தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 15, 2017

என் வீடு: பொன்னீலனின் உலகம்
நாகர்கோவில் பக்கத்துல மணிக்கட்டிப்பொட்டல் கிராமத்துல இருக்குற என் வீட்டுக்குப் பல தலைமுறைகளைச் சுமந்த வரலாறு உண்டு. எங்க முப்பாட்டங்க 1846-ல் பனை ஓலையால் எங்க வீட்டைக் கட்டுனாங்க. இப்போ காங்கிரீட்டா மாறியிருக்கு. சாமித்தோப்பு வைகுண்டசாமிதான் இந்த வீடு கட்ட கால்நாட்டிருக்காரு.
என்னோட அப்பா சிவபொன்னீலவடிவு ஆசிரியரா இருந்தாங்க. அம்மா அழகியநாயகி ஏழாம் கிளாஸ் வரை படிச்சுருந்தாங்க. நான்தான் மூத்த பையன். எனக்கு அப்புறம் இரண்டு தம்பி, இரண்டு தங்கைகள். இந்த நாலு பேரும் சின்ன வயசுலயே டைபாய்டு, மஞ்சள் காமாலைன்னு இறந்துட்டாங்க. நாங்களும், பெரியப்பா சிவ.நீலபெருமாள் குடும்பமும் கூட்டுக் குடும்பமா இருந்தோம். வசதியான குடும்பம்தான். ஆனாலும் தானம், தர்மம் செஞ்சே கஷ்டத்துக்கு வந்துட்டோம். எங்க ஊர்ல முதன்முதலா அரசு உயர்நிலைப் பள்ளி கட்டுனாங்க. அதுக்கு 3 ஏக்கர் நிலம் தேவை. அப்பாவும் பெரியப்பாவும் சேர்ந்து இரண்டரை ஏக்கர் கொடுத்தாங்க.
என் பெரியப்பாதான் மொத்த குடும்பத்துக்கும் தலைவரா இருந்து கவனிச்சுகிட்டாரு. என்னோட 16 வயசுல பெரியப்பாவும், அடுத்த வருஷமே அப்பாவும் இறந்துட்டாங்க. எனக்குக்கூட டைபாய்டு காய்ச்சல் வந்து போராடிதான் காப்பாத்திருக்காங்க.
என்னோட இளம் வயசுலயே 6 இழப்புகளைப் பார்த்துட்டேன். இழப்புகளின் வழியே வளர்ந்தவன்தான் இந்த பொன்னீலன். இதையெல்லாம் என் அம்மாவும் அனுபவிச்சாங்க. எனக்கு ஆசிரியப் பணி கிடைத்த பின்பு, அம்மா தன்னோட வேதனைகளைச் சொல்ல வீட்டில் ஆள் இல்லையேன்னு புலம்பினாங்க. அம்மாவுக்குச் சின்ன வயசுல இருந்தே இலக்கிய ஆர்வம் அதிகம். அது எனக்குத் தெரிந்திருந்ததால் ‘காகிதம் வாங்கித்தருகிறேன். உங்கள் வேதனைகளை அதனிடம் சொல்லுங்கள்’ என்றேன். என் அம்மா அப்படி வேதனைகளைக் காகிதத்தில் கொட்டி உருப்பெற்றதுதான் ‘கவலை’ நாவல்.
பொன்னீலன்னு என் பெயர்கூட அப்பா பெயரின் ஒரு வடிவம்தான். அம்மா என்னை ‘அய்யாவு’ன்னு கூப்புடுவாங்க. ஊர்ல எனக்கு ‘சபாபதி’ன்னு பேரு. பள்ளிக்கூட ஆவணங்களில் அப்பா பேரோட சேர்த்து பொன்னீலன் ஸ்கண்டேஸ்வர பக்தவச்சலன்னு பேரு. பொன்னீலன்தான் நிலைச்சுருக்கு.
என் அப்பா காந்தியவாதி. பிரம்மசமாஜத்தில் ஈடுபாடு கொண்டவர். சமத்துவ சிந்தனையுடன் கூடிய, சைவ நெறியாளர். அப்பாவின் ஒழுக்கச் சிந்தனையும், அம்மாவின் இலக்கிய ஆர்வமும் ஒருசேரக் கிடைத்த சூழலில் வளர்ந்தேன். வீட்டில் அம்மா ராமாயணமும் மகாபாரதமும் படிப்பார். அதே நேரம் சுடலைமாடன் கதைகளும் வாசிப்பார். இது இன்னும் என்னைச் செழுமைப்படுத்தியது.
என் அம்மாவின் ஊரான ஈத்தாமொழியில் கிறிஸ்தவம் வேரூன்றிய தருணத்தில் இந்து பாடல்களோடு சேர்த்து, இயேசுவின் சிலுவைப் பாட்டையும் இஸ்லாமிய பாடல்களையும்கூட இதிகாசங்களைத் தொடர்ந்து விளக்கின் முன்பு இருந்து அம்மா பாடுவார். இதெல்லாம் சேர்ந்துதான் சர்வமத நல்லிணக்கச் சிந்தனையை எனக்குத் தந்தது. மாதம் ஒரு முறை வீட்டில் பூஜை நடக்கும். கோட்டாறிலிருந்து சாமியார் வீட்டுக்கு வந்து பஜனை பாடுவார். அதே நேரத்தில் எங்கள் வீட்டில் நடந்த இந்த தொடர்ச்சியான ஆன்மிக செயல்பாடுகள்தான் சமயம் சார்ந்த உணர்வுகளில் வெறுப்படையச் செய்து, என்னை வெளியே தள்ளியிருக்கும் என்றும் தோன்றுகிறது.
வீட்டில் தொடர் மரணங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவற்றின் காரணமாக இந்த வாழ்க்கை பொய்யானது, மாயை என்னும் சிந்தனை என் நெஞ்சில் ஏறிப்போனது. லெனினின் துணைவியார் குரூப்ஸ்கயாவின் புத்தகத்தைப் படித்துவிட்டு மார்க்ஸியம்தான் வாழ்வு எனத் தீர்மானித்தேன். மன இறுக்கத்துக்கு விடை கொடுத்துவிட்டு, ஒரு ஆசிரியராக மாணவர்களை எதிர்கொண்டேன்.
இப்போது இந்த வீட்டின் ஆணிவேர் என் மனைவி கனியம்மாள். ஆயிரம் விசயங்களை இவள் அன்புக்கு உதாரணமாய்ச் சொல்லிவிட முடியும். ஆரல்வாய்மொழி அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது வீட்டிலிருந்து ஏழு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும். என் மனைவி நான்கு மணிக்கெல்லாம் எழுந்து சமையல் செய்வாள். ஒரு நாள் அவளது அலறல் சத்தம் கேட்டது. பதறிப் போய் ஓடினேன். ஒன்றும் இல்லை என்று என்னை அனுப்பிவிட்டாள். நான் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் திரும்பினேன். என் மனைவி கிந்தி கிந்தி வருகிறாள். காலையில் சமைக்கும்போது அடுப்பிலிருந்து பானை சரிந்து மேலே விழுந்து, கொப்பளங்கள் வந்துவிட்டதை என் மூத்த மகள்தான் எனக்குச் சொன்னாள். இதைக் காலையிலேயே சொல்லியிருக்க வேண்டாமா என்று என் மனைவியிடம் கேட்டேன். “சொன்னா நீங்க வருத்தப்படுவீங்க. செஞ்சு கொடுத்ததைத் திருப்தியா சாப்பிடுவீங்களா?” என எதிர் கேள்வி கேட்டாள். இந்த அன்புதான் என் வீடு. இன்று வரை அவள் சமையலை நான் குறைசொன்னது இல்லை.
நெருக்கடிநிலை காலத்தில் எங்களுக்கு வேண்டப்பட்ட ஆறு தம்பிமார்கள்மீது பொய்வழக்கு போட்டு போலீஸார் தேடினார்கள். அவர்களை ஜாமீன் எடுக்கப் பணம் இல்லாமல் தவித்தேன். எதார்த்தமாக என் மனைவியிடம் “செத்துப்போன இரண்டு தம்பிமாரு இருந்திருந்தா இப்படித் தனிமைப்பட்டிருப்பேனா?”ன்னு கேட்டேன். “ஊர்லயும் உலகத்துலயும் எவ்வளவோ தம்பிகளைச் சம்பாதிச்சுட்டு நீங்களா இப்படிச் சொல்றீங்க”ன்னு கேட்டுட்டே பீரோவில் இருந்த அவளது நகைகளைத் தந்தாள். அதை அடகு வைத்து ஜாமீனில் எடுத்தேன்.
நெருக்கடிநிலை காலக்கட்டத்தை மையப்படுத்தியே ‘புதிய தரிசனங்கள்’ நாவல் எழுதினேன். அதனால் என் வேலையை இழக்கும் சூழல் ஏற்படும் என ஒரு பேச்சு வந்தது. “இந்த வேலையை விட்டால் மண்ணாங்கட்டியாப் போச்சு. நமக்கு இருக்கும் இடத்தில் வாழை விவசாயம் செஞ்சு பிழைச்சுக்கலாம்” என்றாள் என் மனைவி. மனைவி என்பதைத் தாண்டி தாய், தோழி என எந்த ரூபத்திலும் அவளை எடுத்துக்கொள்ளலாம்.
எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் அழகுநிலா, இளையவள் அனிதா. ரெண்டு பேருக்கும் திருமணம் முடிந்து இப்போ எங்களுக்குப் பேரப் பிள்ளைங்க இருக்காங்க. என் எழுத்துகளுக்கு எப்பவும் ஊக்கம் கொடுக்கிற சக்தியா என் குடும்பம் இருக்கு.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR