மார்ச் 5, டெல்லி கன்வென்ஷன்
பொதுத் தேர்தலில் நமது கோரிக்கை:டெல்லி கான்ஸ்டிடூஷனல் கிளப் அரங்கில் 10 மத்திய தொழிற்சங்கத் தலைவர்களும் தோழர்களும் ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் 2019 மார்ச் 5 மாநாட்டில் கூடினர். நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நமது கடமையை நினைவூட்டியது மட்டுமல்ல, 17வது மக்களவையை அமைப்பதற்காகப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்காகத் தொழிலாளர்களின் கோரிக்கைப் பட்டியலை இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமை சாசனமாகவும் முன் வைத்துள்ளனர். இது, மத்திய தொழிற்சங்கங்களும் சுதந்திரச் சம்மேளனங்களும் விடுத்துள்ள அறைகூவல்.
மாநாட்டின் முதல் நிகழ்வாக புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த CRPF படைவீரர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். ஏஐடியுசி, சிஐடியு முதலிய10 மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கூட்டுத் தலைமை ஏற்றனர். ஏஐடியுசி-யின் பொதுச் செயலாளர் தோழர் அமர்ஜித் கௌர், ’மாநாட்டின் தீர்மான நகல், தொழிலாளர்களின் கோரிக்கையை உதாசீனம் செய்த மோடி அரசை வீழ்த்தும் ஆயுதமாகட்டும் –தேசத்தைக் காக்கட்டும்’ என்று கர்ஜித்தார்.
சிஐடியு-வின் தோழர் தபன்சென் முதலான தலைவர்கள் உரைகளில் நகல் தீர்மானத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அவர்கள் இந்த அரசின் தோல்விகளைப் பட்டியலிட்டனர். பொய்யான வாக்குறுதிகளில் மீண்டும் ஏமாறாது இருக்க எச்சரித்த அவர்கள், பாஜக அரசு தனது முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மூடி மறைக்க – நமது கவனத்தைத் திசை திருப்ப – பொய்யான தேசபக்தி உணர்வுகளை விசிறிவிட்டு, போர்ப் பதற்றம் என நாடகமாடுவதைத் தோலுரித்தனர். இதற்கு மாறாக, தொழிலாளர்களின் , உழைக்கும் பாட்டாளி மக்களின் கோரிக்கைகளைப் பொதுத் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகளின் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்த கன்வென்ஷன் கூட்டப்பட்டிருக்கிறது என்பதை விளக்கினர்.
வீரம் செறிந்த ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பல இடங்களில் பகுதிவாரி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. எனவே முந்தைய 12 கோரிக்கைகளை விரிவுபடுத்தி ’இந்தியாவிற்கான தொழிலாளர்களின் சாசனம்’ 43 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்ட நான்கு பக்க அறிக்கையில் கோரிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சாசனத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
- இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் (15-வது ILC) சிபார்சின்படி தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணம் செய். உச்சநீதிமன்றத்தின் (ரெப்டகாஸ் & பிரட்) தீர்ப்பும் இதை வலியுறுத்தியுள்ளது.
- தொடர்ந்த பணி இருக்கும் இடங்களில் ஒப்பந்த ஊழியர் முறையைக் கைவிடு. அதுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அத்தகைய ஊழியர்களுக்குச் சமவேலைக்குச் சம ஊதியம் வழங்கு
- சுவாமிநாதன் கமிஷன் சிபார்சின்படி விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கு. பொதுக் கொள்முதல் முறையை வலிமையாக்கு
- விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கு
- விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வரன்முறை, பணிநிலைமை மேம்பாடு, ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்கு
- வேலைஇல்லா திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்து, போர்க்கால அடிப்படையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு
- அனைவருக்கும், அரசு திட்டம் சார்ந்த அனைத்துவகை ஓய்வூதியத் திட்டங்களிலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ6000/= உறுதிசெய்
- காலவரம்புடைய ஒப்பந்த பணி முறையை (ஃபிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட்) உடனடியாகக் கைவிடு
- பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிற்பனை, மற்றும் ஏனைய வழிகளில் விற்பனை செய்வதை நிறுத்து
- பொதுநலன் கருதி (BSNL முதலிய) பொதுத்துறை நிறுவனங்களின் மறுகட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து விரைந்து நிறைவேற்று
- புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்! பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருக !
