இதோ இங்கு புதிய விடியல் பிறக்கும் அறிகுறியாய் வெப்பம் தெரியத் தொடங்கிவிட்டது!
குமுறிய மக்களின் கூக்குரல் கேளாமல் தவறிய சட்டத்தை தந்திட நினைத்தனர்! குடிமக்களை குரங்குகள் என்று நினைத்தனரோ? அரும்மக்களின் அடிவயிறு பற்றி எரியவா அரியாசனத்தில் அமர்ந்தாய்?
மக்கள் வயிற்றில் பற்றவைக்க நினைத்த நெருப்பு, இதோ அவர்களின் சட்டத்தையே இப்போது பற்றி எரிக்கிறது! மக்கள் மடையர்களென்றெண்ணி மந்தமாய் மந்தகாசம் செய்தோர் மண்டையில் நறுக்கென உறைத்தது; கருத்தில்லாத ஒரு சட்டத்தை கருக்கியது.
ஊழ்வினை ஊர்ந்து வந்து ஊட்டியது போதும் என்று, ஊழலின் வினையை விதைத்த நொடியே கொடுக்க முயலும் அற்புதமான ஜன் லோக்பால் சட்டததை, தடுக்க நினைத்த தற்குறிகளுக்கு சவுக்கடியை தந்து விட்டது, மக்களின் ஒற்றுமை.
மூவண்ணம் உயரப் பறக்க; கை வண்ணம் பொய்யை கருக்க; தீ வண்ணம் கண்ணில் பதித்து, வந்தே மாதரம் உறைத்த வண்ணம் மக்கள் கொடி பிடித்தது கண்கொள்ளா காட்சி.
அன்று வெள்ளையனை விரட்டிய இரு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஐயா கல்யாணமும், ஐயா லஷ்மிகாந்பாரதியும் இன்று கொள்ளையனை விரட்ட குரல் கொடுத்தது முடவரையும் எழுத்து நிற்கச் செய்யும்.
காலம் மாறினாலும் கோலம் மாறாதவராய் இருக்கும் ஊழல் பேய்களை, கோலம் மாறினாலும் கொள்கை மாறாத இளைஞர் கூட்டம் உலுக்கி எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆன்று ஜன் லோக்பால் நிறுவப்படும், ஊழல் ஒழிக்கப் படும், லஞ்சம் அழிக்கப் படும், குறைகள் களையப்படும், பொய்மை பொசுக்கப் படும், நம் தேசியக் கொடி மட்டும் உயர்த்திப் பிடிக்கப்படும்!
வந்த்தே மாதரம்! வாழ்க பாரதம்!