புத்தாண்டில் உங்களோடு
ஒரு சில கருத்துக்கள்.
அன்பு நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்.
ஆங்கிலப் புத்தாண்டு 2020 இன்று துவங்குகிறது. துவக்கத்தில் சில வேலைகளை செய்ய நமக்குப் பிடிக்கும். நாளாகிவிட்டால் அதில் நமக்கு நாட்டம் குறைந்து விடும். எனவே, இன்றிலிருந்து சிலவற்றில் கவனம் செலுத்துவோம்.
முதலாவதாக தினசரி டைரி எழுதுவோம். குறைந்த பட்சம் ஒவ்வொரு நாளும் ஒரு வரியாவது எழுதியே தீருவது என்பதை கடமையாகக் கொள்வோம். இது தவிர வேறு குறிப்புகள் எது எழுதினாலும், தேதி, நேரம் போட்டு ஆரம்பிப்பது நல்லது. இது நமது மூளையில் நினைவாற்றல் பகுதியை அதிகரிக்கிறது, மேலும் புதிய செய்திகளுக்கும் இடமளிக்கிறது.
ஒவ்வொருவரிடமும் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது. எனவே, ஒருவரிடமிருந்தே நமக்கு நல்லவையும் கிடைக்கும். தவிர்க்க வேண்டியவையும் கிடைக்கும். ஒருவரின் குறைகளை சுட்டிக் காட்டுவதாயிருந்தால், அதை அவரிடம் தனியே சொல்லவும். நிறைகளை குறைந்தது 4 பேராவது இருக்கும் போது சொல்லுங்கள். ஒருவரின் குறையை தொடர்ந்து விமர்சிக்க வேண்டாம். ஏனெனில், அவர் சரியாகும் வாய்ப்பை தடுத்தவராக நாமே கூட இருக்கலாம்.
ஆங்கிலத்தில் ஒரு செய்தி உங்களுக்கு வந்தால், அதைத் தூக்கிக் கொண்டு யாரிடமும் செல்வதற்கு முன் நீங்களே அதன் அர்த்தத்தை 90 சதவீதம் தமிழில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கூகுளில் உள்ளது. அந்த ஆப்ஸ் ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
கொஞ்சம் புத்தகம் படிப்போம்.
எங்காவது கூட்டம், ஆர்ப்பாட்டம், நிகழ்ச்சி என்று எது நடந்தாலும் ( அது எந்தக் கட்சியாக அல்லது அமைப்பாக இருந்த போதிலும்) அவைகளை கவனிப்போம். ஏற்புடையதாக இருந்தால் அதில் கலந்தும் கொள்வோம். மாற்றுக் கருத்துக்களை மதிப்போம்.
நிர்வாகம் அல்லது பொறுப்புக்களில் ஏற்றுக் கொண்டவைகளை, ஒப்புக் கொண்டவைகளை நிறைவேற்றுவோம். தவணை வாங்குவது, தவணை தவறுவது தவிர்ப்போம்.
நமது பணியை முடிக்க அல்லது பணம் கட்ட காலம் இருந்தாலும், அதற்காக காத்திருக்காமல் உடனே அதைச் செய்யவும் அல்லது கட்டவும்.
புதிய முயற்சிகளுக்கு ஆதரவாக, பக்க பலமாக இருப்போம்.
நாட்டு நடப்பில் நாட்டம் கொள்வோம்!
முடிந்தவரை முகம் புன்னகையோடு இருக்கட்டும்.
இதில் இன்னும் சேர்க்கலாம், நீக்கலாம் அல்லது பாராட்டலாம்.
அது உங்களுடைய வேலை.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
01-01-2020
No comments:
Post a Comment