- தொழிலாளர் விரோதமாக – முதலாளிகளுக்கு ஆதரவாக — தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கைவிடு! நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக அமல்படுத்து!
- பெண் பணியாளர்களுக்கு 26 கால பேறுகால ஊதியத்துடன் கூடிய விடுமுறைச் சலுகையை வழங்கு! குழந்தைக் காப்பக வசதியை ஏற்படுத்து! திருத்தப்பட்ட மகப்பேறு நலச்சட்டத்தினை அமல்படுத்துவதற்காக முதலாளிகளுக்கு அரசு அமல்படுத்த உத்தேசித்துள்ள ஊக்கத் தொகை திட்டத்தைக் கைவிடு
- பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடு. பணியிடங்களில் பெண்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்
- பட்டியலின மக்களின் அரசியல் சாசனம் உறுதியளித்த இடஒதுக்கீட்டை / முந்தைய ஆண்டுகளின் நிரப்பப்படாத காலிப்பணி இடங்களை நிரப்ப முன்னுரிமை வழங்கு! பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்து
- மனித மாண்பிற்கு எதிரான மனிதக் கழிவை மனிதனே சுத்தப்படுத்தும் –சுமக்கும்– கேவலத்தை உடனடியாக ஒழித்திடுக! மலக்குழியில், சாக்கடை கழிவுநீர் தொட்டிகளில் உள் இறங்கி சுத்தப்படுத்தும்போது உயிரிழந்த சுகாதாரப் பணியாளர் குடும்பத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய உரிய இழப்பீடு வழங்கு
- சாலையோர வியாபாரிகளின் நலனை உறுதி செய்! மாநிலங்களில் அதற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றச் செய்
- சாதிக் கலப்பு மற்றும் மதக் கலப்பு (சாதி, மத மறுப்பு) திருமணத் தம்பதியருக்குப் பாதுகாப்பு வழங்கு
- தேசிய மொத்த வருவாயில் 10 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கீடு செய்
- சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை மொத்த வருவாயில் 5 சதமாக உயர்த்து
முதலிய 43 கோரிக்கைகளை மாநாடு பட்டியலிட்டுள்ளது.
நமது நியாயமான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, அதற்கேற்றதொரு அரசை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய மத்திய அரசு நமது கோரிக்கைகளை நிராகரித்தது என்பதற்குச் சாட்சியம் தேவையில்லை. தொலைத்தொடர்பு சரித்திரத்தில் இல்லாத ஒரு காட்சியாக மின்சார கட்டணம் கட்டவில்லை என்று தொலைபேசி நிலையங்கள், தொலைத்தொடர்பு டவர்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட அவலத்தைக் கண்டோம். அரைகுறையாக ஊதியம் வழங்கப்பட்டோம் – நம்மிடம் நமது ஊதியத்தில் பிடித்த தொகை வங்கிகளுக்கு, கூட்டுறவுச் சங்கக் கடன் தவணைகளுக்காக, இன்ஷுரன்ஸ் பிரீமியம் கட்டாது தாமதப்படுத்தினர். இந்த மாதம் அந்த அரைகுறை சம்பளமும் வருமா என ஏங்க வைத்தனர். நாம் கோயிலாக மதித்துப் பணியாற்றும் நம் துறையை மூடிவிடுவார்களோ என்ற வதந்தியை மக்கள் மத்தியில் பரவக் காரணமாய் இருந்து நமது நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சிதைத்தார்கள்.
இது நமது முறை. உரியவர்களுக்கு உரிய முறையில் பாடம் புகட்டுவோம்! எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது! டெல்லி சாசனம் ஆள விரும்புவோர்க்கு ஒரு எச்சரிக்கை!
நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்பவர்கள் உழைப்பாளிகள். ஒரு வர்க்கமாகத் திரண்டு நின்று வருங்கால சமூக அரசியல் மாற்றத்தை முன்னறிவிப்பவர்கள். திக்குத்திசை தெரியாமல் நாடு நாற்சந்தியில் நிற்கும்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வாழ்வு மறுக்கப்பட்டவர்களுக்கும் முன்னேற்றத்திற்கான சரியான பாதையைக் காட்டுவது, பாட்டாளிவர்க்கம். சரித்திரத்தின் வழிநெடுக எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும், எல்லா பக்கங்களிலும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டே வந்திருக்கிறது. நாம் மீண்டும் நிரூபிப்போம்!
No comments:
Post a Comment