தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, July 20, 2015


ராஜதந்திர வெற்றி!

 அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும், உலகின் மிகப் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான ஈரானுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உடன்பாடு உலகுக்கு ஒரு மிகப் பெரிய உண்மையை உணர்த்துகிறது. ராணுவத் தாக்குதலையும், படையெடுப்புகளையும், தடைகளையும்விட பேச்சுவார்த்தைகள்தான், நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கும், சர்வதேசச் சர்ச்சைகளுக்கும் சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் அது.
 ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் இடையேயான உறவு, 1979-இல் அமெரிக்க ஆதரவாளரான ஈரான் அரசர் ஷாவை அகற்றி, அயதுல்லா கொமேனியின் ஆதரவாளர்களான இஸ்லாமியப் புரட்சியாளர்களின் ஆட்சி நிறுவப்பட்டது முதல் துண்டிக்கப்பட்டது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சூறையாடப்பட்டதை, அமெரிக்கா தனது தேசத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதியதிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பகை தொடங்கியது.
 பெட்ரோலிய வளம் மிகுந்த ஈரான் தங்களது கட்டுப்பாட்டிலிருந்து அகன்றதை அமெரிக்காவும், ஏனைய மேலை நாடுகளும் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலைமை. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் மீறி, மத்திய ஆசியாவில் ஈரான் ஒரு வலிமையான நாடாகத் தொடர்ந்ததற்கு அந்த நாட்டிலிருந்த எண்ணெய் வளம்தான் காரணம். ஆனால், சமீபகாலமாக ஈரான் தடுமாறத் தொடங்கி இருக்கிறது.
 ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடையும், மேலை நாடுகளின் விரோதமும் அகன்றுவிட்ட நிலையில், இனிமேல் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஈரானுடன் உறவு வைத்துக் கொள்ள முடியும். இயற்கை வளம் மிகுந்த, குறிப்பாக பெட்ரோலிய வளம் மிகுந்த ஈரானில் உலக நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும். பெட்ரோலிய உற்பத்தியை நவீனப்படுத்தும்போது, மீண்டும் ஈரான் உலகின் முக்கியமான பெட்ரோலிய ஏற்றுமதியாளராக மாற முடியும்.
 இப்போது ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தப்படி, ஈரானின் அனுமதியுடன் ஐ.நா. சபையின் கண்காணிப்பாளர்கள் அந்த நாட்டின் ராணுவத் தளங்களைச் சோதனையிடலாம். ஒருவகையில் இது ஈரானுக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் என்றாலும், உடன்படிக்கை ஏற்பட இந்த நிபந்தனைதான் காரணம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஈரான் ஆயுதங்கள் வாங்குவதற்கும், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு விண்கலச் சோதனைகள் நடத்துவதற்குமான தடை நீடிக்கும் என்பதும் உடன்படிக்கையின் முக்கியமான அம்சங்கள்.
 அமெரிக்க மக்களவையில் இருக்கும் குடியரசுக் கட்சியினரும், ஆளும் ஜனநாயகக் கட்சியிலேயே சில உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்குமானால், அதிபர் பராக் ஒபாமா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கீகாரம் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல, டெஹ்ரானிலும் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் ஈரானின் அதிகாரத் தலைமையான தலைவர் அலி ஹொசைனி கமேனியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
 இந்த உடன்படிக்கை ஏற்படுவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானியும்தான் முக்கியக் காரணம். அவர்களது தீர்க்கதரிசனமும், அலி ஹொசைனி கமேனியின் ஆசியும் இருந்ததால்தான் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்த முடிந்தது. எல்லாவற்றையும்விட முக்கியமான காரணம், அதிகரித்து வரும் "இஸ்லாமிய தேசம்' என்கிற பயங்கரவாத அமைப்பின் அசுர வளர்ச்சி என்பதையும் மறந்துவிடக் கூடாது. "இஸ்லாமிய தேசம்' வலுவடைவதைத் தடுத்தாக வேண்டிய நிர்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும், ஈரான், இராக் போன்ற மேற்காசிய நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
 அமெரிக்கா - ஈரான் ஒத்துழைப்பு என்பது மேற்கு ஆசியாவிலுள்ள ஏனைய அமெரிக்க நட்பு நாடுகளுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒப்பந்தத்தின் விளைவாக ஈரான் வலிமையான சக்தியாக உருவெடுத்துவிடும் என்பது ஈரானுக்கு எதிரான வளைகுடா நாடுகளின் அச்சம். அவர்கள் தங்களது ராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்வது மட்டுமல்ல, சவூதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானின் உதவியுடன் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுமேயானால், அது இந்தியாவுக்கேகூடத் தலைவலியாக மாறலாம்.
 அப்படி எதுவும் நிகழாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்பது ஒருபுறம் இருக்க, இனிமேல் வெளிப்படையாக இந்தியாவும், ஈரானும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிகோலி இருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்கிற காரணத்துக்காகவே ஈரான் உடன்படிக்கையை உலகம் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR