தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, January 25, 2019


1950 சனவரி 26 ஆம் நாளில் நம் நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளையே நாம் குடியரசு தினமாக வருடம் தோறும் கொண்டாடி வருகிறோம்..
இந்திய சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும்.  ஆனால் குடியரசு தினம் எதற்கு கொண்டாடப்படுகிறது என்று நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது நாம் வரலாற்றில் கொஞ்சம் பின் நோக்கி போகலாம்.
ஐரோப்பாவைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகீசிய மாலுமியிடமிருந்து முதலில் இக் கட்டுரையைத் தொடங்குவது உத்தமம்.
வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு கடல் வழிப்பயணமாக செல்லும் போது இந்தியாவைக் கண்டறிந்தார். இந்தியாவின் வளமான செல்வ செழிப்பு ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியதால் முதன் முதலாக வணிகர்களாக உள்ளே நுழைந்தனர். அதன் தொடர்ச்சியாக முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவின் கடலோரப்பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்கள் வணிக முகாம்களை அமைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு பின்னால் அவர்களின் பங்காளிகளான டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் இந்தியாவில் தங்கள் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர்.
நம் நாட்டு மன்னர்களுக்குள் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள்.
குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
அதற்கு பின் நடந்ததெல்லாம் வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.
அதற்கு பிறகு வந்த தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து மாண்டு போயினர்.
சரி இப்போது குடியரசு தினத்துக்கு வருவோம்.
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் "பூரண சுயராஜ்யம்" (முழுமையான சுதந்திரம் ) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக "சுதந்திர நாளாகக்" கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள் "மக்களாட்சி" என்பதாகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளலாம் . இந்த முறை குடியாட்சி எனப்படுகிறது.
"மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு" என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தான்.
அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
இதன் மூலமாக மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்தது.
சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் ஜனவரி 26 .
சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது.
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
இன்றைய இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இந்தியா சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைவோம் .
அனைவருக்கும் 69வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....
ஜெய்ஹிந்த்...!!!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR