செப்டம்பர்-2 அகில இந்திய வேலை நிறுத்தம்! அவசியம் தானா?
தொழிற் சங்கங்களால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கும் 02.09.2015 அகில
இந்திய வேலை நிறுத்தம் எதற்காக? இது அவசியம் தானா? என்ற எண்ணம் அனைவரது
மனதிலும் வந்து போவது இயற்கையே!
மாறிவரும் இந்திய பொருளாதார மற்றும் தொழிற் சந்தைகளில் இப்போது ஒரு நிச்சயமற்ற
தன்மை நிலவுகிறது. தொழிலாளர்களுக்கு ஆதரவான நீதிமன்றத் தீர்ப்புகள் வந்த காலம்
மலையேறிப் போனது. பெரு முதலாளிகளுக்கு ஆதரவான தீர்ப்புகளே இப்போது அதிகம்
வெளியாகிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் புறக்கணிக்கப் படுகின்றன.
இதனை தொழிலாளர் வர்க்கம் முற்றிலும் உணர்ந்துள்ளதா என்பது விவாதத்திற்கு உரிய
ஒன்றாகும்.
இந்திய தொலை தொடர்புத் துறையில் (BSNL) தனியார் மயம் வந்த போது நாம் சற்று விலகி
யிருந்தோம். இன்று BSNL-ன் அடிப்படை கட்டமைப்பை பயன்படுத்தி தொழில் செய்து
கொண்டு தனியார் கார்ப்பரேட் அலைபேசி நிறுவனங்கள் BSNL-ஐ நசிக்க செய்து விட்டது.
அரசின் அதிக வரி விதிப்பினால் பெட்ரோலியப் பொருட்களின் விலை இந்தியாவில்
விண்ணில் பறந்தாலும், அலைபேசிக் கட்டணம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில்
குறைவாக இருப்பதற்கு BSNL லே காரணம்.
ரயில்வே தொழிலாளர்கள் போராடியபோது நாம் சற்று அந்நியப்பட்டு இருந்தோம். Premium
ரயில்கள், Meals on wheels என தனியார் மயம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முத்தாய்ப்பாக இரயில்வேயை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கினை மத்திய
ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இது நடந்தால் சாமானியர்கள் இரயிலில்
பயணம் மேற்கொள்வது எட்டாக் கனியாகி விடும்.
இன்சூரன்ஸ் பணியாளர்கள் தொடர்ந்து போராடியபோது நாம் சற்று விலகியிருந்தோம்.
இப்போது வந்துவிட்டது 49 சதவீத அந்நிய முதலீடு அவசரச் சட்டம். நமது முதலீட்டை
அன்னிய நாடுகளுக்கு அனுப்ப நினைக்கும் நயவஞ்சகச் செயல் அல்லவா இது.
பி.சி நாயக் கமிட்டி அறிக்கையை எதிர்த்து வங்கிப் பணியாளர்கள் போராடிய போது பல
பொதுமக்கள் நமக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றிருந்தார்கள். இன்று 10-க்கும்
மேற்பட்ட தனியார் வங்கிகள் துவங்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
புதிய பொருளாதார மண்டலத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட நோக்கியா, பாக்ஸ்கான்
இங்கு மூடிவிட்டு, மகாராஷ்டிராவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என இதே தொழிலை
துவங்கியுள்ளது. நிஸ்ஸான் நிறுவனம் பலரை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
நாட்டின் கோவில்கள் எனக் கருதப்பட்ட BHEL போன்ற அரசின் பொதுத்துறை
நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது.
அன்றாடம் மக்கள் வாழ்வோடு ஒன்றியுள்ள தரைவழிப் போக்குவரத்து, சரக்கு
போக்குவரத்து என அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினரின் சேமநல நிதிப் பணம் 15% பங்குச்
சந்தைகளில் முதலீடு செய்ய மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. யாருடைய பணத்தை
யார் முதலீடு செய்வது? மேலைநாடுகளில் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த சூதாட்டச்
செயலால் பணம் "ஸ்வாஹா" ஆனதுதான் மிச்சம்.
எனவே, இது வெறும் தொழிற்சங்கங்களின் போராட்டம் எனக் கருதாமல் ஒவ்வொரு
இந்தியக் குடிமகனின் நலம் காக்கும் போராட்டம் எனக் கருதிட வேண்டும். அரசின்
கவனத்தை ஈர்ப்பதற்காக நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டம்
வெற்றியடைய பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வேண்டும்.
வெற்றியடைய பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வேண்டும்.
No comments:
Post a Comment