தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, April 30, 2012


வீர வணக்கம்!
    
 நமக்காக ஒரு கூட்டம் உழைத்திருக்கிறது, உயிரை இழந்திருக்கிறது, சொத்தை, சுகத்தை, சுற்றத்தை என்று இழந்தது இன்னும் எவ்வளவோ!   அதனால் கிடைத்த பலன்களும்  அளவற்றது.   ஆனாலும் அப் பலன்களை இன்று வரை எட்டாதவர்களும் உண்டு.  

சரி!  நாம் என்ன செய்ய?
     எவ்வளவோ செய்யலாம்!   உழைக்கும் வர்க்கம் ஒன்று பட்டால் உலகே நமதாகும் என்பதை நாம் உணர்ந்த்தவர்களாய் இருந்தால்,
      அந்த ஒற்றுமையைக் காக்க உழைப்போம். 
    ஒற்றுமைக்கு ஊறு  விளைப்போரை அடையாளம் காண்போம், அவர்களை ஒற்றுமைக் கண்ணியில் இணைப்போம்!  இயலவில்லையெனில் அவர்களை அம்பலப்படுத்துவோம்! சரிதானே!

சரி! அவைகளை அடையாளம் காண்பது எப்படி?

  ஒன்று பட வேண்டியவர்கள் ஏன் பிரிந்து நிற்கிறார்கள்?    
      ஒற்றுமை கோஷம் எழுப்புபவர்கள் ஏன் ரெண்டு பட எண்ணுகிறார்கள்?     
      இழக்கப் போவது அடிமைச் சங்கிலிகளைத்தான் என்று கூறிக் கொண்டே அடிப்படை உரிமைகளையே இழக்கத் துணிகின்றார்களே?  
     ஏன்? எதற்காக இப்படி? என்ற கேள்விகளை நாம் எழுப்பத் துவங்கி விட்டால் அவர்களின் சுய ரூபம் தெரிய ஆரம்பிக்கும்? அப்பொழுது அவர்களை, அவர்களின்   இயக்கத்தை நம்மால்  சரியாக  அடையாளம் காண முடியும்.

        சரி, இதையெல்லாம் கேட்க, கவனிக்க நமக்கு எங்கே நேரம் இருக்கிறது  என்று எண்ணி வாளாவிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.

  இந்த மே தினத்திலிருந்தாவது,  இந்த வகையில் எண்ணிச் செயல்பட்டால், மே தினத் தியாகிகளை எண்ணிப் பார்த்த புண்ணியமாவது நம்மைச் சேரும்.  அந்தத் தியாகம்,அவர்களின் ரத்தம் சிந்திய வேதனை நமது சந்ததிக்கு வரவேண்டாமே!

    மே தினத் தியாகிகளே! உங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை உரித்தாக்குகின்றோம். உங்கள் தியாகம் வீணாகாது. நீங்கள்  பெற்றுத் தந்த உரிமைகளை, சலுகைகளை  கண்ணின் மணிபோல் காத்திட சபதமேற்கிறோம்!

வாழ்த்துகளுடன்,
எஸ். சிவசிதம்பரம்.
பட்டுக்கோட்டை.      

Wednesday, April 25, 2012

     மே தினம் !


     நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை 1886 மே 1 ஆம் நாள் அன்று செய்திட வேண்டும் என்று அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்தது. அந்த மே 1 ஆம் தேதியே மே தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
     அமெரிக்காவில் 126  ஆண்டுகளுக்கு முன்னர் 12 மணி நேரம், 18 மணி நேரம் என்று தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டு மிகுந்த கொடுமைக்கு உள்ளாயினர். 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவில் தூங்க ஒரு மணி நேரமும், சாப்பிட ஒரு ரொட்டித் துண்டும் கொடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இலேசாக கண் அயர்ந்தால் கூட சாட்டையடிக்கு ஆளாவார்கள்.  
     தாங்கொணா இக் கொடுமையைக் காணச் சகியாத முன்னணி பத்திரிகையாளர்களான எங்கல், ஸ்பைஸ், பிஷர், பார்சன்ஸ் ஆகியோர் தொழிலாளர்களைத் திரட்டி போராடத் தலைப்பட்டனர்.   இதன் வீச்சுதான் நாடெங்கும்  பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. 
     எட்டு மணி நேர உழைப்பு கேட்டு ஹே மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டு வேலை நிறுத்தம் செய்தனர்.   இவ் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்கள் மீது தாக்குதலைத் தொடுத்தது.   
    1887 நவம்பர் 11 அன்று     தோழர்கள் எங்கல், ஸ்பைஸ், பிஷர், பார்சன்ஸ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.  நவம்பர் 13 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.            
     எட்டுமணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோசத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது, அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் நினைவு நாளாக இதை அனுஷ்டிக்கிறோம்.
     இந்தியாவிலேயே முதன் முதலாக மே தினம் தமிழ்நாட்டில்தான் 1923 ல் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்கரவேலரால் நடத்தப்பட்டது. 
     இந்த நாளில் நாம் எமது கைகளை உலகத்தொழிலாளி வர்க்கத்துடன் ஒருசேர உயர்த்தி, போராடக் கற்றுக் கொள்வோம். நாம் வர்க்க உணர்வு பெற்றுக் கொள்வோம். இத்தினம் உலகெங்கும் உள்ள தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டெழுந்த நாள்.  
     
     இது ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய்வு நாள் அல்ல.  பொழுது போக்கும் களியாட்ட நாளும் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. 
     மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வாக்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள்.  உலக தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள்.  
     தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் உலக முதலாளிகள் கற்றுக்கொண்ட பாடம் இன ஒடுக்குமுறை.   அதனால்தான் தோழர் லெனின் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார்.
     ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்குப் போராட வேண்டும் என்றார் லெனின். 
         தொழிலாளர்களின் வலியையும், வலிமையையும் உணர்ந்தவர்களாக, தொழிலாளர் வர்க்கத்திற்கு அனைத்தையும் உரிமையாக்க  பாடுபடுபவர்களாக   அணி திரள்வோம்.  


அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம். 
மாநில துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை.          

Tuesday, April 17, 2012

Monday, April 16, 2012

தஞ்சை SDO போன்ஸ் கிளை மாநாடு.

     கடந்த ஏப்ரல் 7 ம் தேதி தஞ்சை CTO காம்பௌண்டில் SDO போன்ஸ் கிளை மாநாடு தோழர் மேகநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவர், செயலர், பொருளராக முறையே தோழர்கள் ரெத்தினசாமி, ராஜ்மோகன், நீலமேகம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ஆண்டு விழாவினை விமரிசையாக நடத்தினார்கள். விழாவைச் சிறப்பிக்க மாநிலத் தலைவர் தோழர். S. தமிழ்மணி அவர்களும், மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களும் வருகை தந்திருந்தனர்.  

     புதிய தலைவர், செயலர், பொருளராக தோழர்கள் R . குணசேகரன், ஜோதிவேல், கே.செல்வராஜ் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

     தலைவர் தமிழ்மணி அவர்கள் நடப்பு அரசியல் நிலவரம், பட்ஜெட் போன்றவற்றில் உள்ள சாதக, பாதகங்களை விளக்கிப் பேசினார். 

     மாநிலச் செயலர் தமது உரையில் பல்வேறு செய்திகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

     நாம் நகர்ப்புறத்தில் 160 % தொலைபேசி இணைப்பையும், கிராமப்புறத்தில் 35 % தொலைபேசி இணைப்பையும் பெற்றிருக்கிறோம்.   நமது துறைக்கு தற்போது வருவாயில் சரிவும், லாபத்தில் சரிவும் ஏற்பட்டிருக்கிறது.
      இதைச் சரி செய்வதற்கான ஆலோசனையைத் தருவதற்கு சாம் பிட்ரோடா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  பிப். 2010 ல் பிட்ரோடா கமிட்டி தமது பரிந்துரையைத் தந்தது.  
 பிட்ரோடா அறிக்கை கூறியது என்னவென்றால்:
   -  1 லட்சம் ஊழியர்களைக் குறைக்க வேண்டும்.
   - ITS அதிகாரிகளை மறு சீரமைக்க  வேண்டும். 
   - 30 % பங்கை விற்க வேண்டும். இதில் வரும் தொகையில் 10 % த்தை அரசுக்கும், மீதம் 20 % த்தை VRS ஆல் ஆகும் செலவுக்கும்  பயன்படுத்த வேண்டும்.  
     - நாடு பூராவும் நமது அலுவலக எல்லைகளில் உள்ள உபரி நிலங்களை, கட்டிடங்களை விற்பது அல்லது வாடகைக்கு விடுவது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். 
     சென்னையில் தற்போது 240 கோடியில் CGM அலுவலகம் 7 மாடிக் கட்டிடமாக  கட்டப்படவிருக்கிறது.   இதில் ஒரு பகுதியை 7 கோடி வருட வாடகையில் அப்போல்லோ மருத்துவமனைக்கு கொடுக்கவிருப்பது பிட்ரோடா பரிந்துரையின் அடிப்படையில்தான்.     இந்த BRPSE பரிந்துரையின் மீது CMD சில தகவல்களைக் கொடுத்தார். அந்த BSNL CORE COMMITTEE யில் CMD அவர்கள்  கூறும்போது : 
     BSNL -ல் வருவாய் வீழ்ந்ததற்கு ஊழியர்கள் காரணமல்ல. 
     ஊழியர்க்கான செலவே காரணம் என்றும் கூறியிருக்கிறார். மேலும்,
     99000 பேருக்கு VRS கொடுக்கலாம். 
     அதில் திருப்தியான சேவை தராத நபரை வெளியேற்றலாம்.   
     இந்த வெளியேற்றத்தில் 58 % TM . அதாவது 46000 ஊழியர்கள். 
     52 % Sr.TOA .   அதாவது 27000 ஊழியர்கள்.    
     அதோடு STAFF REDEPLOYMENT -ம் செய்து கொள்ளலாம்.  

முன்பு DOT யில் 100 ரூபாய் வருவாய்க்கு 29 ரூபாய் செலவானது. 
இப்போது BSNL -ல் 100 ரூபாய் வருவாய்க்கு 130 ரூபாய் செலவாகிறது. 
பிராட் பேண்ட் இணைப்புகள் 24 மணி நேரமும் தரும் வகையில் OUTSOURCING ல் ஒரு இணைப்புக்கு ரூபாய் 100 என்ற விகிதத்தில் விடப்பட விருக்கிறது. 
     1லட்சம் கோடி ரூபாய் டெலிகாம் துறை விரிவாக்கத்திற்கு  கடனாக வழங்கப்பட்டுள்ளது.   இதில் ரெலையன்ஸ் மட்டுமே 3 G -க்காக ரூபாய் 12000 கோடி கடன் பெற்று அதை மிகக் குறைந்த வட்டியில் ஆண்டுக்கு 500 கோடி என்ற அளவில் திரும்பச் செலுத்தி வருகிறது. 
ஆனால் நாம் இருப்பில் இருந்த தொகையில் 18000 கோடியை எடுத்து கட்டிவிட்டு கையிருப்பை கரைத்திருக்கிறோம். வங்கியில் ஒரு பைசா கூட கடன் பெறாமல் தொழில் நடத்தும் ஒரே நிறுவனம் BSNL மட்டும்தான். மற்ற தனியார் துறை நிறுவனங்கள் எல்லாம் வங்கியில் கடன் பெற்று தொழில் நடத்துகின்றான்.
நமது சங்கம் பல சாதனைகளை செய்து இருக்கிறது. 
     20 ஆண்டு சேவைக்குப் பிறகே பென்சன் என்பதை மாற்றி 10 ஆண்டு முடித்தாலே பென்சன் என்றாக்கியிருக்கிறோம். 
     MRS க்கான தொகையை புதிய சம்பள விகிதத்தில் மாற்றி பெற்றுத் தந்திருக்கிறோம்.   ( தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ).
       TSM தோழர்களுக்கும் பென்சன் உண்டு என்று வாங்கியிருக்கிறோம்.

     CMD நியமனத்தில் NFTE சம்மேளனத்தின் நிலைபாடுதான் இறுதி முடிவானது.

     VRS ல் சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அதை  அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும். 
       எக்காரணத்தைக் கொண்டும் BSNL அழிந்து  விடும் என்று எண்ணத் தேவையில்லை.   
     

     இறுதியாக, நான் மாவட்டச் செயலராக இருந்த போது,  பல சாதனைகளை, வெற்றிகளை குவிக்க இந்தக் கிளை பெரும் ஒத்துழைப்பை தந்தது.   அது என் நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறது. 
    எதிர்வரும் காலங்களில் நாம் பல்வேறு வகையான சவால்களைச் சந்திக்கவிருக்கிறோம். அந்தச் சவால்களைச் சந்திக்க நமது தலைமை விடுக்கும் எல்லா வித போராட்டங்களுக்கும் எத்தகைய சலனங்களுக்கும் ஆட்படாது நீங்கள் 100 % பங்களிப்பை தரவேண்டும் என்று நெகிழ்ச்சியோடு வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.  

தொகுப்பு:
எஸ். சிவசிதம்பரம்.

Sunday, April 8, 2012

TTA தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

TTA தேர்வுக்கான பயிற்சி வகுப்பு          
                
        தஞ்சையில் இன்று TTA தேர்வுக்கான பயிற்சி வகுப்பு CTO காம்பௌண்டில் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டது.  நமது மாவட்டச் செயலர் தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் துவங்கி வைத்தார்.  தோழர் மோகன் TTA அவர்கள் இதற்கான முன் முயற்சியை எடுத்துள்ளார்.   கல்லூரி பேராசிரியர்களும் தோழர்களுக்கு பயிற்சி கொடுக்கவிருக்கின்றனர்.   நமது மாவட்டத்தில் 40 காலி இடங்கள் உள்ளது. தகுதி பெற்ற தோழர்கள் 38 பேர்.தோழர்கள் முனைப்போடு படித்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். 

     அதேபோல் திருவாரூரிலும் கடந்த 10 தினங்களுக்கு முன்பிலிருந்தே பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.  அங்கு TTA தோழர் தங்கமணி அவர்கள் முயற்சியில் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. 

     சங்க வேறுபாடின்றி அனைத்து தோழர்களும் இவ்வகுப்பில் பங்கேற்றிருப்பது நமக்கு மேலும் மகிழ்வைத் தருகிறது. 

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்.                         

Wednesday, April 4, 2012

தோழர் பக்கிரிசாமி அவர்களுக்கு பாராட்டு!

சிறப்பு விருது

     நமது மாவட்டப் பொருளாளர் அருமைத் தோழர் T.பக்கிரிசாமி அவர்களுக்கு விளக்குடி லயன்ஸ் சங்கம் சார்பில் சிறந்த சேவைக்கான சிறப்பு விருது வழங்கபட்டிருக்கிறது.   இச் செய்தி கேட்டு பெரிதும் மகிழ்கிறோம். லயன்ஸ் தோழர்களுடன் சேர்ந்து அவரை நாங்களும் பாராட்டுகிறோம்.   பொதுவாக உழைப்பை மதிப்பது, பாராட்டுவது என்பது வெறும் மரபோடு நின்றுவிடாது. அது எதிர்காலத்தில் சிறந்த சேவையையும், சீரிய மனப்பாங்கையும் பரவலாக்கும்.

     எமது தோழரை ஆய்ந்து, கண்டறிந்து அவரை அரிமா சங்கம் பாராட்டுகிறது என்பதை நாங்கள் நிறைவாகப் புரிந்து கொள்கிறோம். எமது தோழர்கள் அனைவருமே உங்களது பாராட்டால் உவகை கொள்கிறோம்.   உங்களது பாராட்டுக்கு நன்றியாக எங்களது சேவையை இச் சமூகத்திற்கு நிறைவாகவும், விரைவாகவும் அளிக்கக் கடமைப்படுகிறோம்.   

நன்றியுடன், 
தஞ்சை மாவட்டச் சங்கம்.  

Sunday, April 1, 2012

ஒரு தும்பைப் பூ துவண்டது!

     புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் S.P. முத்துக்குமரன் அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.   44 வயதைக் கடக்காத தோழர். சென்ற சட்ட மன்றக் கூட்டத் தொடரில்  பயனுறு கேள்விகளை அதிகம் கேட்டவர் என்ற பெயர் எடுத்தவர். சட்டமன்றத்தில் கேள்வி கேட்போர் இவரது அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று சபாநாயகரால் பாராட்டப் பெற்றவர்.  இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. 
     அரசியல் சாக்கடையில்  பூத்த தும்பைப் பூ என்று ஜூனியர் விகடனால் தேர்தல் காலத்தில் பாராட்டப் பெற்றவர். 
     இவரது இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தாருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், தோழர் முத்துக்குமரனுக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். 
தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.      

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR