லஞ்சம், ஊழல், குற்றங்கள் எல்லாம் எங்குதான் இல்லை. உலகம் முழுதும் பரவியிருக்கிறது. என்ன! அது நம்ம நாட்டில் கொஞ்சம் ஓவர்! அவ்வளவுதான்!! என்று நியாயப்படுத்தப்பட்ட சூழலில்,
அப்போ, இதற்கு விடிவே கிடையாதா! தடுப்பதற்கு மாற்று வழிதான் என்ன? என்ற கேள்வி நல்லவர்கள் மத்தியில் பதைபதைத்து எழுந்தபோது, எங்கு தேடினும் அதற்கான பதிலோ, வழியோ தென்படவில்லையே ஏன்?
லஞ்சம், ஊழலை எதிர்த்து பெரிதும் அக்கறை கொள்பவர்கள் இடதுசாரிகள். ஆனால் அவர்களிடம் ஒன்றுபடும் அக்கறை, சகோதர கட்சிகளை, சங்கங்களை சகித்துக் கொள்ளும் தன்மை குறைந்து விட்டது. அங்கும், பதவி ஆசை பற்றிக்கொண்டு விட்டதோ!
இருப்பினும், மாற்றத்தைக் கொண்டு வர உழைப்பவர்கள், என்கின்ற அடிப்படையில் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதோடு, நாமெல்லாம் உதவிகரமாகவும் இருப்போம்!
காந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்கள் தனது பட்டினிப் போரை 4 தினங்கள் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். அந்த லோக்பால் மசோதாவின் நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு இறங்கி வரவில்லை. தேசம் முழுதும் ஆதரவு அலை எழுச்சியோடு எழுந்ததால் இன்றைக்கு அதை ஒப்புக் கொண்டுள்ளது.
இதை அமுலுக்கு கொண்டு வருவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது தொடர்ந்த ஆதரவும், அக்கறையுடனான பரப்புரையும்தான் அம் மசோதாவை வெற்றி பெறச் செய்யும். இம் மசோதா இக் கால கட்டத்தில் மிக மிக அவசியம் என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்தாக வேண்டும்!
இதை ஆதரித்து பேசுகின்ற அதே நேரத்தில், நம் நாட்டில் இது சாத்தியமில்லை, இதை சட்டம் போட்டெல்லாம் மாற்ற முடியாது. எவன் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்கிற அபஸ்வரங்களும் ஒலிக்க ஆரம்பிக்கும், அவைகளை சட்டை செய்யாதீர்கள்.
பொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் பலருக்கு இவ் விஷயங்களில் அக்கறை இருக்காது. இவர்களும் வேதாந்தம்தான் பேசுவார்கள். இன்னும் சிலர், அக்கறை காட்டுவார்கள், ஆனால் செயல்பட மாட்டார்கள்.
அப்போ யார்தான் இதில் அக்கறை காட்டுவார்கள்? என்று யோசிப்பதை விட யாரால் இவ் விஷயத்தில் பொறுப்பாக இருந்து செயல்பட முடியும் என்று யோசித்தால், நம்மைப் போன்ற நடுத்தர - தொழிலாளி வர்க்கத்தால் நிச்சயம் முடியும் என்பது புலனாகும். ஆனால், நடுத்தர வர்க்கம் சின்னஞ் சிறிய அல்லது சில்லறைத்தனமான ஊழல்களில் ஆட்படுகின்ற காரணத்தால், அவைகளின் போர்க்குணம் மழுங்கடிக்கப்படுகிறது.
எனவே, பெரும்பான்மையாகவும், தாங்கும் சக்தியும் உள்ள நம்மால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாடு இருக்கின்றபோது, நாம் அவைகளிலிருந்து விடுபடுவது நல்லதுதானே! இனி விடுபடத் துவங்குவோம்!!
நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்று நினைக்க வேண்டாம். அவர்களாலேயே முடியும்போது, நாம் ஏன் இந்த அற்பமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற எண்ணத்தை பலருக்கு இத் தன்மை தோற்றுவிக்கும்.
இந்த எண்ணத் தோன்றலே முதல் வெற்றி. இனி, அன்னா ஹசாரேயின் புதிய லோக்பால் மசோதா பற்றி எங்கும் விளக்கிப் பேசுவோம், பரப்புரைப்போம். பொது மக்கள் அறியும் வண்ணம் பல்வேறு வடிவங்களில் ஆதரவினைக் காட்டுவோம்.
வாழ்க! அன்னா ஹசாரே!!
தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.