சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்
By தஞ்சாவூர்
First Published : 20 December 2014 12:51 AM IST
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 19 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் ஒரே மாதிரியான பணி செய்வோருக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும்.
ராஜீவ் ரஞ்சன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் டிச. 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு 25 சத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனத் தமிழக அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசின் இந்தத அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதில் வெள்ளிக்கிழமை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன் கஞ்சித் தொட்டியைத் திறந்து வைத்து, தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். பலத்த மழை பெய்த நிலையிலும் இப்போராட்டத்தில் ஏராளமானோர் குடை பிடித்தபடி கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment