நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் - ஒரு சகாப்தம்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி .ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களைப் போன்று ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அரசியல் ஈடுபட்டபோதும் அவர் தோல்விகளைச் சந்தித்தார். ஆகவே அரசியல் பணிகளில் இருந்து விலகி, வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்தார். தமிழக அரசினால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞராகவும், அட்வகேட் ஜெனெரலாகவும் நியமிக்கப்பட்டார். 1974ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1988ல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். அதன் பின்பு 1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தார். இந்தியா உச்சநீதிமன்ற வரலாற்றில் தமிழகத்தில் இருந்து தலைமை நீதிபதியாக மாற வேண்டிய சூழல் வந்த பொழுது அதனைப் பெருந்தன்மையாக வெங்கடாசலய்யாவிற்குத் தந்த பெருமை நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு உண்டு .
இந்தியாவின் தெற்கு சீமையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் பல அரசியல் சட்ட அமர்வுகளில் அமர்ந்து குறிப்பாக எஸ்.ஆர். பொம்மை வழக்கில் மத்திய அரசு, மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்ட பிரிவான 356-ஐ பயன்படுத்திக் கலைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உள்ள உரிமைகளைத் தெளிவாக வரையறை செய்தார். இதன்மூலம் மத்திய அரசின் எதேச்சதிகாரம் தடைபட்டது. குறிப்பாக பல மாநிலங்களில் ஆட்சியும், உரிமையும் பாதுகாக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482ன் கீழ் குற்ற வழக்குகளை ரத்து செய்யயும் உயர்நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரத்தில் 'பஜன்லால்' என்ற வழக்கு மூலம் பல நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். இன்றைக்கும் இந்த வழக்குதான் அனைத்து இந்திய உயர்நீதிமன்றங்களிலும் முன் மாதிரித் தீர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. போபர்ஸ் வழக்கு, கத்தார்சிங், W.N.சக்லா போன்ற முக்கிய வழக்குகளில் நீதிபதியாக இருந்து தீர்ப்பை எழுதியுள்ளார்.
ஓய்வுக்குப் பின்பான சமூகப்பணிகள்
உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு காஷ்மீர் பிராக்போரா துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார். நேர்மையானமுறையில் பல்வேறு மிரட்டல்களை சமாளித்து, காஷ்மீர் களத்தில் இருந்து நேரடி ஆய்வு செய்து, அப்போதைய காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் 225 பக்க அறிக்கையை விரைவாக சமர்ப்பித்தார். தான் பணியாற்றியதற்காக அரசு வழங்கிய சம்பளத்தை அப்படியே முழுவதையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுத்து உதவினார்.
ஐந்தாவது ஊதியக்குழு தலைவராக 1994 முதல்1997 வரை பொறுப்பு வகித்தார். மேலும் தேசிய பிற்படுப்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சில ஆண்டுகள் பதவி வகித்தார். தனது சொந்த ஊரில் 40 ஏக்கர் நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்துவதற்காக வழங்கி, வீடுகள், பள்ளிக்கூடம் மற்றும் அனாதை மக்களுக்காக இல்லங்களை உருவாக்கினார். இது மட்டுமின்றி 20 ஏக்கர் நிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளவும் தனக்கு சொந்தமான நிலத்தில் வழிவகை செய்தார்.
சிறந்த சமூகப் பணிகளுக்காக சிறந்த குடிமகனுக்கான தேசிய விருதை அன்னை தெரசா அவர்களின் கைகளில் இருந்து பெற்றார். நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் சமூக நீதிக்கான பணிகளைப் பாராட்டி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழா விருதை மதுரை மையமாகக் கொண்டுசெயல்படும் சோக்கோ அறக்கட்டளை 2016ம் ஆண்டு வழங்கியது. சமூகப் பிரச்னைகளைப் பற்றி பேசும்போது கணீரென்று பேசுவார் என பாலி.எஸ்.நரிமன் தனது கடிதம் ஒன்றில் ரத்தினவேல் பாண்டியன் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கொடுத்த இடைக்கால அறிக்கையின்படி சாதீய மோதல் மூலம் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தமிழக மக்களுக்கு அன்றைய முதல்வர் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். நேர்மையுடன் தைரியமாக காஷ்மீரில் ஒரு நபர் ஆணையத்தின்மூலம் உண்மையை உரக்கச் சொல்லியதால் காஷ்மீர் மக்களின் இதயத்தில் நிரந்தரமாக நின்றார். அதேபோன்று சமூக ஏற்றத்தாழ்வுகளை கலைவதற்காக இந்திராசாஹினி வழக்கில் இடஒதுக்கீட்டைஆதரித்து தீர்ப்பு வழங்கியதன் மூலம் அவரின் உடல் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் என்றென்றும் நம் அனைவரது இதயங்களிலும் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் வாழ்வார்!
No comments:
Post a Comment