தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, July 19, 2015


அநாகரிகத்தின் அடையாளம் - தனிநபர் வழிபாடு

First Published : 15 July 2015 01:34 AM IST
அரசு அலுவலர்களுக்கு மத்தியில் ஒரு சொலவடை உண்டு. அலுவலகங்களில் ஒழுங்காக வேலை செய்பவருக்கு வேலையைக் கொடு, வேலை செய்யாதவருக்குச் சம்பளத்தைக் கொடு என்பதே அது. 
 தலைமைப் பண்புகள் அனைத்தும் பொருந்திய ஒருவரைக் கண்டுகொள்ளாமல் போ என்பதும், தகுதியே இல்லாத ஒருவரை முட்டுக் கொடுத்தும், சப்பைக்கட்டுகள் கட்டியும் தலைவராக்கு என்பதும் சொல்லப்படாத வழக்காறு ஆகும்.
 தனிநபர் வழிபாட்டின் (hero worship) மூலம் மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால், மகேசனை ஏமாற்ற முடியாது என்றார் அப்பரடிகள். மக்களே பொன்னார் சடைப் புண்ணியன், நெஞ்சுக்குள்ளே உருகி உருகி தூய்மையான பக்தி செய்யும் அடியார்கள் நெஞ்சுக்குள்தான் எழுந்தருளுவான். 
 நெஞ்சுக்குள்ளே வஞ்சகத்தை வைத்துக் கொண்டு, பூவும், நீரும் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்பவர்களைக் கண்டு, அவர்களுடைய செயலுக்கு வெட்கப்பட்டு, அவர்களைப் பார்த்து ஏளனப் புன்முறுவல் புரிவான் (ஐந்தாம் திருமுறை, தனிக்கநற்தொகை - 2 ஆம் பதிகம்) எனப் பாடியிருந்தாலும், கபட வேடதாரிகள் தங்கள் தனிநபர் வழிபாடுகளை மனிதர்களிடத்தும் விடுவதில்லை, மகேசனிடத்தும் விட்டு வைப்பதில்லை.
 இந்த தனிநபர் வழிபாடு இறைவனுக்கு நிகழ்த்துவதையே அருளாளர்களில் ஒருவராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குப் பிடிக்கவில்லை. எனவே, "ஏ, தில்லை நடராசனே! உன்னை ஆஹா - ஓஹோவென்று புகழ்ந்து திருவாசகத்தை மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். 
 அப்படிப் பாடியதை அவரே சொல்ல, நீ உன் திருக்கையால் எழுதலாமா? உன்னுடைய புகழை நீயே வெட்கமின்றி எழுதலாமா? நீ புகழ்ச்சி விருப்பன் போலும். உனக்கு இது இழிவாகத் தெரியவில்லையா?' (நால்வர் நான்மணி மாலை, பாடல் 24) என்று இறைவனுக்குச் சொல்வதுபோல், மானுடத்துக்குச் சொல்கிறார் அருளாளர்.
 தனிநபர் வழிபாட்டின் அபாயத்தை, நாடு விடுதலை அடைந்த காலத்திலேயே நன்குணர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கரும், ஜவாஹர்லால் நேருவும். 25.11.49இல் தாம் வரைந்த அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவினை வழங்கும்போது, எதிர்காலத்தில் இந்நாட்டுக்கு நேரக்கூடிய மூன்று அபாயங்களைச் சுட்டிக் காட்டுகிறார். (1) தனிநபர் வழிபாடு, (2) வேலை நிறுத்தம், (3) புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
 இந்த மூன்றிலும் தனிநபர் வழிபாட்டால் நேரக் கூடிய சீரழிவுகளை வற்புறுத்திச் சொல்கிறார் அம்பேத்கர். பிரிட்டீஷ் தத்துவவியலாளர் ஜான் ஸ்டூவர்ட் மில், ஐரிஷ் நாட்டுத் தேச பக்தராகிய டேனியல் ஓ கன்னல் ஆகிய அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார். 
 எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர் காலடியின் கீழ் உங்கள் சுதந்திரங்களை அடகு வைப்பீர்களேயானால், அவர் அடுத்த நாளே சர்வாதிகாரியாகிவிடுவார் என்கிறார் ஜான் ஸ்டூவர்ட் மில்.
 "தனிநபர் வழிபாடு மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில்தான் ஓங்கி நிற்கிறது. இந்தியர்களே, ஆண்டவனை நோக்கி நீங்கள் ஆராதனை செய்தால், அது உங்களுக்கு ஈடேற்றத்தைத் தரும். அரசியல்வாதிகளைப் போற்றி புகழ்ந்தால், அது அவர்களை எதேச்சாதிகாரி ஆக்கிவிடும்' என்பார் டேனியல் ஓ கன்னல். இவ்விரு பெருமக்களையும் எடுத்துக்காட்டித்தான் அம்பேத்கர் முன்னெச்சரிக்கை செய்தார்.
 பண்டித ஜவாஹர்லால் நேரு மற்றவர்களின் புகழுரைகளால், தமக்குத் தன்முனைப்பு வந்துவிடக் கூடாது என்று மிகவும் விழிப்புணர்வோடு இருந்திருக்கிறார். ஒருமுறை தம்மைப் பற்றித் தாமே ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அதனைக் கல்கத்தாவில் இருந்து வெளிவரும் "மாடர்ன் ரிவியூ' எனும் பத்திரிகைக்கு அனுப்பிவிடுகிறார். அந்த மொட்டைக் கடிதத்தைச் சாணக்கியன் எனும் பெயரில் எழுதினார். 
 அக்கடிதத்தில் கண்ட செய்தி, "நேருவே உனக்குச் சகிப்புத்தன்மை கிடையாது. நீ ஓர் ஆத்திரக்காரர், அவசரக்காரர். இப்படியே போனால் ஓர் எதேச்சாதிகாரி ஆகிவிடுவீர். அப்படி ஆனால், ஜூலியஸ் சீசருக்கு நேர்ந்த கதிதான் தங்களுக்கும்' என்பதாகும். அப்பத்திரிகை நேருவைப் பேட்டி காணும்போதுதான் உண்மை வெளிப்படுகிறது, நேரு பெருமானாகிய யானை, தம்மை அடக்குவதற்குரிய அங்குசத்தையும் தம் கைவசமே வைத்திருந்திருக்கிறது.
 தனிநபர் வழிபாட்டின் விபரீதத்தை நம்மாழ்வாரும் நன்குணர்ந்திருக்கிறார். "புலவர் பெருமக்களே, போலி மனிதர்களைப் பொய்யாகப் பாடி, நீங்கள் பெறும் பொருள் எத்தனை நாளைக்கு உங்களுக்கு வரப்போகிறது? என்னைப் பார்த்தீர்களா, நான் எந்த மனிதனையும் பாட மாட்டேன் எனும் பொருளில், சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன், என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள், மன்னா மனிதரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்' என்று தனிநபர் வழிபாடு செய்வதன் இழிவை எடுத்துரைக்கிறார்.
 வீணர்களை தனிநபர் வழிபாடு செய்து பாடுவதில் எந்தப் பயனும் இல்லை என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் நொந்து வெந்து பாடுகிறார். "மிடுக்கில்லாதானை வீமனே, விறல் விசயனே வில்லுக்கு இவனென்று, கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை ..., வஞ்சநெஞ்சனை, மாசழக்கனைப் பாவியை வழக்கில்லியைப் (வழக்கிலி - நீதியில்லாதவன்) பஞ்ச துட்டனைச் (பஞ்சமா பாதகன்) சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இல்லை' என்று பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும், அதனால் பயனில்லை என்று வருத்தப்படுகிறார் சுந்தரர்.
 சரபோஜி மன்னன் தியாகப் பிரம்மத்துக்கு ஜதிபல்லக்கு அனுப்பித் தம்மைப் பாடுமாறு வேண்டுகிறான். தியாகப் பிரம்மத்தின் சகோதரரும் மன்னனைப் புகழ்ந்து பாடினால், பொன்னும் பொருளும் கிடைக்கும் என்றார். 
 ஆனால், தியாகப் பிரம்மம் ராமனைப் பாடிய வாயால், மனிதனைப் பாட மாட்டேன். ராம நாமம் தரும் ருசியையும், சுகத்தையும் மன்னர் தரும் பொருள் தருமா? தொண்டுக்கு என்று வந்த ஆஞ்சநேயர் பல்லக்கிலா சென்றார்? இலக்குவன் பல்லக்கிலா சென்றான் (நிதி சால சுகமா இராமு சந்நிதி சேவ சுகமா நிஜமுன பல்கு மனசா) என மறுதலித்தார்.
 "மகாத்மா என்றால், பெரிய ஆன்மா (great soul) என்று பொருள். அது மிகவும் புனிதமான ஒருவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். எனக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. மேலும், நான் ஆன்மாக்கள் எல்லாம் ஒன்று என நினைப்பவன்' எனச் சொல்லி, காந்தியடிகள் மறுத்துரைத்தார். 
 ஆனால், மார்ஷல் சியாங் - கே - ஷேக்கிற்கு 1938-இல் தாகூர் எழுதிய கடிதத்தில், "புத்தருக்கும் இயேசுவுக்கும் பிறகு மானுடம் முழுமைக்குமான அன்பையும் இரக்கத்தையும் பொழிந்தவர் காந்தியடிகள். எனவே, அவரைத் தவிர, வேறு யாருக்கும் மகாத்மா எனும் பட்டம் பொருந்தாது' என எழுதிவிட்டார். சியாங் - கே - ஷேக்கிற்கு தாகூர் எழுதியதன் நோக்கம், அத்தகவல் உலகம் முழுமையும் பரவ வேண்டும் என்பதற்காகத்தான்.
 நம்முடைய காலத்தில் வாழ்ந்து மறைந்த கர்மயோகி சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா. இறப்பிலேகூட தனிநபர் வழிபாட்டை விரும்பாதவர் என்பதற்கு அவர் எழுதி வைத்த உயிலே சான்றாகும். 
 "நான் இறந்தபின் என் உடலை தகனம் செய்ய வேண்டும். அதற்கு விறகு, சந்தனக் கட்டை போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மின்னடுப்பில் தகனம் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகச் சாம்பலை (அஸ்தி) எடுக்கக் கூடாது. அதனை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூடாது. காற்றிலோ, மலையிலோ தூவக் கூடாது' என்பது லோகியா எழுதிய உயில். 12.3.67-இல் அவர் மரணம் அடைந்தபோது, அந்த உயிலில் கண்டவாறு இறுதி மரியாதை செய்தார்கள்.
 நம்முடைய நாட்டில் டாக்டர் பட்டங்கள் மலிவுப் பதிப்புகள் ஆகிவிட்டன. ஆனால், இங்கிலாந்தின் "இரும்புப் பெண்மணி' என வருணிக்கப்பட்ட தாட்சருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க மறுத்துவிட்டது.
 அவருக்குக் கெüரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தை டிரினிட்டி கல்லூரியின் முதல்வர் ஸர் பேட்ரிக் நீல் முன்மொழிந்தார். என்றாலும், அவர் பிரதமராக இருந்த காலத்தில் உயர் கல்விக்குரிய மானியத்தைக் கணிசமாகக் குறைத்ததால் பட்டம் மறுக்கப்பட்டது. 
 டாக்டர் பட்டத்துக்கு ஆதரவு அளித்து வாக்குப் பதிவு செய்தவர்கள் 319 பேர். அவருக்கு எதிராக வாக்களித்தவர்கள் 738 பேர். இறுதியில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே வென்றது. அப்படியொரு நிகழ்ச்சி இங்கு எந்தப் பல்கலைக்கழகத்திலும் நடக்குமா?
 தகுதி வாய்ந்த தலைவர்கள் தனிநபர் வழிபாட்டுக்கு மயங்குவதில்லை. ஆவடி காங்கிரஸ் மாநாடு முடிந்தவுடன், காமராஜர் தலைமையில் காரைக்குடியில் ஒரு கூட்டம் நிகழ்ந்தது. தொடக்கத்தில் பேசவந்த பேச்சாளர் ஒருவர், காமராஜரை இந்திரனே சந்திரனே என வருணிக்கத் தொடங்கிவிட்டார். 
 காமராஜர் அவரைத் தடுத்து நிறுத்தி, "என்னவே, நான் வந்து அரைமணி ஆச்சுன்னேன். நாகபுரி காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சோஷலிச தீர்மானத்தைப் பற்றிப் பேசுன்னேன், தெரிஞ்சா பேசு, என்னப் பத்தித்தான் இங்குள்ள எல்லோருக்கும் தெரியும்னேன், சப்ஜெட்டுக்கு வான்னேன்' என்று தனிநபர் வழிபாட்டில் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார்.
 உண்மைத் தலைவர்கள் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்க மாட்டார்கள். போலித் தலைவர்கள் காகிதப் பூக்களைப் போன்றவர்கள். காகிதங்களுக்கு இயற்கையில் வண்ணங்கள் கிடையாது. ஓவியக்காரன் தூரிகையை எடுத்துத் தீட்டினால்தான் உண்டு. 
 பசு அல்லது எருமை மாடுகளை ஏமாற்றிப் பால் கறக்க விரும்புகிற மாட்டுக்காரர்கள், கையிலே ஒரு பிண்ணாக்குக் கட்டியையும், வைக்கோலால் செய்யப்பட்ட கன்றுக் குட்டியையும் எடுத்துச் செல்வார்கள். கறக்க வேண்டிய நேரங்களில் மாட்டின் வாயிலே பிண்ணாக்குக் கட்டியைத் தடவுவார்கள். பின்னாலே பொய்க் கன்றுக் குட்டிகளைக் காம்புகளில் முட்டச் செய்வார்கள்.
 அதுபோல, போலித் தலைவர்களுக்கு வார்த்தை ஜாலங்கள் பிண்ணாக்குக் கட்டி, உடம்பினுடைய வளைவு நெளிவுகள் வைக்கோல் கன்றுக் குட்டி. கறக்க வேண்டியதைக் கறந்துவிடுவார்கள். எனவேதான், தனிநபர் வழிபாடு எல்லா மட்டத்திலும் கோலோச்சி நிற்கிறது.
 தனிநபர் வழிபாடு நல்லவர்களைப் பொல்லாதவர்கள் ஆக்கும். சனநாயகவாதியைச் சர்வாதிகாரியாக்கும். தனிநபர் வழிபாட்டைப் பெற்றுக் கெட்டுப்போன ஓர் அரசியல்வாதி புலம்புவதாகத் தீபம் நா. பார்த்தசாரதி ஒரு கவிதை எழுதினார். "பழுதின்றித் தொண்டு செய்ய வந்தவனைப் பதவியெனும் சிலுவையினில் அறைந்தே விட்டீர், தொழுகின்ற திருக்கூட்டம் உருவாக்கித் துப்புரவாய்க் காயடித்து மழுங்க வைத்தீர்' என ஓர் அரசியல்வாதியின் தன்னிலை விளக்கமாகப் பாடியது இன்றைய நாட்டு நடைமுறை ஆகிவிட்டது.
 தனிநபர் வழிபாடு ஓர் அநாகரிகத்தின் அடையாளம். சுயநலக்காரர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக ஆடுகின்ற கழைக்கூத்து. இந்த தனிநபர் வழிபாட்டைப் பெறுபவர்களுக்கு வெட்கமில்லை. கொடுக்கிறவர்களுக்கு மானமில்லை. 
 இனிமேல் இந்த நாட்டிலே பிறக்கப் போகின்ற குழந்தைகளின் நெற்றியிலே "பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே' எனும் புறநானூற்று வரிகளைப் பொறித்து அனுப்பினால் நலமாக இருக்கும்.
 தனிநபர் வழிபாடு ஓர் அநாகரிகத்தின் அடையாளம். சுயநலக்காரர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்து கொள்வதற்காக ஆடுகின்ற கழைக்கூத்து.

nandri- DINAMANI.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR