பாதுகாப்புத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போர்
ஜனவரி 23 முதல் மூன்று நாட்கள் – சி. ஸ்ரீகுமார்
இந்திய
பாதுகாப்புத்துறை கடும் நெருக்கடியில் உள்ளது.
அதுபோலவே அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நாட்டின் கேந்திரமான முக்கியத்துவமுடைய பாதுகாப்புத்
தளவாடம் முதலிய உற்பத்தியையும் அதுதொடர்பான சேவை, ஆராய்ச்சி மற்றும் இதர தொழில் நடவடிக்கைகளையும்
பெருமுதலாளிகள் – பகாசுரத் தனியார் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையளிக்கத் துணிந்து
விட்டது இன்றைய மத்திய அரசு. முக்கியமாக அம்பானிகள்
மற்றும் அதானிகளின் மீதான அதன் பற்றும் பரிவும் பாசமும் தனியார் மோக ஆதரவும் வெட்கமறியாதது.
அதற்கு
இன்றைய அரசு முதலில் கூறிய காரணம், பாதுகாப்புத் தளவாடங்களின் மொத்த தேவையில் 70 சதவீதம்
இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்; எனவே இறக்குமதியைக் குறைக்க உள்நாட்டிலே உற்பத்திச்
செய்ய வேண்டும்; அதனைத் தனியார் நிறுவனக் குழுமங்கள், பன்னாட்டு கம்பெனிகளை ”இந்தியாவில்
உற்பத்தி செய்வது” (மேக்-இன்- இந்தியா) என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்த உள்ளோம்
– எனவே 100 சதவீத அன்னிய மூலதனத்தை அனுமதிக்கிறோம் என்றார்கள்.
பாதுகாப்புத் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது,
அதில் ஆராய்ச்சிகள் நடத்தி வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்கு அதிக காலம் ஆகும்.
எனவேதான், சில முன்னேறிய நாடுகள் மட்டுமே நவீனப் போர் கருவிகள் மற்றும் தளவாடங்களை
உற்பத்தி செய்துப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. போர்த் தளவாட உற்பத்தியையே
தங்கள் நாடுகளின் பெரும் வருவாய் செல்வக்குவிப்பு ஆதாரமாகக் கொண்டுள்ளன. அவை அந்த நவீன
தொழில்நுட்பத்தை ஏனைய நாடுகளுக்கு வழங்குவதுமில்லை, அந்தக் கருவிகளைப் பிறநாடுகளில்
உற்பத்திச் செய்ய முதலீடு செய்வதுமில்லை.
அவர்கள் அப்படி இருக்க, இந்திய அரசோ வெளி
உலகத்திற்குக் காட்டிக் கொள்வதற்காகப் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டிலேயே உற்பத்தி,
’மேக்-இன்-இந்தியா’ என நாடகமாடுகிறது. இதன்
மூலம் அரசு ஆகப் பெரிய வரலாற்றுத் தவறினைச் செய்கிறது. தனியார் துறைக்கு உற்பத்தியை மடைமாற்றம் செய்வதற்காகவே
இதுவரை இந்திய பொதுத்துறைக்குச் சொந்தமான 41 இராணுவத் தளவாட உற்பத்தி ஆலைகளில் (ஆர்டுநன்ஸ்
பேக்டரி) மட்டுமே தயாரித்து வந்த 275 உற்பத்திப் பொருட்களை எவரும் தயாரிக்கலாம் என
அவற்றைத் தனித்துவ உற்பத்திப் பட்டியலிருந்து எடுத்து ”நான்-கோர்” எனப் பொதுப்பட்டியலாக்கி,
பாதுகாப்புத்துறையை லாபவேட்டை சந்தைக்குத் திறந்து விட்டுள்ளது. இந்த ஒரு முடிவால் 25 பொதுத்துறை நிறுவனங்கள் மிகக்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னாள்
பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் திருவாளர்கள் ஜார்ஜ் பெர்னான்டஸ், பிரனாப் முகர்ஜி மற்றும்
ஏ.கே. அந்தோனி முதலானோர் தொழிலாளர் சம்மேளனங்களிடம் முன்பே உறுதி அளித்திருக்கிறார்கள். அவர்கள் அளித்த உறுதிமொழியின்படி இராணுவத் தளவாட
உற்பத்தி ஆலைகளால் உற்பத்திச் செய்யக் கூடிய எந்தப் பணியும் தனியார் மயமாக்கப்படாது;
அதுமட்டுமல்ல, எந்தப் புதிய கருவி, ஆயுதம் தயாரிக்க வேண்டி வந்தாலும் அதனை உற்பத்திச்
செய்யும் பணிகளை முதலில் பொதுத்துறை ஆலைகளுக்குத்தான் முன்னுரிமை தந்து வழங்கப்படும்
என்றனர்.
உறுதிமொழியை
அரசே மீறும்போது அதனைக் கண்டித்து இராணுவப் பாதுகாப்புத் துறை ஆலைகளின் ஊழியர்கள் ஜனவரி
23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.
முந்தைய அமைச்சர்கள் மட்டுமல்ல, இன்றைய
பாஜக அரசின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர் அவர்களும்கூட
இராணுவ ஆலைகளின் நிர்வாக போர்டுக்குத் தங்கள் உற்பத்தியை ஆண்டுதோறும் ரூ20 ஆயிரம் கோடி
என அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பாணை தந்துள்ளார்.
இதன்படி 2017 -18 ஆண்டில் வரலாற்றுச் சாதனையளவாகப்
பாதுகாப்புத் தளவாடக் கருவிகள் உற்பத்தியை ரூ17,650 கோடி என இந்த ஆலைகள் சாதித்துள்ளன. இந்தச் சாதனைக்குப் பரிசாக பாஜக அரசு தந்தது, உற்பத்தி
அளவை நிகழ் ஆண்டிற்கு ரூ6500 கோடியாகக் குறைத்ததுதான். ஆனால் ஊழியர் சம்மேளனங்கள் போராட்டம் நிகழ்த்திய
பிறகு 19 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட வேண்டிய
உற்பத்தி அளவை வெறும் ரூ11 ஆயிரத்து 700 கோடியாக மாற்றியுள்ளார்கள், அவ்வளவுதான்.
இதுவே இப்படி எனில், வரும் 2019—20 ஆம்
ஆண்டு காலத்திற்கு இலக்கு என்னவாக இருக்கப் போகிறதோ? யாருக்கும் தெரியாது, ஆனால்
85 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலம் மட்டும் பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
அரசின் அடுத்தடுத்த மோசமான பிற்போற்குத்தனமான
முடிவுகள் தொடர்கின்றன. இராணுவப் பண்ணைகளை
மூடப் போகிறார்களாம். இந்தப் பண்ணைகள்தாம்
இதுவரை இராணுவ வீரர்களுக்கும், இராணுவத்தின் கீழ் இயங்கி வந்த டெப்போக்களுக்கும், பணிமனைகளுக்கும்
சுத்தமான பாலும் பால் பொருட்களும் வழங்கி வந்தன.
இராணுவப் பணிமனைகள்தாம் வீரர்களின் இராணுவத் தளவாடங்களுக்கு
(இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதக் கருவிகளுக்கும் கூட) இரண்டாவது உயிர் வழங்கும் பிரிவுகளாக விளங்குகின்றன.
அத்தகைய எட்டு இராணுவப் பணிமனைகளைத் தனியார்
மயப்படுத்தப் போகிறார்களாம். (இந்திய தேசத்தின்
பாதுகாப்பு விளங்கிடும் ???) அந்த மகத்தான தேச பக்திச் செயலுக்கு இந்த அரசு சூட்டியுள்ள
நாமகரணம் ”உரிமை அரசிற்கு, நிர்வாகம் கார்பரேட்டிற்கு” திட்டம். (நிலத்துக்கு
உரிமை ஒருத்தன், வெள்ளாமை இன்னொருத்தன் – எப்படி இருக்கு, அவலும் ஊமியும் … ஊதி ஊதித்
தின்னலாம் கதைதான்) ‘Government Owned Corporate Managed (GOCO)’
அரசின்
’பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (DRDO),
தங்களின் ஆராய்ச்சியில் புதியதாக நவீனப்படுத்திய தொழில் நுட்பத்தைத் தனியார் பிரிவிடம்
ஒப்படைத்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் ஊழியர் எண்ணிக்கை,
மனித வளம் வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது.
