உலக அன்னையர் தினம்
=====================================
மனித குலம் வாழ்வாங்கு வாழ கிடைத்த வரப்பிரசாதம் மகளிர். அந்த மகளிர் அன்னையர் ஆவதற்குள் எவ்வளவு மாற்றங்களை, இன்னல்களை தாண்டி வர வேண்டியிருக்கிறது. அதன் பெருமையை உணர்த்திடத்தான் கம்பனால் ராமாயணம் எழுதப்பட்டு பிறன் மனை புகாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒப்பற்ற ஒழுக்க மாண்புகள் உருவாக்கப்பட்டது.எந்த நாட்டிலும் இல்லாத கலாச்சார மரபுகள் நமது தேசத்திற்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையை எய்தியவர்கள் நாம்.
ஆனால், எந்த நாட்டிலும் இல்லாத சாதி அடுக்குகள், சாதி, மத வெறிகள் நமது தேசத்தில் தான் அதிகம்.
இதைப் பிழைப்புக்காக மதவாதிகளும், அரசியல்வாதிகளும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பிழைக்க ஆயிரம் வழிகள் இருந்தும் இத்தகைய ஈனப் பிழைப்பு தேவைதானா? என்ற கேள்வியை பலரும் கேட்காமலிருக்கிறார்களே! இது எவ்வளவு வேதனை!
பகுத்து ஆய்ந்து முடிவெடுக்கும் திறன் மனிதகுலத்துக்கு மட்டுமே இருந்து என்ன பயன்.
வாராது வந்த மாமணியாக உதித்த, மனித குலத்தைத் தழைக்கச் செய்யும் மகளிர்கள் நமது நாட்டில் வதைபடும் கொடுமை எப்போது தீரும்.
அஸ்வினி, நந்தினி, ஆஷிபாவுக்குப் பின் இன்று பொள்ளாச்சி பெண்கள் என்று பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வதற்கு யார் காரணம்!
அரசியல்வாதிகள் மட்டும்தானா! சமூக விரோதிகள்தான் காரணமா!
அவர்கள் மட்டுமல்ல நண்பர்களே. நாமும் ஒரு வகையில் குற்றவாளிகள் தான்.
நம் வீட்டுப் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் அது போதும் என்று நினைப்பதும், மற்ற குழந்தைகளுக்கு பாதிப்பு என்றால் ஒரு உச்சு கொட்டிவிட்டுப் போகிறோமே! அது முறைதானா? இது மிகப்பெரிய தவறு. இம் மாதிரிச் சம்பவங்கள் நாளைக்கு நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். இதையெல்லாம் ஏன் நாம் யோசிப்பதேயில்லை?
ஆண்களைப் போல் பெண்களாலும் பணியாற்றவோ, சம்பாரிக்கவோ முடியும்.
ஆனால், அதையும் தாண்டி பெண்களிடம் அமைந்துள்ள பொறுப்பு, பொறுமை, தினசரி வாழ்க்கையில் அவர்கள் செய்யும் பலவிதமான செயல்கள், எதையும் நம்மால் செய்ய முடியாது என்பதை, நாம் எப்போது உணரப் போகிறோம்.
இந்த அன்னையர் தினத்தில் அவற்றை எண்ணிப் பார்ப்போம் தோழர்களே!
அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment