ஈயமும் பித்தளையும்!
By
தினமணி
First Published : 27 November 2012 12:35 AM IST
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு
அனுமதி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து
வருவதால் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாம் நாளாக
முடங்கியது.
இப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வுகாண, திங்கள்கிழமை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படாததைக் காணும்போது, சென்ற மழைக்காலக் கூட்டத் தொடர் போல, குளிர்காலக் கூட்டத் தொடரும் ஒரு பணியும் நடைபெறாமலேயே முடிந்துபோகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
நாடாளுமன்ற நடைமுறை விதிஎண் 184-ன் கீழ், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதம் நடத்தவும், வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்திய அரசோ, விதி எண் 193-ன் கீழ் விவாதம் நடத்தலாம், ஆனால் வாக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்கிறது. விவாதத்தை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்ட நிலையில், "வாக்கெடுப்பு' பிரச்னையாவதற்குக் காரணம் அரசியல்தான்.
விதிஎண் 184-ன் படி பாஜக கோரிக்கையை அரசு ஏற்கும் என்றால், வாக்கெடுப்பு நடத்த அரசு ஏன் தயங்க வேண்டும் என்று கேட்கலாம். மத்திய அரசு இதற்கு இணக்கம் தெரிவிக்கத்தான் போகிறது. ஆனாலும், எதிரியை வேண்டுமென்றே முன்னேறவிட்டு, பிறகு தாக்கித் தோல்வியுறச் செய்யும் உத்தியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கையாளுகிறது என்றுதான் தோன்றுகிறது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிகள், வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு. அப்படியே அவர்கள் எதிர்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து அரசைக் காப்பாற்றக்கூடும். அதுவும்கூட அரசுக்குப் பின்னடைவுதானே என்பதும், அப்படிச் செய்வதால், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநிலக் கட்சிகளின் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான எதிர்ப்பு போலித்தனமானது என்பது வெளிச்சம் போடப்படும் என்பதால், அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட மாட்டார்களா என்பதும்கூட எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
விதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு "விருந்தும்', சிலருக்கு "மருந்தும்' ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக்கொள்வதற்கான காலஅவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கேகூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது.
மத்திய அரசுக்கு இதனால் இன்னொரு ஆதாயமும் உண்டு. குளிர்காலக் கூட்டத்தொடரையும் முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை அதிகப்படுத்த முடியும். அத்துடன், வாக்கெடுப்பு அரசுக்கு ஆதரவாக முடியும்போது, "இதற்காகவா இவ்வளவு நாள் நாடாளுமன்றத்தை முடக்கி வீணடித்தார்கள்?' என்று எதிர்க்கட்சிகளின் மீது மக்களுக்கு எரிச்சல் மேலும் அதிகரிக்கும். அதற்கான தந்திரமாகக்கூட இது இருக்கலாம்.
சென்ற ஆண்டு, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அரசு அறிவித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியது, அப்போது மத்திய அரசில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே! கூட்டணியை விட்டுத் திரிணமூல் காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் மத்திய அமைச்சரவை, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது அந்தந்த மாநிலத்தின் விருப்பத்துக்கு உரியது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று கூறியபோது, 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எடுத்த எடுப்பில் ஆதரவு தெரிவித்துவிட்டன. அதன் பிறகு எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு வேலைநிறுத்தம் மிகவும் பலமானதாக இருந்திருந்தால், மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும். ஆனால், உண்மை அவ்வாறாக இல்லை.
அடுத்ததாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா இரு மாதங்களுக்கு முன்பே தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தனது அரசியலை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே அவர் இந்த நாடகம் ஆடுகிறார் என்று குற்றம்சாட்டிய இடதுசாரிகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிவித்தனர், சரி. ஆனால், மற்ற கட்சிகள் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக்கூடிய எண்ணிக்கை பலம் பாஜகவுக்கு இருக்கும்போது, அவர்கள் ஏன் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தைக் கேட்டு, நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருக்க வேண்டும்? நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி கண்டால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானம். ஆனால், விதிஎண் 184-ல் தோற்றுப்போனால், அது வெறும் அன்னிய நேரடி முதலீட்டில் கட்சிகளிடையே கருத்துமாறுபாடு மட்டுமே! ஒருவேளை தீர்மானம் நிறைவேறினாலும், அதனால் ஆட்சி கவிழ்ந்துவிடப் போவதில்லை. இன்னும் ஆறு மாதத்திற்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாத நிலைமையை திரிணமூல் காங்கிரஸின் தீர்மானத்தை ஆதரிக்காமல் எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரட்சகர்கள் வேறுயாருமல்ல, எதிர்க்கட்சிகள்தான். அதிலும் குறிப்பாக, பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும்!