இந்திய இராணுவத்தின் உயிர்நாடியான அமைப்பு
DGQA.
( Directorate General of Quality Assurance ) போர்க்
கருவிகளின் தரக் கட்டுப்பாடு உறுதியளிப்புப் பிரிவு அது. அந்த அமைப்பும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி உள்ளது. போர்க் கருவிகளின் தரத்தைப் பரிசோதிக்கும் அதன்
உரிமையையும் அரசு தனியாருக்குத் தாரை வார்க்க விரும்புகிறது. நாயைக் கொல்வதற்கு முன் அதற்கு பைத்தியம் எனப் பெயர்
சூட்டும் பிரித்தானிய முறையைப் பின்பற்றி இந்த அரசு ஒரு புதிய பெயரைத் தந்துள்ளது,
’மூன்றாவது நபர் தரப் பரிசோதனை’ திட்டமாம்.
இராணுவப் பொறியியல் சேவைப் பிரிவும் அரசின்
தாக்குதலிருந்து தப்பவில்லை. சிவில் கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும்
முழுமையாக ’அவுட் சோர்சிங்’ (வெளி ஆள் பணி ஒப்பந்த முறை) கான்டிராக்டுக்கு விடப்பட்டுள்ளன. நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது; ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.
பாதுகாப்புத் துறை பிரிவுகளில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு
மறுக்கப்படுகிறது. மிகக் கேந்திரமான கப்பற்
படையின் துறைமுகக் கப்பல் பட்டறைகளில் கூட பல பணிகள் அவுட் சோர்சிங்கில் விடப்படுகின்றன.
இத்தகைய பாதுகாப்புத் துறைப் பிரிவுகளின்
பணியமர்த்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற அவர்களின் நியாயமான
கோரிக்கையை அரசு பரிசீலிக்க மறுக்கிறது.
அனைத்து மத்திய அரசு ஊழியர்களைப் போலவே
பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்களையும் பாதிக்கும் மற்றொரு கடுமையான பிரச்சனை கொடுமையான
தேசிய ஓய்வூதிய சிஸ்டம் (National Pension System –
NPS). முந்தைய வாஜ்பாய்
அரசு கொண்டு வந்த பங்களிப்பு ஓய்வூதிய சிஸ்டத்திற்குத் தற்போதைய புதிய பெயரே NPS.
2004
ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர் அனைவருக்கும் இத்திட்டம்
பொருந்தும். இந்தப் புதிய ஓய்வூதிய முறை அரசு ஊழியர்களுக்கு --உச்சநீதிமன்றம்
உறுதி அளித்த --ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பறிக்கிறது.
NPS
பென்ஷன் முறையைக் கொண்டு வந்தபோது CCS
(Pension) Rules 1972 விதிகளின்படி
உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தைவிட நிச்சயம் அது குறைவாக இருக்காது என்று கூறப்பட்டது.
ஆனால், அதற்கு நேர்மாறாகப் புதிய ஓய்வூதிய
முறையின்படி இன்று ஓய்வு பெறுபவர்கள் பெறும் ஓய்வூதியம் என்பது வெறும் ரூபாய் ஓராயிரம்
முதல் ரூ2000 வரைதான். சிசிஎஸ் விதிகள்
1972ன் படி வரையறுக்கப்பட்ட குறைந்த பென்ஷன் தொகை என்பது அடிப்படை பென்ஷன் ரூ9000 மற்றும்
அதற்குரிய அன்றைய நாள் கிராக்கிப்படியுமாகும். அரசு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து
பழைய வரையறுக்கப்பட்ட சிசிஎஸ் விதிப்படியான பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரத்
தயாராக இல்லை.
எனவேதான் நான்கு லட்சம் பாதுகாப்புத் துறை
சிவில் ஊழியர்கள் இந்த அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கை மற்றும் மனோபாவத்திற்கு எதிராகவும்;
பாதுகாப்புத் துறையையே கொன்று படுகுழிக்குத் தள்ளும் பாதகத்திற்கு எதிராகவும்; உழைப்பாளிகளுக்கு
விரோதமான புதிய பென்ஷன் முறைக்கு எதிராகவும் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
மேலே விவரிக்கப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக
அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை சிவில் பிரிவு ஊழியர்களின் சம்மேளனங்களான (AIDEF, INDWF மற்றும் BPMS) அமைப்புகளும்
ஒன்றிணைந்து நாடுதழுவிய மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளன.
சம்மேளனங்களோடு இணைந்த ஆயிரத்திற்கும்
மேற்பட்ட சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
தயாரிப்பு இயக்கங்களின் அழுத்தத்தின் காரணமாக அரசு இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
ஆனாலும் கோரிக்கைகளின் தீர்வில் முன்னேற்றமில்லாத காரணத்தால் வேலைநிறுத்தம் நிச்சயம்
நடைபெறும்.
தேசப் பாதுகாப்பில் தன்னிறைவை அடையும்
நோக்கில் பல ஆண்டுகள் உழைப்பில் கட்டி எழுப்பப்பட்டவை பாதுகாப்பு உற்பத்தி ஆலைகள். தன்னிறைவை அடைவது என்ற தேச பக்தி நிறைந்த கடமையை
நிறைவேற்றத் தொடர்ந்து போராடி வருகின்றனர் இந்தத் துறையின் திறன்மிக்கத் தொழிலாளர்களும்
அவர்தம் தொழிற்சங்க அமைப்புகளும்.
ஆனால் துரதிருஷ்டம், ஊழியர்களின் இந்த
முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு மாறாக, ஆளுகின்ற அரசு இந்தத் துறையின் உற்பத்தி
ஆலைகளையே ஒழித்துவிடும் நோக்கில் திட்டமிட்டு
இந்த ஆலைகளை நலிவடைய பெரு முயற்சி செய்கின்றது.
லாபம், மேலும் மேலும் லாபம் என்ற ஒற்றைக்
குறிக்கோளுடன் செயல்படும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகச்
செயல்படும் இந்த அரசின் தேசப்பாதுகாப்பிற்கு உலைவைக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகக்
குரல் எழுப்ப வேண்டியது இந்தத் துறையின் ஊழியர்கள் மற்றும் தேசபக்தி மிகுந்த குடிமக்கள்
ஒவ்வொருவரின் கடமையாகும். அரசின் இந்தக் கொள்கைகள் தேச நலனுக்கு எதிரானது அல்லவா?
நமது தேசத்தின் பாதுகாப்பு தனியார் கார்பரேட்டுகளைச்
சார்ந்து இருக்க விட்டுவிட முடியுமா? ஓநாய்கள்
வசமோ நம் வாழ்வின் எதிர்காலம்?
இந்திய இராணுவத்தைக் கார்பரேட் கலாச்சாரத்தின்
நீசக் கரம் தீண்ட அனுமதிப்பது நியாயமோ தர்மமோ? இராணுவத்திற்குத் தேவைப்படும் கருவிகளையெல்லாம்
கொள்ளைக்காரர்களிடமோ வாங்கக் கட்டாயப்படுத்துவது?
மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும்
–உள்ளேயும் வெளியேயும் -- விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் இவை. அரசின் பிற்போக்குத்தனமான
கொள்கைகளை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது.
நாமிருக்கும்
நாடு நமதென்ப தறிவோம்!
தேசம் காக்க ஒன்றிணைந்து எழுவோம்!
செய்தி : நியூ ஏஜ்
தமிழில் : வெ. நீலகண்டன், கடலூர்
No comments:
Post a Comment