேள்வியை தாட்சாயிணிஅவையில் எழுப்பினார். தீண்டாமை ஒழிக்கசட்டம் கொணர்ந்தார்களா என வினவினார்.ஏழுகோடி தாழ்த்தப்பட்டவர்களை சர்ச்சில்இங்கிலாந்து அழைத்துப்போய் எந்த பாதுகாப்பும்நல்கிவிடமுடியாது. எங்களை மைனாரிட்டி எனபேசுவதை ஏற்கமுடியாது என்றார்.அரிசனர்களும் மற்றவர்களும் இந்தியர்களாகஇங்குதான் வாழ்ந்தாக வேண்டும். அதற்குநெறிசார்ந்த பாதுகாப்புகள் உத்திரவாதமாகவேண்டும். எங்களுக்கு சுதந்திரம்இந்தியர்களிடமிருந்துதான் கிடைக்கவேண்டுமேதவிர பிரிட்டிஷாரிடமிருந்தல்ல என்றார்.
அதேபோல் முஸ்லீம் பிரதேசங்களில்நிறுத்தப்படும் இந்து வேட்பாளர்களில் ஏன் தலித்வேட்பாளர் ஒருவர் கூட இல்லை என்கிறகேள்வியை அவர் காங்கிரசாரிடம் எழுப்பினார்.தங்களை இந்துக்களாக கருதவில்லையாஎன்கிற கேள்வியை அவர் தொடுத்தார்.அரிசனங்கள் மற்றும் பிற இடர்ப்படும்சமூகத்தினரகளை கட்டாய உழைப்பிலிருந்துவிடுபட வைப்பது பாசிச சமுதாயவடிவங்கொண்ட இந்திய நாட்டில் பொருளாதாரபுரட்சியாக அமையும் என்றார் தாட்சாயிணி.மத்திய அரசின் நேரடி நிர்வாக பகுதிகள் என்கிறமுறையையும் அவர் பிரிட்டிஷ் மாடல் எனசாடினார். கவர்னர்பதவி என்பது தேவையற்றது என்கிற கருத்து அவரிடம் இருந்தது.
தலித் தலைவர்களுல் ஒருவரான வேலாயுதத்தைஅவர் காந்தி, கஸ்தூரிபாய் முன்னிலையில்வார்தா ஆசிரமத்தில் மணம்புரிந்துகொண்டார்.வேலாயுதமும் தற்காலிக நாளுமன்றத்திற்குதேர்ந்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் கருத்து மாறுபாடு கொண்டு அவர் காங்கிரசிலிருந்துவிலகினார். 1952 தேர்தலில் வேலாயுதம்கொல்லம்- மாவ்லிகரா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். விடுதலைக்குப்பின்னர் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டுவந்தார் தாட்சாயிணி. பாரதிய மகிளாஜாக்ரதி பரிஷத்  என்கிற அமைப்பைத் துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார்.
( கே ஆர் நாரயணன் திருமண வரவேற்பில்)
1971ல் அடூர் தொகுதியில் பார்கவி சி பி அய்,குஞ்சாச்சன் சி பி எம் எதிர்த்து தாட்சாயிணி சுயேட்சையாக நின்று தோல்வியை அடைந்தார்.அப்போது அத்தேர்தலில் சி பி அய் பார்கவி 65 சதவாக்குகளைப் பெற்று வென்றார். சி பி எம் 30 சதவாக்குகளை பெற்றது. அவரின் உறவினர் கேஆர் நாரயணன் இந்தியாவின்  தலித் பகுதியிலிருந்து வந்த முதல் குடியரசுத்தலைவர்என்ற வரலாற்றை உருவாக்கினார்.  தாட்சாயிணி ஜூலை 20, 1978ல் இயற்கை எய்தினார். இந்திய விடுதலை கொண்டாட்டங்களில் நிற்க வேண்டிய பெயர்களில் தாட்சாயிணியும் ஒன்றாக நிலைபெறட்டும்.

தோழர். நல்லகண்ணு. 
அவர்களுக்கு இன்று 93 வயது.
நமது தேசியத் தலைவரை 
நாமும் வணங்கி வாழ்த்துவோம்!

அவரது பிறந்த நாளான இன்று, 
சாதி பற்றிய பிரச்சினைகளில் 
அவர் அணுகிய முறைகளை 
மறு வாசிப்புக்காக.

இன்றைக்குத் தமிழர்களையெல்லாம் கூட்டிவைத்துக் கொண்டு, தமிழன் மானங்கெட்டவன், சொரணையற்றவன், அறிவுகெட்ட அற்பன்... என்று எவ்வளவு கடுமையான சொற்களால் தாக்கிப் பேசினாலும் சிரித்து ரசித்துக் கொண்டிருப்பான். ஆனால் - ஒரு சாதியைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டால்போதும் "சுயமயாதை' முறுக்கிக் கொண்டு எழுகிறது. ஆவேசம் ஆட்டிப் படைக்கிறது. ஊரே பற்றி எகிறது. இன்றையத் தமிழன் மானுடம் மறந்த சாதிக்காரனாய் வந்து நிற்கிறான். யார் என்ன சாதி என்று அறிந்துகொள்வதில் ஆர்வங்கொண்டவனாய் இருக்கிறான். இந்த அவலம் மாறவேண்டும். தமிழன் என்பதேகூட மொழி வகைப்பட்ட ஒரு தேசிய அடையாளமே தவிர மானுட எல்லையைத் தொடும் வலிமை அவனுக்கு வரவேண்டும்...'' என்று தோழர் நல்லகண்ணு பேசினார்.

சாதிப் பிவினை கூடாது. சாதியால் ஒரு மனிதனை உயர்ந்தவனாகவும், மற்றொரு மனிதனைச் சாதியின் பெயரால் தீண்டத் தகாதவனாகவும் கருதும் கேவலம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிடையாது. சாதிக்கொரு நீதி வகுத்தோர் சமூகத்தின் முன்னே குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டும் - என்கிற உயர்ந்த குறிக்கோளுடன் உருவானதுதான் சமூக நீதிக் கோட்பாடு. இதிலே ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்புக்காகப் போராடும் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் மாறுபாடு கொண்டவை அல்ல. தோழர் நல்லகண்ணு அந்தக் குறிக்கோளுடன்தான் நாத்திகம் விழாவில் - சாதிய உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தமிழன் குறித்துத் தமது வேதனையை வெளிப்படுத்தினார்.

ஆனால் சாதிப் பிவினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தோழர் நல்லகண்ணு போன்ற முற்போக்காளர்கள், கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை ஏன் ஆதக்கிறார்கள்.

உண்மையில் இதுவும், பிறப்பால் தாழ்த்தப்பட்டோர், ஒதுக்கப் பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்று சாதியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை மேலே ஏறு, முன்னேறு என்று கைதூக்கி விடும் முயற்சிகளில் ஒன்றுதான். சரியாகச் சொல்வதானால், மனுதர்ம ஏற்பாட்டை, மனுதர்ம வாளைக்கொண்டே வீழ்த்தும் முயற்சிதான் - இடஒதுக்கீட்டுக் கொள்கை.

Monday, December 25, 2017

பெரியார்
பகுத்தறிவுப் பகலவனை பிரிந்த நாள். 24-12-1973
டிசம்பர் 24. இன்று, தந்தை பெரியாரின் 44 வது நினைவு நாள்

            தமிழ்நாட்டின் சிந்தனை முறையை மாற்றியதில் பெரியாருக்கு மிகப் 
பெரியபங்குண்டு. சாதிய, பெண்ணிய மதவாத கருத்துகளின் அடிப்படைகளை எதிர்த்து துணிவோடு கேள்விகளை எழுப்பியவர்
       நவீன இந்தியாவின் உயிர்ப்புள்ள மாற்றுச் சிந்தனையாளர். ஜாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட நினைக்கிறவர்களுக்கு, பெரியாரே மிகச் சிறந்த வழிகாட்டி. பவுத்தத்தை அம்பேத்கர் சமயமாக அறிவித்தார். பெரியார் தன் பகுத்தறிவு பார்வையில் வாழும் வழிமுறையாக எடுத்துரைத்தார். பெரியார் ஒரு லெஜெண்ட். அம்பேத்கர் ஒரு லெஜெண்ட். பெரியாரும் அம்பேத்கரும் மார்க்ஸூம் பேசியது மானுட விடுதலையை நோக்கியது. அதை எடுத்துக் கொண்டே நாம் ஒட வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நம்மை அடையாளம் காட்டிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறோம். இந்தத் தலைவர்களின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்காமல், புரொஃபைல் படங்களிலும், சட்டைகளிலும், பேனர்களிலும் அவர்களது புகைப்படத்தை வைத்துக் கொள்வதைப் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது அவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதே!







44 மனிதர்கள்  எரிக்கப்பட்ட நாள்.
25-12-1968
கீழவெண்மணித் தீ !
சாதித் தளையறுத்து 
தமிழர் இணையும் காலத்தில் 
அணையும் ஊழித்தீ!

🔥
வெண்மணி வெப்பம்!
செருப்பணியவும், தோளில் துண்டுபோடவும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது இந்தியாவில்/தமிழகத்தில்!

வெள்ளையனிடம் சுதந்திரம் பெற காந்தியால் கத்தியின்றி ரத்தமின்றி போராட முடிந்தது.

ஆனால் சுயமரியாதைக்காக, கூலி உயர்வுக்காக ஏழைகள் எரிந்த கதை உலகசரித்திரத்தில் உண்டா! தெரியவில்லை.

அண்டை நாட்டுக்காரரிடம் எல்லைக்காகவோ, தண்ணீருக்காகவோ ஒப்பந்தம் போடுவதைக் கேள்விப்பட்டிருப்போம். சொந்த ஊர் ஆண்டைகளிடம் அடிமைகளாக்கப்பட்ட கூலிகள் போட்டுக்கொண்ட 'மன்னார்குடி ஒப்பந்ததத்தை' நம் வரலாற்றுப் புத்தகங்க
ளெதிலும் பாடமாகப் படித்ததில்லை.
பகத்சிங், சே தெரிந்த அளவு நம்மில் எத்தனை பேருக்கு களப்பால் குப்பு, சிக்கல் பக்கிரிசாமிகளைத் தெரியும். 

வறுமை போக்கவும், இழிவு நீக்கவும் செங்கொடி தூக்கி போராடிய நிகழ்வுகள் சுதந்திர போராட்டத்தை விடவும் வீரம் செறிந்தவை.அதன் இழப்புகளோ காலத்தால் துடைக்க முடியா கறைகளைக் கொண்டவை.


ஆம்..தோழர்களே வெண்மணியில் 
நிகழ்ந்தது உள்ளங்கையளவு நெல்மணிகளை உயர்த்திக் கேட்ட கூலிப்போராட்டம் மட்டுமன்று.  அப்படியிருந்தால் ஆண்டைகள் படியளந்திருப்பார்கள்.   
அவர்கள் கேட்டது சுயமரியாதை உணர்விலெழுந்த விடுதலை. 

எங்கள் தேசம் விடுதலை அடைந்த பின்னும் நாங்கள் மட்டும் அடிமைகளாக இருக்கவேண்டுமா? என்கிற கேள்வியிலிருந்த நியாயத்துக்கு பதிலளிக்க  விரும்பாது குடிசைகளை எரித்தார்கள், சாதி காப்பாற்றும் ஆண்டைகள்!


சாணிப்பால் சவுக்கடி என எத்தனையோ துயரடைந்த எம் தமிழர்கள்  துடிதுடித்துச்  செத்தார்கள்! 


20 பெண்கள்
19 சிறுவர்கள்
 2 நிறைமாத கர்ப்பிணிகள்
 5ஆண்கள்
முதியவர் ஒருவர் 

என 44 உயிர்களை வெண்மணியில்
சாதியின் தீ நாக்கு தின்று செரித்தது! 

கீழவெண்மணித் தீ தமிழர்களின் சாபம். 

அது ஒவ்வோரு தமிழனின் மனசாட்சியையும் சுட்டுக்கொண்டே இருக்கும். சாதித் தளையறுத்து தமிழர் இணையும் காலத்தில் அணையும் ஊழித்தீ அது! சக மனிதனை, நேயத்தால்  அணைத்துக் கொள்ள,
தமிழரெலாம் பழகும்போதே அணையும்,
கனன்று கொண்டிருக்கிற வெண்மணித்  தீ!
பழகுவாரா எம் தமிழர்?

Saturday, December 23, 2017

1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!


1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.
அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.
அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.
இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

ஊதிப் பெருக்கப்பட்ட எண்!

இந்த மாய எண்ணின் சூத்திரதாரியான தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தன்னுடைய அறிக்கையில், ‘2008 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று குறிப்பிட்ட தொகையிலேயே நான்கு விதமான அனுமானங்கள் இருந்தன. ரூ.67,364 கோடி, ரூ.57,666 கோடி, ரூ. 69,626 கோடி, ரூ.1.76 லட்சம் கோடி என்று நான்கு அனுமானத் தொகைகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, மத்தியப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை, ‘ரூ.35,000 கோடி இழப்பு’ என்றது. அதற்கு முன்பாக விசாரித்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, ‘ரூ.22,000 கோடி’ என்றது. ஆக, இழப்பு மதிப்பு என்று ஒன்றுக்கு ஒன்று முரணாக ஏகப்பட்ட எண்கள்.
இதில் ‘இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு’ என்ற அனுமானத்துக்கான அடிப்படையாக வினோத் ராய் முன்வைத்தது, 2010-ல் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின்போது அரசுக்குக் கிடைத்த ரூ. 1 லட்சம் கோடி தொகையுடனான ஒப்பீடு! ஏனென்றால், 2008-ல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது அரசுக்கு ரூ.10,772 கோடி மட்டுமே கிடைத்தது; அது மிகக் குறைவானது என்றார் வினோத் ராய். இந்த அடிப்படையிலேயே ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஏலம் நடத்த 2012-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலம் போகும் என்று பேசியவர்களை எனக்குத் தெரியும். அரசாங்கம் ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.9407 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆக, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பது அப்போதே அப்பட்டமாகிவிட்டது.
பின்னாளில் இதுகுறித்து ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார் வினோத் ராய். “நிச்சயமாக, ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தின் மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சுயசரிதையில் எழுதினார். மேலும், “அவ்வளவு பெரிய தொகை என்பதாலேயே பொதுக் கணக்குக் குழு அதை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது” என்றும் ஒரு பேட்டியில் சொன்னார். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் இப்படி மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார் வினோத் ராய். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முதலில், ‘ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு’ என்றவர் பிறகு ‘ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு’ என்றார்.
அடிப்படையில், நாட்டின் தலைமைக் கணக்காயர் என்ற பதவியை, கணக்காயம் எனும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டார் வினோத் ராய். அதன் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கிவிட்டார். அவரால் விளைந்த ஒரே நன்மை என்றால், நம்பகத்தன்மை மிக்க ஒரு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சொன்னால், - அவர் என்ன சொன்னாலும் - அதைக் கேட்டுக்கொள்ளும் சூழலில்தான் இந்நாட்டின் அத்தனை அமைப்புகளும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும்தான்! இது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

எல்லா நீதிகளையும் வீட்டுக்கு
அனுப்பிய ஊழல் விவாதம்!

உண்மையில், சமகால இந்திய அரசியலின் உரையாடல் போக்கையே வினோத் ராயின் மாய எண் பெரிய அளவில் மாற்றியமைத்துவிட்டது. சமூக நீதி, மதச்சார்பின்மை, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் இப்படிக் கடந்த நூறாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரங்கின் பிரதான தளத்துக்கு மேலேறிவந்த எல்லா ஜனநாயக விழுமியங்களையும் வினோத் ராயின் மாய எண் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்திய அரசியல் விவாத களத்தின் ஆக முக்கியமான கதையாடலாக ஊழலை அது உருவாக்கியது. அரசியலை அளவிடுவதற்கான உச்ச மதிப்பீட்டுக் கருவியாக ஊழலை அது கட்டமைத்தது.
விளைவாக, இந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல சக்திகள் பின்தள்ளப்பட்டன. புதிய அரசியல் அலைக்கற்றை ஒன்று உருவானது. ‘ஊழல் ஒழிப்பு’ என்ற பெயரில் உருவெடுத்த அந்த அலைக்கற்றையானது தூய்மைவாதத்தோடும் தேசியத்தோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டது. தேசியத்தின் வண்ணத்தில் ஊழல் எதிர்ப்பைப் பேசும், ஊழல் எதிர்ப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் புதிய தேசியவாதிகளை மையம் நோக்கி அது நகர்த்தியது. ஒரு அண்ணா ஹசாரே அதன் துணை விளைவு, ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் அதன் துணை விளைவு, ஒரு பாபா ராம்தேவ் அதன் துணை விளைவு, ஒரு மோடி அதன் துணை விளைவு!
இந்தப் புதிய அரசியல் அலைக்கற்றையானது ஊழலை முன்னிறுத்தி ஏனைய எல்லா நியாயங்களையும் அழித்ததோடு, கடைசியில் அது எதை நியாயமாகப் பேசியதோ அந்த ஊழல் எதிர்ப்பிலும் ஓட்டை போட்டதுதான் மாய எண் ஏற்படுத்திய உச்ச சேதாரம்!
சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணிப் புலனாய்வு வார இதழ்களில் ஒன்றான ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோபாலுடன் ஊடகங்களின் சமகாலப் போக்கு தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்தக் கட்டுரையோடு பொருந்தக் கூடியது என்று நினைக்கிறேன். “முன்பெல்லாம் புலனாய்வு இதழ்களில் உள்ளூர் அளவில் அடிக்கடி லஞ்சம், ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளைக் காண முடியும். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதே என்ன காரணம்?” என்று கேட்டேன். நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு!”
நேற்றைக்கு ஆயிரம் லஞ்சங்களுக்கே பதற்றமான மக்களுக்கு ஏன் கோடி ஊழல்கள் இன்று சாதாரணம் ஆகிவிட்டன? நாடு செழித்து, சாமானியர்கள் கைகளிலும் கோடிகள் மலிந்துவிட்டதா?
வெவ்வேறு தருணங்களில் நானே பலர் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ஏன் சார், ஒண்ணேமுக்கா லட்சம் கோடிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா?”
ஆம், அலைக்கற்றை விவகாரம் ஊழல் விஷயத்தில் பொதுபுத்தியைக் கூர்மையாக்கவில்லை; மழுங்கடித்துவிட்டது. அலைக்கற்றை விவகாரம் பற்றியெரிந்த நாட்களில் என்னுடைய சகா ஒருவர் சொன்னார், “பொதுவாக, நம் நாட்டில் ஒரு திட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கான சாத்தியம் என்பது 10% முதல் 30% வரை. அப்படியென்றால், இங்கே ஊழல் நடந்ததாகக் கொண்டாலும், அதிகபட்சம் எவ்வளவு பணம் கை மாறியிருக்கும்? அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள்! ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!”
அப்படித்தான் ஆகிவிட்டது. இந்திய அரசியல் வர்க்கமானது வினோத் ராய் அனுமானமாக ‘இழப்பு’ என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை ‘ஊழல்’ என்று மொழிபெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும்விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ பணமாக வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. சாத்தியமே இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்துவிட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா; குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்றுவிட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை!
- சமஸ்,

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR