தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, April 14, 2014


இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, பாபா சாகேப் அம்பேத்கர்







                  

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14-ம் தேதி ராம்ஜி-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒருமுறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போல், வண்டியை கீழே கவிழ்த்து கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் மேல்சாதியின்ர் தொடமாட்டார்கள். 

பாடம் தொடர்பான கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற, உள்ளங்கையில் நீரை ஏந்தித்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பருகவேண்டும். இந்த மாணவர்கள் அமருவதற்கென ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். அவர்கள் வடமொழி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

அம்பேத்கரின் இயற்பெயர், பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பதாகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேகர் என்பதை மாற்றி, தனது குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரது பெயருடன் சேர்த்தார்.

1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த அம்பேத்கர், தனது கல்வியைச் தொடர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றர். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ. இளங்கலைப் பட்டதாரியானார்.

படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். 

பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயில ஏற்பாடு செய்தார். அவரதி இந்த உதவியின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையையும் அம்பேதகர் பெற்றார்.

உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி, தீண்டாமை ஒழிய பரோடா மன்னருடன் இணைந்து போராடினார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்த அவர், சிறந்த ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கினார்.

பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற போது 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வர்த்தகம்' என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், 'இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு' என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்' என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டி.எஸ்.சி. பட்டம் பெற்றார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று மிக தீவிரமாக போராடினார். 

1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்' என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை' தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதன் விளைவாக செப்டம்பர் 24, 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'புனா ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. 

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றி சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத்தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

சவீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அம்பேத்கர் 1948-ல் இருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954-ம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. 1955-ம் ஆண்டில் அவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதி முடித்த 3 நாட்களுக்கு பிறகு,டெல்லியிலுள்ள வீட்டில் 06-12-1956 தூக்கத்திலேயே அந்த மாமனிதரின் உயிர் பிரிந்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990-ல் இவருக்கு வழங்கப்பட்டது.2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராக பாபா சாகேப் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

’பாரத ரத்னா’ பாபா சாகேப் அம்பேத்கரின் 123-வது பிறந்த தினமான இன்று, ’அவர் முழுமூச்சாக எதிர்த்துப் போராடிய தீண்டாமை மற்றும் சாதி- மத பேதம் ஆகிய சமூக நோய்களை நாட்டை விட்டு விரட்டுவோம்’ என்று வீர சபதம் ஏற்போம்.

வெல்க பாரதம்! வளர்க தமிழகம்! 
அண்ணல் அம்பேத்கரின் பெரும்புகழ் வாழ்வாங்கு வாழ்க !!
 

1 comment:

  1. mk;Ngjfu; tho;ehnsy;yhk; vjpu;j;J Nghuhba ,e;J rdhjd nfhLikia mrq;fhky; mq;fPfupj;J vjw;nfLj;jhYk; ghu;g;gdu; tFj;J nfhLj;j fhyNeuk; gprfhky; fhupak; nra;J nfhz;L
    new;wpapNy ngupa ehkk; nghl;L vd ghu;g;gd kj rk;gpujhaq;fis jtwhky; filgpbj;J nfhz;Nl mk;Ngj;fupd; glj;jpw;F nfhQ;rk;$l ntl;fkpy;yhky; khiy NghLtJ vt;tsT mNahf;fpaj;jdk;.,jdhy;jhd;
    ,e;J kj nfhLq;Nfhyd; Nkhb $l khiy NghLfpwhd;.

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR