தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 30, 2019

NFTE  -  TMTCLU, BSNLEU  -  TNTCWU 
AIBSNLEA மற்றும் SNEA - தஞ்சை மாவட்ட
சங்கங்கள் இணைந்து நடத்திய  மாபெரும் 
கண்டன மற்றும் ஆதரவு ஆர்ப்பாட்டம்.
==============================================================

இன்று மாலை 5 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர்
இணைப்பக வாயிலில் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 
2 மாதமாக சம்பளம் வராததைக் கண்டித்தும், 
கடந்த 10 நாட்களாக போராடும் ஆசிரியர்களுக்கு 
ஆதரவாகவும்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் நாடிமுத்து TMTCLU, 
சுப்பிரமணியன் TNTCWU  ஆகியோர் தலைமை தாங்கினர்.
NFTE சார்பாக தோழர் கிள்ளிவளவன் அவர்களும்,
BSNLEU சார்பாக தோழர் இருதயராஜ் அவர்களும்,
AIBSNLEA சார்பாக தோழர் பிரபாகரன், T.K. உதயன், முகிலன்   ஆகியோரும் 
SNEA சார்பாக தோழர். ராஜா பெரோஸ் அவர்களும் 
விளக்கவுரை ஆற்றினார். 

தோழர். சின்னப்பா கோரிக்கை முழக்கமிட்டார்.
தோழியர்  லைலாபானு அவர்கள் 
நீண்டதொரு சிறப்புரையை தந்தார்.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி கிளைகளிலிருந்து 
தோழர்கள் வேன் மூலமாக திரளாக வந்தனர். 
120 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கேற்ற 
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை தோழர். சின்னப்பா அவர்கள்
 நன்றியுரையாற்றி முடித்து வைத்தார். 







 
 



மாறாதவைகளைப் பற்றி கவலை எதற்கு தோழா!
மாற்றம் ஒன்றே நமது திறவுகோல்!!
=================================
சரியோ, தவறோ எல்லாம் நமக்குள்ளே! தொண்டர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்!  ஏனெனில் அவர்களுக்கு கிடைத்த விபரம் அப்படி! நாம்தான் அதை விளக்க வேண்டும் என்று பொறுத்துப் போவார் ஜெகன்.   நாமெல்லாம் ஜெகன் இல்லை. அதனால் நம்மிடம் பொறுமை இல்லை. 
இயக்கம், சித்தாந்தம் இதை தூக்கிப் பிடிப்பவர்கள், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கக் கூடாது.  எது சரி, எது தவறு என்பதை காலம் தீர்மானிக்கும். 

தோழர் மாரி, கடலூர் ஆனந்தன் இவர்களின் வசை பாடும்  சொல்லாடல்கள் அமைப்பிற்கு நல்லதல்ல. ஒன்று சொன்னால் அது பத்தாய் திரும்பும்போது குழாயடிச் சண்டையாக மாறிவிடும். (குழாயடிச் சண்டையில் பேசப்படும் வார்த்தைகள் மிகவும் அசிங்கமானவை என்று மக்களால் 

பேசப்படுகிறது.) எனவே, அதைத் தவிர்த்து விடுங்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ நம்மைப் பிளக்க நாமே இடம் கொடுத்து விட்டோம்.  இன்று அதில் மாற்றம் வரும்போது, தடுப்பணைக் கட்டும் போது கொஞ்சம் பொங்கத்தான் செய்யும். தானாய் அடங்கப்போகும் அதை தடுப்பது எதற்கு? தேவையில்லை தோழரே! 


எதை, எதையோ கற்பனை பண்ணிக்கொண்டு எங்கள் மாவட்டத்திலும் தான் போட்டிச் சங்கம் துவங்கினார்கள்.  என்ன ஆச்சு!  போட்டிச் சங்கம் துவக்குவதற்கு இங்கு எந்த முகாந்திரமும் இல்லை. RGB பிரச்சினையில் எதிர்பார்த்தது நடக்கவில்லை. பட்டாபி எப்போதும் போல.  இது ஒரு காரணமா!  
பட்டாபியைப் பிடிக்காதவர்களை எல்லாம் பார்த்து கரெக்ட் பண்ணாரு சென்னைத் தலைவர்.  சம்பந்தமில்லாமல் NFTCL துவக்கினார்கள்.  அதற்கு தஞ்சை டவுனையும், திருவாரூர் டவுனையும்          இரையாக்கினார்கள். இதனால் பாதிக்கப்பட்டது அந்தத் தோழர்கள்தான். எங்கள் மாவட்டத்தின் தலைவரும், பொருளருமே  போட்டிச் சங்கத்தில் இருந்ததினால், அவர்களாகவே  செயல்படாமல்  போனார்கள்.  மாவட்டச் செயல்பாடுகளில் எங்களை எதிர்த்து எவரும் நிற்க முடியாது.  ஏனென்றால், நாங்கள் செயல்படும் திறனும், துணிச்சலும், நேர்மையும் மிக்கவர்கள். 

இனி ஒரு பிரச்சினையும் இல்லை. தோழர்களும், தலைவர்களும் தாய்க் கழகத்திற்கு திரும்பத் தொடங்கி விட்டார்கள். நல்லதொரு மாற்றம்தான். 

தோல்வியைக் கண்டு துவளுவதும், வெற்றியைக் கண்டு துள்ளுவதும் 
கூடாது என்பதை உணர்வோம்!. 

இன்றைக்கும் மாவட்டம் முழுமையும் ஒப்பந்தத் தொழிலாளிக்காக போராடுபவர்கள், பெற்றுத் தருபவர்கள் நாங்களாகத்தான்  இருக்கிறோம் என்பதை தஞ்சை TMTCLU பெருமையாகக் கூறிக்கொள்ள முடியும்.  இல்லை, இல்லை நாங்கள்தான் என்று இங்கு போட்டிச் சங்கம் கூட கூறாது. 


வருகின்ற எங்களது மாவட்ட மாநாடு  அனைவரையும்  ஒன்றிணைத்த மாநாடாகத்தான் இருக்கும்.  அதைத் தவிர வேறு வழியில்லை!

அகில இந்திய அளவில் சங்கம் துவங்குவதற்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் சங்கம் துவங்கப்படும்போதுதான் ஒப்பந்தத் தொழிலாளியின் பிரச்சினையை  மேலும் தீவிரமாக கொண்டு செல்ல முடியும். காஷ்மீருக்கும், கன்னியாகுமரிக்கும்  இடையே உள்ள மாநிலங்களில் சங்கம் உருவாக்கப்பட வேண்டும். அது உயிர்துடிப்புடனும் இருக்க வேண்டும். இது நம்மால்தான் முடியும். 

எனவே, அன்பார்ந்த மஸ்தூர் தோழர்களே!  குறிப்பாக திருவாரூர் மற்றும் தஞ்சை டவுனில் பணியாற்றும் தோழர்களே!  இவ்வளவு நாட்களும் என்ன சாதித்தோம்! யார் சாதித்தார்கள் என்பதை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.  எனவே, இனியும் நீங்கள் காத்திருக்க வேண்டாம். உடனே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இனி உங்களோடும் நான்!


காலம் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரும். அதுவரை
காத்திருப்போம்! விழிப்போடு செயல்படுவோம்!

தோழமையுடன், 

கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.

Tuesday, January 29, 2019

NFTE  -  TMTCLU  & BSNLEU  -  TNTCWU 
தஞ்சை மாவட்டம் 

இணைந்து நடத்தும் மாபெரும் 
கண்டன மற்றும் ஆதரவு ஆர்ப்பாட்டம்.
=========================================================
அருமைத் தோழர்களே!
அனைவருக்கும் வணக்கம். மாநிலம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நான்கு மாதம், மூன்று மாதம், இரண்டு மாதம் என்றளவில் ஊதியம் கொடுக்கப்படவில்லை. நமது மாவட்டத்தில் 1 ம் தேதி வந்தால் 3 மாதம் நிலுவையாகப் போகிறது.  
நாம் மாநிலச்சங்கத்தின் துணையோடு மாநில நிர்வாகத்தையும், மத்திய சங்கத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பண்டு வரவில்லை என்ற பதில்தான் வருகிறது.  எனவே, வேறு வழியில்லாத சூழ்நிலையில் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்படுகின்றோம். 
எனவே, முதற்கட்டமாக 
30/1/2019 நாளை புதன்கிழமை மாலை 4 மணியளவில் 
தஞ்சை மேரிஸ் கார்னர் வாயிலில் 
கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

அதேபோல்,
இழந்து விட்ட ஓய்வூதிய உரிமைக்காக…
இழந்து விட்ட ஊதிய நிலுவைக்காக..
இழந்து போகும் உரிமைகளுக்காக
தொடர்ந்து தீரமுடன் போராடும்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 
போராட்டத்திற்கு ஆதரவாக....
ஆதரவு ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றோம்.


தலைமை: மாவட்டத் தலைவர்கள்
நாடிமுத்து TMTCLU
சுப்பிரமணியம் TNTCWU

விளக்கவுரை:  மாவட்டச் செயலாளர்கள்.
கிள்ளிவளவன் NFTE
இருதயராஜ் BSNLEU 

சிறப்புரை:
தோழியர். A. லைலாபானு, 
மாநில மகளிர் அணி செயலாளர்.

தோழர்கள் திரளாக பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.

Saturday, January 26, 2019


கூலியாட்களின் கூலியை மறுப்பவர்கள்…
அவர்களின் குருதியைக் குடிப்பவர்களாவார்கள்…

உழைப்புச்சுரண்டலைப் பற்றி
பைபிள் இப்படித்தான் கூறுகின்றது…

உலகம் முழுவதும் கூலியாட்களின்
குருதி குடிக்கப்படுகின்றது…
இதோ நம் கண் முன்னால்…
நமது துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள்
உழைப்புச்சுரண்டல் செய்யப்படுகின்றார்கள்…
நமது பகுதியில்….
இந்த சுரண்டலில் இருந்து அவர்களை விடுவிக்க..
அருமைத்தோழர் ஜெகன் அவர்கள்
இந்தியாவிலேயே முதன்முறையாக…
TMTCLU என்னும்  ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை
தமிழகத்தில் உருவாக்கினார்…

பல்வேறு உரிமைகளை நாம் வென்றெடுத்திருந்தாலும்…
ஒப்பந்த தொழிலாளர் விடியலுக்காக…
நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது…
இந்நிலையில் NFTE என்னும் பதாகையின் கீழ்
இரண்டு ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் இயங்குவது…
ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்றத்திற்கு
முட்டுக்கட்டையாக அமையும்…
எனவே பிரிந்து கிடக்கும்
ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களை
இணைப்பது என்ற முடிவை
NFTE தமிழ்மாநிலச்சங்கம் மேற்கொண்டது…

19/01/2019 அன்று சென்னையில்
NFTE தமிழ்மாநிலச்சங்க அலுவலகத்தில்…
தோழர் ஆர்.கே., அவர்கள் தலைமையில்…
ஒப்பந்த தொழிலாளர் சங்க
சிறப்பு மாநிலச்செயற்குழு வெகுசிறப்புடன் நடைபெற்றது.

TMTCLU பொதுச்செயலர் தோழர்.செல்வம் வரவேற்புரையாற்றினார்…
NFTE மாநிலச்செயலர் தோழர் நடராஜன் துவக்கவுரையாற்றினார்…
தோழர்கள் திருச்சி மில்டன்,
தஞ்சை கிள்ளிவளவன், காரைக்குடி மாரி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்…
சம்மேளனச்செயலர் தோழர். காமராஜ்,
சம்மேளன சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம்,
மாநில உதவிச்செயலர் தோழர் முரளி,
மூத்த தோழர் சேது ஆகியோர் சிறப்புரையாற்றினர்…
தோழர் ஆர்.கே. அவர்கள் நிறைவுரையாற்றினார்…

NFTCW என்னும் பெயரில் நாம் புதிதாய் பணியாற்றுவோம் என
தோழர் ஆர்.கே அவர்கள் அறிவித்த போது…
அரங்கம் அதிர்ந்தது…. மனம் குளிர்ந்தது….
விரைவில் தமிழகத்தில்
NFTCW அமைப்பு மாநாடு நடத்தப்படும்…
அதற்கான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில்
ஒப்பந்த தொழிலாளர் சங்கம்…
AITUC வழிகாட்டுதலில்…
NFTE தலைமையில்….
விரைவில் உருவாக்கப்படும்…
NFTE தலைமையிலான
ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
ஒப்பந்த தொழிலாளர் உரிமைகளை 
வென்றெடுக்கும்…
அவர்களை சங்கச்சுரண்டலில் இருந்தும்…
சகல சுரண்டல்களில் இருந்தும் விடுவிக்கும்…
அது வரை அமைதி காப்போம்…
உதவாக்கரை விமர்சனங்களை
ஒதுக்கித் தள்ளுவோம்…

வாளால் மரித்தவர்களை விட…
வாயால் மரித்தவர்களே அதிகம்
என்பது பைபிள் வசனம்….

நாம் மரிப்பதற்காகப் பிறந்தவர்கள் அல்ல..
மரித்தாலும்… உயிர்த்தெழுவோம்…
அதுவே நமது மரபு… பாரம்பரியம்… சிறப்பு…

நன்றி: 
காரைக்குடி வலைத்தளம்.


பாதுகாப்புத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போர்
ஜனவரி 23 முதல் மூன்று நாட்கள் – சி. ஸ்ரீகுமார்
           
            இந்திய பாதுகாப்புத்துறை கடும் நெருக்கடியில் உள்ளது.  அதுபோலவே அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.  நாட்டின் கேந்திரமான முக்கியத்துவமுடைய பாதுகாப்புத் தளவாடம் முதலிய உற்பத்தியையும் அதுதொடர்பான சேவை, ஆராய்ச்சி மற்றும் இதர தொழில் நடவடிக்கைகளையும் பெருமுதலாளிகள் – பகாசுரத் தனியார் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையளிக்கத் துணிந்து விட்டது இன்றைய மத்திய அரசு.  முக்கியமாக அம்பானிகள் மற்றும் அதானிகளின் மீதான அதன் பற்றும் பரிவும் பாசமும் தனியார் மோக ஆதரவும் வெட்கமறியாதது.
            அதற்கு இன்றைய அரசு முதலில் கூறிய காரணம், பாதுகாப்புத் தளவாடங்களின் மொத்த தேவையில் 70 சதவீதம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்; எனவே இறக்குமதியைக் குறைக்க உள்நாட்டிலே உற்பத்திச் செய்ய வேண்டும்; அதனைத் தனியார் நிறுவனக் குழுமங்கள், பன்னாட்டு கம்பெனிகளை ”இந்தியாவில் உற்பத்தி செய்வது” (மேக்-இன்- இந்தியா) என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்த உள்ளோம் – எனவே 100 சதவீத அன்னிய மூலதனத்தை அனுமதிக்கிறோம் என்றார்கள்.
            பாதுகாப்புத் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது, அதில் ஆராய்ச்சிகள் நடத்தி வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்கு அதிக காலம் ஆகும். எனவேதான், சில முன்னேறிய நாடுகள் மட்டுமே நவீனப் போர் கருவிகள் மற்றும் தளவாடங்களை உற்பத்தி செய்துப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. போர்த் தளவாட உற்பத்தியையே தங்கள் நாடுகளின் பெரும் வருவாய் செல்வக்குவிப்பு ஆதாரமாகக் கொண்டுள்ளன. அவை அந்த நவீன தொழில்நுட்பத்தை ஏனைய நாடுகளுக்கு வழங்குவதுமில்லை, அந்தக் கருவிகளைப் பிறநாடுகளில் உற்பத்திச் செய்ய முதலீடு செய்வதுமில்லை.
            அவர்கள் அப்படி இருக்க, இந்திய அரசோ வெளி உலகத்திற்குக் காட்டிக் கொள்வதற்காகப் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டிலேயே உற்பத்தி, ’மேக்-இன்-இந்தியா’  என நாடகமாடுகிறது. இதன் மூலம் அரசு ஆகப் பெரிய வரலாற்றுத் தவறினைச் செய்கிறது.  தனியார் துறைக்கு உற்பத்தியை மடைமாற்றம் செய்வதற்காகவே இதுவரை இந்திய பொதுத்துறைக்குச் சொந்தமான 41 இராணுவத் தளவாட உற்பத்தி ஆலைகளில் (ஆர்டுநன்ஸ் பேக்டரி) மட்டுமே தயாரித்து வந்த 275 உற்பத்திப் பொருட்களை எவரும் தயாரிக்கலாம் என அவற்றைத் தனித்துவ உற்பத்திப் பட்டியலிருந்து எடுத்து ”நான்-கோர்” எனப் பொதுப்பட்டியலாக்கி, பாதுகாப்புத்துறையை லாபவேட்டை சந்தைக்குத் திறந்து விட்டுள்ளது.  இந்த ஒரு முடிவால் 25 பொதுத்துறை நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் திருவாளர்கள் ஜார்ஜ் பெர்னான்டஸ், பிரனாப் முகர்ஜி மற்றும் ஏ.கே. அந்தோனி முதலானோர் தொழிலாளர் சம்மேளனங்களிடம் முன்பே உறுதி அளித்திருக்கிறார்கள்.  அவர்கள் அளித்த உறுதிமொழியின்படி இராணுவத் தளவாட உற்பத்தி ஆலைகளால் உற்பத்திச் செய்யக் கூடிய எந்தப் பணியும் தனியார் மயமாக்கப்படாது; அதுமட்டுமல்ல, எந்தப் புதிய கருவி, ஆயுதம் தயாரிக்க வேண்டி வந்தாலும் அதனை உற்பத்திச் செய்யும் பணிகளை முதலில் பொதுத்துறை ஆலைகளுக்குத்தான் முன்னுரிமை தந்து வழங்கப்படும் என்றனர்.
உறுதிமொழியை அரசே மீறும்போது அதனைக் கண்டித்து இராணுவப் பாதுகாப்புத் துறை ஆலைகளின் ஊழியர்கள் ஜனவரி 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.
            முந்தைய அமைச்சர்கள் மட்டுமல்ல, இன்றைய பாஜக அரசின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர் அவர்களும்கூட இராணுவ ஆலைகளின் நிர்வாக போர்டுக்குத் தங்கள் உற்பத்தியை ஆண்டுதோறும் ரூ20 ஆயிரம் கோடி என அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பாணை தந்துள்ளார்.
            இதன்படி 2017 -18 ஆண்டில் வரலாற்றுச் சாதனையளவாகப் பாதுகாப்புத் தளவாடக் கருவிகள் உற்பத்தியை ரூ17,650 கோடி என இந்த ஆலைகள் சாதித்துள்ளன.  இந்தச் சாதனைக்குப் பரிசாக பாஜக அரசு தந்தது, உற்பத்தி அளவை நிகழ் ஆண்டிற்கு ரூ6500 கோடியாகக் குறைத்ததுதான்.  ஆனால் ஊழியர் சம்மேளனங்கள் போராட்டம் நிகழ்த்திய பிறகு  19 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட வேண்டிய உற்பத்தி அளவை வெறும் ரூ11 ஆயிரத்து 700 கோடியாக மாற்றியுள்ளார்கள், அவ்வளவுதான்.
            இதுவே இப்படி எனில், வரும் 2019—20 ஆம் ஆண்டு காலத்திற்கு இலக்கு என்னவாக இருக்கப் போகிறதோ? யாருக்கும் தெரியாது, ஆனால் 85 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலம் மட்டும் பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. 
            அரசின் அடுத்தடுத்த மோசமான பிற்போற்குத்தனமான முடிவுகள் தொடர்கின்றன.  இராணுவப் பண்ணைகளை மூடப் போகிறார்களாம்.  இந்தப் பண்ணைகள்தாம் இதுவரை இராணுவ வீரர்களுக்கும், இராணுவத்தின் கீழ் இயங்கி வந்த டெப்போக்களுக்கும், பணிமனைகளுக்கும் சுத்தமான பாலும் பால் பொருட்களும் வழங்கி வந்தன.
 இராணுவப் பணிமனைகள்தாம் வீரர்களின் இராணுவத் தளவாடங்களுக்கு (இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதக் கருவிகளுக்கும் கூட)  இரண்டாவது உயிர் வழங்கும் பிரிவுகளாக விளங்குகின்றன. அத்தகைய  எட்டு இராணுவப் பணிமனைகளைத் தனியார் மயப்படுத்தப் போகிறார்களாம்.  (இந்திய தேசத்தின் பாதுகாப்பு விளங்கிடும் ???) அந்த மகத்தான தேச பக்திச் செயலுக்கு இந்த அரசு சூட்டியுள்ள நாமகரணம் ”உரிமை அரசிற்கு, நிர்வாகம் கார்பரேட்டிற்கு” திட்டம். (நிலத்துக்கு உரிமை ஒருத்தன், வெள்ளாமை இன்னொருத்தன் – எப்படி இருக்கு, அவலும் ஊமியும் … ஊதி ஊதித் தின்னலாம் கதைதான்) ‘Government Owned Corporate Managed (GOCO)’ 
            அரசின் ’பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (DRDO), தங்களின் ஆராய்ச்சியில் புதியதாக நவீனப்படுத்திய தொழில் நுட்பத்தைத் தனியார் பிரிவிடம் ஒப்படைத்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் ஊழியர் எண்ணிக்கை, மனித வளம் வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. 
            இந்திய இராணுவத்தின் உயிர்நாடியான அமைப்பு DGQA. ( Directorate General of Quality Assurance ) போர்க் கருவிகளின் தரக் கட்டுப்பாடு உறுதியளிப்புப் பிரிவு அது.  அந்த அமைப்பும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி உள்ளது.  போர்க் கருவிகளின் தரத்தைப் பரிசோதிக்கும் அதன் உரிமையையும் அரசு தனியாருக்குத் தாரை வார்க்க விரும்புகிறது.  நாயைக் கொல்வதற்கு முன் அதற்கு பைத்தியம் எனப் பெயர் சூட்டும் பிரித்தானிய முறையைப் பின்பற்றி இந்த அரசு ஒரு புதிய பெயரைத் தந்துள்ளது, ’மூன்றாவது நபர் தரப் பரிசோதனை’ திட்டமாம். 
            இராணுவப் பொறியியல் சேவைப் பிரிவும் அரசின் தாக்குதலிருந்து தப்பவில்லை. சிவில் கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் முழுமையாக ’அவுட் சோர்சிங்’ (வெளி ஆள் பணி ஒப்பந்த முறை) கான்டிராக்டுக்கு விடப்பட்டுள்ளன.  நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது;  ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. பாதுகாப்புத் துறை பிரிவுகளில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.    மிகக் கேந்திரமான கப்பற் படையின் துறைமுகக் கப்பல் பட்டறைகளில் கூட பல பணிகள் அவுட் சோர்சிங்கில் விடப்படுகின்றன.
            இத்தகைய பாதுகாப்புத் துறைப் பிரிவுகளின் பணியமர்த்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.  நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலிக்க மறுக்கிறது.
            அனைத்து மத்திய அரசு ஊழியர்களைப் போலவே பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்களையும் பாதிக்கும் மற்றொரு கடுமையான பிரச்சனை கொடுமையான தேசிய ஓய்வூதிய சிஸ்டம் (National Pension System NPS).  முந்தைய வாஜ்பாய் அரசு கொண்டு வந்த பங்களிப்பு ஓய்வூதிய சிஸ்டத்திற்குத் தற்போதைய புதிய பெயரே NPS. 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும்.  இந்தப் புதிய ஓய்வூதிய முறை அரசு ஊழியர்களுக்கு --உச்சநீதிமன்றம் உறுதி அளித்த --ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பறிக்கிறது.
            NPS பென்ஷன் முறையைக் கொண்டு வந்தபோது  CCS (Pension) Rules 1972 விதிகளின்படி உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தைவிட நிச்சயம் அது குறைவாக இருக்காது என்று கூறப்பட்டது.
            ஆனால், அதற்கு நேர்மாறாகப் புதிய ஓய்வூதிய முறையின்படி இன்று ஓய்வு பெறுபவர்கள் பெறும் ஓய்வூதியம் என்பது வெறும் ரூபாய் ஓராயிரம் முதல் ரூ2000 வரைதான்.  சிசிஎஸ் விதிகள் 1972ன் படி வரையறுக்கப்பட்ட குறைந்த பென்ஷன் தொகை என்பது அடிப்படை பென்ஷன் ரூ9000 மற்றும் அதற்குரிய அன்றைய நாள் கிராக்கிப்படியுமாகும். அரசு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய வரையறுக்கப்பட்ட சிசிஎஸ் விதிப்படியான பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரத் தயாராக இல்லை.
            எனவேதான் நான்கு லட்சம் பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்கள் இந்த அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கை மற்றும் மனோபாவத்திற்கு எதிராகவும்; பாதுகாப்புத் துறையையே கொன்று படுகுழிக்குத் தள்ளும் பாதகத்திற்கு எதிராகவும்; உழைப்பாளிகளுக்கு விரோதமான புதிய பென்ஷன் முறைக்கு எதிராகவும் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
            மேலே விவரிக்கப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை சிவில் பிரிவு ஊழியர்களின் சம்மேளனங்களான (AIDEF, INDWF மற்றும் BPMS) அமைப்புகளும் ஒன்றிணைந்து நாடுதழுவிய மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளன.
            சம்மேளனங்களோடு இணைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் போராட்டத்தில்  பங்கேற்கின்றன. தயாரிப்பு இயக்கங்களின் அழுத்தத்தின் காரணமாக அரசு இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனாலும் கோரிக்கைகளின் தீர்வில் முன்னேற்றமில்லாத காரணத்தால் வேலைநிறுத்தம் நிச்சயம் நடைபெறும்.
            தேசப் பாதுகாப்பில் தன்னிறைவை அடையும் நோக்கில் பல ஆண்டுகள் உழைப்பில் கட்டி எழுப்பப்பட்டவை பாதுகாப்பு உற்பத்தி ஆலைகள்.  தன்னிறைவை அடைவது என்ற தேச பக்தி நிறைந்த கடமையை நிறைவேற்றத் தொடர்ந்து போராடி வருகின்றனர் இந்தத் துறையின் திறன்மிக்கத் தொழிலாளர்களும் அவர்தம் தொழிற்சங்க அமைப்புகளும்.
            ஆனால் துரதிருஷ்டம், ஊழியர்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு மாறாக, ஆளுகின்ற அரசு இந்தத் துறையின் உற்பத்தி ஆலைகளையே ஒழித்துவிடும் நோக்கில்  திட்டமிட்டு இந்த ஆலைகளை நலிவடைய பெரு முயற்சி செய்கின்றது.
            லாபம், மேலும் மேலும் லாபம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்த அரசின் தேசப்பாதுகாப்பிற்கு உலைவைக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியது இந்தத் துறையின் ஊழியர்கள் மற்றும் தேசபக்தி மிகுந்த குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். அரசின் இந்தக் கொள்கைகள் தேச நலனுக்கு எதிரானது அல்லவா?
            நமது தேசத்தின் பாதுகாப்பு தனியார் கார்பரேட்டுகளைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியுமா?  ஓநாய்கள் வசமோ நம் வாழ்வின் எதிர்காலம்?
            இந்திய இராணுவத்தைக் கார்பரேட் கலாச்சாரத்தின் நீசக் கரம் தீண்ட  அனுமதிப்பது நியாயமோ தர்மமோ?  இராணுவத்திற்குத் தேவைப்படும் கருவிகளையெல்லாம் கொள்ளைக்காரர்களிடமோ வாங்கக் கட்டாயப்படுத்துவது?
            மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் –உள்ளேயும் வெளியேயும் -- விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் இவை. அரசின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது.
            நாமிருக்கும் நாடு நமதென்ப தறிவோம்!
          தேசம் காக்க ஒன்றிணைந்து எழுவோம்!
                                                                                        செய்தி : நியூ ஏஜ்
                                                                                        தமிழில் : வெ. நீலகண்டன், கடலூர்

Friday, January 25, 2019


1950 சனவரி 26 ஆம் நாளில் நம் நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளையே நாம் குடியரசு தினமாக வருடம் தோறும் கொண்டாடி வருகிறோம்..
இந்திய சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும்.  ஆனால் குடியரசு தினம் எதற்கு கொண்டாடப்படுகிறது என்று நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது நாம் வரலாற்றில் கொஞ்சம் பின் நோக்கி போகலாம்.
ஐரோப்பாவைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகீசிய மாலுமியிடமிருந்து முதலில் இக் கட்டுரையைத் தொடங்குவது உத்தமம்.
வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு கடல் வழிப்பயணமாக செல்லும் போது இந்தியாவைக் கண்டறிந்தார். இந்தியாவின் வளமான செல்வ செழிப்பு ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியதால் முதன் முதலாக வணிகர்களாக உள்ளே நுழைந்தனர். அதன் தொடர்ச்சியாக முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவின் கடலோரப்பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்கள் வணிக முகாம்களை அமைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு பின்னால் அவர்களின் பங்காளிகளான டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் இந்தியாவில் தங்கள் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர்.
நம் நாட்டு மன்னர்களுக்குள் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள்.
குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
அதற்கு பின் நடந்ததெல்லாம் வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.
அதற்கு பிறகு வந்த தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து மாண்டு போயினர்.
சரி இப்போது குடியரசு தினத்துக்கு வருவோம்.
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் "பூரண சுயராஜ்யம்" (முழுமையான சுதந்திரம் ) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக "சுதந்திர நாளாகக்" கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள் "மக்களாட்சி" என்பதாகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளலாம் . இந்த முறை குடியாட்சி எனப்படுகிறது.
"மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு" என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தான்.
அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
இதன் மூலமாக மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்தது.
சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் ஜனவரி 26 .
சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது.
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
இன்றைய இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இந்தியா சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைவோம் .
அனைவருக்கும் 69வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....
ஜெய்ஹிந்த்...!!!

Tuesday, January 22, 2019

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR