modi and patel statueஉலகில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 7 கோடியே 2 லட்சம் மக்கள் மிக மோசமான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 38 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்பநலம் மற்றும் சுகாதார அமைப்பு (National Family and Health Survey) மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.  ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட ஏழைத்தாயின் மகனுக்கு நேரமுமில்லை, மனமுமில்லை.
அவரது எண்ணம் சொல், செயல், சிந்தனை என அனைத்தும் பார்ப்பன பாசிசத்தாலும் கார்ப்ரேட் அடிவருடித்தனத்தாலும் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் தன்னுடைய கனவுகளில் வரும் ஏழைகளின் பிச்சைப் பாத்திரங்களைக் கூட பிடுங்கி இரும்பு மனிதனின் சிலைக்காக கொடுத்திருக்கின்றார். அப்படி வல்லபாய் பட்டேலின் மீது மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் அளப்பறிய மரியாதை வர என்ன காரணம்?. அது அவர் காந்தி கொலையில் மூளையாக செயல்பட்டதால் ஏற்பட்ட மரியாதையாக இருக்கலாம்,  காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்படி காஷ்மீரை ஆண்ட இந்து மன்னரை ஒப்புக் கொள்ள வைக்க பட்டேல் மோடியின் சித்தாந்த ஆசானான கோல்வால்கருக்குக் கடிதம் எழுதி உதவி கேட்டது. ஒருவேளை பட்டேலின் அந்தப் பணிவாக கூட இருக்கலாம்.
ஆனால் காரணங்கள் எதுவானாலும் இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பு யூனிட்டி’யால் இந்தியா என்ற நாட்டை வரும் காலங்களில் ஒற்றுமையாக வைத்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்திய ஆளும் வர்க்கம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தி இருக்கும் சமச்சீரற்ற வளர்ச்சியும், பார்ப்பன பாசிசத்தால் திணிக்கப்படும் ஒற்றை பண்பாட்டுத் திணிப்பும், வடகிழக்கு மாநிலங்களில் குமுறி எழுந்து கொண்டிருக்கும் தேசிய இனப் போராட்டங்களும், இந்திய அரசின் ராணுவ அத்துமீறல்களும் இந்த நாட்டை இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் கூடிய விரைவில் துண்டு துண்டாக உடைக்கத்தான் போகின்றது. எனவே ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் ‘அகண்ட இந்து நாடு’ என்ற கனவு ஒரு பழம் கனவாக மாறி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் நாள் கூடிய விரைவில் வரத்தான் போகின்றது. அந்த அச்சத்தின் வெளிப்பாடாக கூட இந்த சிலையை நாம் பார்க்கலாம்.
நீங்கள் இனி இந்தியாவில் தினம் தினம் பட்டினியால் சாகும் மனிதர்களையும், உடுக்க உடையற்று, படுக்க இடமற்று விலங்குகளை விட கீழான நிலையில் வாழ நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களையும், மாடுகளைக் காக்க மனிதர்களைக் கொல்ல கையில் ஆயுதங்களுடன் ரத்தவெறியோடு செல்லும் மதவெறியர்களையும், நவீன இந்தியா பேண்டுவைத்த மலத்தை கையில் உறை கூட இல்லாமல் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களையும், பங்குச் சந்தை வாசலில் பணத்தை தொலைத்துவிட்டு ஒரே நாளில் பிச்சைக்காரனாக மாறிய பேராசைக்காரர்களையும், வறண்டு போன விவசாய நிலத்தில் தூக்குமாட்டியும், விஷம் குடித்தும் இறந்து கிடக்கும் விவசாயிகளையும், தெருத்தெருவாய் வேலை தேடி பாதம் தேய்ந்து ஓய்ந்து நடக்கும் இளைஞர்களையும், மிக எளிதாக வல்லபாய் பட்டேலின் சிலைமீது ஏறி நின்று பார்க்க முடியும். எல்லாவற்றிலும் தோற்று அம்மணமாய் நிற்கும் மோடியின் அருவருப்பு நிறைந்த ஆட்சியைக் காண உலகிலேயே மிகப் பெரிய இந்த சிலை பயன்படலாம். அசிங்கத்தை உயரத்தில் இருந்து பார்ப்பது எவ்வளவு அசிங்கமானது!