தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Wednesday, May 22, 2019
Sunday, May 19, 2019
காங்கிரஸ் கட்சியின் சரியான முடிவு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல், ஒரு முதன்மையான வினாவை நம் முன் வைத்தது. "இத்தேர்தல் இந்தியாவின் இறுதித் தேர்தலாக இருக்க வேண்டுமா அல்லது ஜனநாயகம் தொடர வேண்டுமா?" என்பதே அவ்வினா.
மறுபடியும், பாஜக வெற்றிபெற்று, மோடி இந்தியாவின் பிரதமரானால், மிகப் பெரும்பாலும் அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாக அறிவித்துக் கொள்ளவே வாய்ப்புகள் மிகுதி. ஆதலால், இத்தேர்தலைப் பொறுத்தவரை, யார் அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே கூடுதல் கவனத்திற்கு உரியதாக இருந்தது.
ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரின் இக்கருத்தை நன்கு புரிந்துகொண்ட, காங்கிரஸ் கட்சி, தெளிவாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பியே, தேர்தலில் போட்டியிட்டோம் என்றாலும், அதனை விட, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எங்களின் தலையாய நோக்கம். அதனால், பிரதமர் பதவியை வேறு கட்சிக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக உள்ளோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதே கருத்தை இந்தியாவில் உள்ள வேறு சில பெரிய கட்சிகளும் வெளியிட்டுள்ளன. இந்த நோக்கத்திற்காக மம்தா, மாயாவதி, அகிலேஷ் ஆகியோரைச் சந்திரபாபு நாயுடு பார்க்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
எனவே ஆட்சி அதிகாரம், பிரதமர் பதவி ஆகியனவற்றில் மட்டுமே குறியாக இல்லாமல், நாட்டு நலனில் அக்கறை கொண்டு, காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள முடிவை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
அடுத்த ஆட்சி பாஜகவின் ஆட்சியாக இருக்கக்கூடாது என்பதே நாடு பற்றிய கவலை கொண்ட அனைவரின் கருத்தாகவும் உள்ளது!
தோழர். ஜெகன் பிறந்த நாள்!
17-05-1931
=============================
நேர்மை, ஒழுக்கம், ஆழ்ந்த அறிவு, சகிப்புத்தன்மை இவற்றை தனது வாழ்வின் நெறிகளாகக் கடைபிடித்தவர் தோழர் ஜெகன். அவர் ஒருவருக்குத்தான் தோழர் இனிஷியல் ஆனது. பொதுக்காசில் கை வைப்பது நெருப்பை தொடுவது போன்றது என்பார். அவர் குப்தாவுக்குக் கிடைத்த மாமனிதர்.ஜெகனைப் போன்று ஒருவரைப் பார்க்க முடியாது. குப்தா போல் இனி ஒருவர் பிறக்கப் போவதுமில்லை எனவும் பேசுகிறார்கள். இது சரியான பேச்சா! இது ஒரு தப்பித்தல் கொள்கை ( Escapism ) என்பேன். தானும் சரியாக முயல்வதில்லை, சரியாகும் போக்கில் வளர்பவரையும் அங்கீகரிப்பதில்லை என்றால் எப்படி நல்ல மாற்றம் வாய்க்கும்.
அவர்களைப் பின்பற்ற முடியாதவர்கள், அவரிடமிருந்து தலைமைப் பண்பை கற்றறியாதவர்கள் ஜெகன், ஜெகன் என்று உருகுவதும், அவருக்கு விழா எடுப்பதும் செயற்கையானதே.
ஒரு பாரதிதான். ஒரு பட்டுக்கோட்டையார் தான், ஒரு காந்திதான். அதுபோல்தான் ஜெகனும், குப்தாவும். ஒருவர் போல் மற்றவர்கள் நிச்சயம் உருவாகலாம். உருவாகியும் இருக்கலாம். அதைக் கண்டறிய, ஆதரிக்க, மனமோ, நேரமோ நமக்கு இல்லை. ஆனால் அவர்களே வர முடியுமா? முடியாது.
அன்றைக்கு எளிமை, புன்சிரிப்பு, தியாகம் என்று பன்முகத் தன்மை கொண்ட அவரை ஆதரித்து பின் தொடர்ந்தவர்கள் பலர். ஆனால் அவர்கள் அதைத் தொடர்ந்து தொடரவில்லை.
அவரைப் போற்ற வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று நாம் விரும்பினால் அவர் பிறந்த நாளில், நினைவு நாளில் உறுதி எடுக்க வேண்டும். அவரைப் போல் வாழ்வது, அவரது அணுகுமுறையை கைக்கொள்வது என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அதை நாளையிலிருந்து முயற்சிப்போம்!முனைவோம்!!
நன்றியுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
உலக அன்னையர் தினம்
=====================================
மனித குலம் வாழ்வாங்கு வாழ கிடைத்த வரப்பிரசாதம் மகளிர். அந்த மகளிர் அன்னையர் ஆவதற்குள் எவ்வளவு மாற்றங்களை, இன்னல்களை தாண்டி வர வேண்டியிருக்கிறது. அதன் பெருமையை உணர்த்திடத்தான் கம்பனால் ராமாயணம் எழுதப்பட்டு பிறன் மனை புகாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒப்பற்ற ஒழுக்க மாண்புகள் உருவாக்கப்பட்டது.எந்த நாட்டிலும் இல்லாத கலாச்சார மரபுகள் நமது தேசத்திற்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையை எய்தியவர்கள் நாம்.
ஆனால், எந்த நாட்டிலும் இல்லாத சாதி அடுக்குகள், சாதி, மத வெறிகள் நமது தேசத்தில் தான் அதிகம்.
இதைப் பிழைப்புக்காக மதவாதிகளும், அரசியல்வாதிகளும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பிழைக்க ஆயிரம் வழிகள் இருந்தும் இத்தகைய ஈனப் பிழைப்பு தேவைதானா? என்ற கேள்வியை பலரும் கேட்காமலிருக்கிறார்களே! இது எவ்வளவு வேதனை!
பகுத்து ஆய்ந்து முடிவெடுக்கும் திறன் மனிதகுலத்துக்கு மட்டுமே இருந்து என்ன பயன்.
வாராது வந்த மாமணியாக உதித்த, மனித குலத்தைத் தழைக்கச் செய்யும் மகளிர்கள் நமது நாட்டில் வதைபடும் கொடுமை எப்போது தீரும்.
அஸ்வினி, நந்தினி, ஆஷிபாவுக்குப் பின் இன்று பொள்ளாச்சி பெண்கள் என்று பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வதற்கு யார் காரணம்!
அரசியல்வாதிகள் மட்டும்தானா! சமூக விரோதிகள்தான் காரணமா!
அவர்கள் மட்டுமல்ல நண்பர்களே. நாமும் ஒரு வகையில் குற்றவாளிகள் தான்.
நம் வீட்டுப் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் அது போதும் என்று நினைப்பதும், மற்ற குழந்தைகளுக்கு பாதிப்பு என்றால் ஒரு உச்சு கொட்டிவிட்டுப் போகிறோமே! அது முறைதானா? இது மிகப்பெரிய தவறு. இம் மாதிரிச் சம்பவங்கள் நாளைக்கு நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். இதையெல்லாம் ஏன் நாம் யோசிப்பதேயில்லை?
ஆண்களைப் போல் பெண்களாலும் பணியாற்றவோ, சம்பாரிக்கவோ முடியும்.
ஆனால், அதையும் தாண்டி பெண்களிடம் அமைந்துள்ள பொறுப்பு, பொறுமை, தினசரி வாழ்க்கையில் அவர்கள் செய்யும் பலவிதமான செயல்கள், எதையும் நம்மால் செய்ய முடியாது என்பதை, நாம் எப்போது உணரப் போகிறோம்.
இந்த அன்னையர் தினத்தில் அவற்றை எண்ணிப் பார்ப்போம் தோழர்களே!
அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
Subscribe to:
Posts (Atom)