வேண்டுகோள்!
சமீப காலமாக நமது வெப் சைட்டுகளில் உலா வரும் செய்திகளில் சில, பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இது எங்கே, துவங்கியது? இதை எப்படி முடிப்பது? என்று தெரியாமல் தொடர்கிறது. இதிலிருந்து வெளிவருவது எப்படி? எப்போது முடித்துக் கொள்வது? யார் முடித்து வைப்பது என்பது போன்ற குழப்பமான சூழ்நிலையும் நீடிக்கிறது.
நமது அகில இந்திய போராட்டம், அதை ஒட்டி எட்டப்பட்ட ஒப்பந்தம், ஒப்பந்தத்தை ஒட்டி வந்த விமர்சனம் என்று தொடங்கி, விமர்சனம் தனி நபர் விமர்சனமாக மாறி, விமர்சனம் - எதிர் விமர்சனம் என விஸ்வரூபம் எடுத்து,
எது குறித்து விமர்சனம் எழுந்ததோ, அது பின்னுக்குத் தள்ளப்பட்டு, விமர்சனம் திசை மாறிப் போய்விட்டது. இந்த விமர்சனங்கள் பொது எதிரியான அரசும், அரசின் ஊழியர் விரோதக் கொள்கையும் என்ற நிலையில் இருந்து நம்மை விலக்கி வெகு தூரத்துக்கு கொண்டு வந்ததோடு, நமக்குள்ளேயே மன வருத்தங்கள் மற்றும் புரிதலை பாழாக்கும் சூழ்நிலையில் நிறுத்தியுள்ளது.
போராட்ட குணமும், தியாகமும், தோழமையோடு விட்டுக் கொடுத்து பழகும் பாரம்பரியமும் கொண்ட நமது சங்கத்தினை / நமது தலைவர்களை விமர்சிக்க போட்டிச் சங்கங்களுக்கு உரிமை கிடையாது. அதே நேரத்தில் நமது வெப் சைட்டுகளில் நடத்தும் விமர்சனப் போராட்டத்தைப் பார்த்து போட்டி சங்கங்களின் மத்தியில் நமது சங்கம் ஏளனப்படுத்தப்படுகிறது. NFTE காரர்கள் தங்களுக்குள்ளாகவே முட்டி மோதிக் கொள்கிறார்கள் என்று ரசிக்கிறார்கள். அவர்கள் ரசிப்பதில் நமக்கு ஆச்சரியம் எதுவுமில்லை.
நமது முன்னாள் தலைவர்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களும் - மறைந்த தலைவர்களும் செய்திட்ட தியாகம், சகிப்புத் தன்மை இவை யாவற்றையும் நாம் மறக்கவும் இல்லை. அதற்கு நிகராக தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள் யாவரும் தியாகத்தில், போராட்ட குணத்தில், விட்டுக் கொடுப்பதில், அன்பு காட்டுவதில், அரவணைப்பதில், பிறர் துன்பம் துடைப்பதில் நிறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.
பெரும் குற்றவாளிகளாக நாங்கள் நிற்கிறோம். காரணம் உங்களுக்கு அடுத்த தலைமுறையினராகிய நாங்கள் உங்களின் தியாகம் போற்ற மறந்து, உங்களின் நலனைக் காட்டிலும், எங்களின் கோரிக்கை பற்றியே உங்களிடம் கேட்டிருக்கிறோம்.
தலைவா! உடல் நலமாய் இருக்கின்றீர்களா? எனக் கேட்டதில்லை. எந்தச் சூழலில் உள்ளீர்கள் எனப் பார்த்ததில்லை. எங்கள் பிரச்சினையைப் பற்றியே பேசி இருக்கிறோம்.
முன்னாள் தலைவர்களின் தியாகத்தை / வீரத்தை போற்றிய நாம் / நாங்கள் நிகழ்கால இயக்கக் கர்த்தாக்களை, அவர்தம், தியாகத்தை, வீரத்தை போற்ற மறந்த குற்றவாளிகள்.
தற்போதைய சூழலில், அனைவரது வேண்டுகோள் யாதெனில், போட்டிச் சங்கங்களின் பேச்சுக்கு இடமளிக்காமல், நமக்குள்ளாகவே பேசித் தீர்ப்போம் பிரச்சினைகள் எதுவாகினும்!
எனவே, ஆரோக்கியமான விவாதத்தை அரங்கத்துள் நடத்துவோம்! எதிரிகளின் வாயடைப்போம்!!
தலைவர்களே! உங்களின் தொழிற்சங்க / அரசியல் மாணவர்கள் நாங்கள். உங்களின் அடி ஒட்டி நடப்போம். நடந்ததை மறந்து நற்செய்தி கூறுவோம்!