வங்கிச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்:
வங்கி ஊழியர்கள் நாளை ஸ்ட்ரைக்
வங்கித் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் சட்டத் திருத்த
மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்
சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்கிப்பணிகள் நாளை பாதிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த
மசோதா, புதிய தனியார் வங்கிகளை நிறுவுவதற்கு வகை செய்கிறது. இந்த மசோதா
மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக 6 ஆயிரம்
வங்கிக் கிளைகள் ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்படும் என்றும், இந்த நிதியாண்டில்
84 ஆயிரத்து 500 ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்
தெரிவித்தார்.
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கிகளை
இணைப்பதற்கு எதிராகவும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக, பொதுத்
துறை வங்கிகளின் நான்கு முக்கிய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு,
அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய
சங்கம் ஆகியவை இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் ஐந்து லட்சம்
ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை
வங்கிச்சேவைகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment