தியாகத்தை நினைவில் கொள்வோம்!
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள். 1886 ம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணி நேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மே நாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கம். அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியரை இந்த நாளில் நினைவில் ஏந்துவோம். அந்த உரிமை தினத்தை ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு முறைக்கு அஞ்சாமல், 1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் செங்கொடி ஏற்றி இந்த துணைக் கண்டத்திற்கே அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் பாட்டன் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். நவீன காலத்தின் தொடக்கத்தில் உலகெங்கும் உழைப்பாளர்களும்அவர்களின் உரிமைப்போரும் தோன்றிய காலத்தில்தான், தமிழினமும் நாடுதோறும் கூலிகளாய் சென்றது. தமிழர்கள் உலகிற்கு உழைப்பையும், அதன் வழி கூலி என்ற சொல்லையும் உலக மொழிகளுக்கெல்லாம் தந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எம் முப்பாட்டனின் பொதுமைக்கு உயிர்கொடுத்தான். தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் உலகமுதலாளிகள் கற்றுக் கொண்ட பாடம். இன ஒடுக்குமுறை. அதனால்தான் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று முழங்கிய மாமேதை லெனின், ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கு போராடவேண்டும் என்றார். எம் தமிழினத்திற்கு வந்த சாபக்கேடோ என்னவோ 30 கடல் மைல் தொலைவில் எம் உறவுகள் இன ஒடுக்கு முறையால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை மட்டுமல்ல உழைப்பாளர்கள் என்ற தகுதியையும் இழந்து பிச்சைக்காரர்களாய் கையேந்தி நிற்கிற கொடுமை. தாய்த்தமிழகத்திலோ தொழில் வாய்ப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, தமிழர்களை அத்தக் கூலிகளாக மட்டுமே ஏற்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமையற்ற உதிரிகளாய் மாற்றப்பட்டிருக்கின்றனர். கொஞ்சநஞ்சம் உள்ள ஆலைகளிலும், 12 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிலை. உழவுத்தொழில் தன் இறுதிக்காலத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது, உழவுக்கு அடுத்த நிலையில் இருந்த நெசவுத்தொழில் அழிந்து விட்டது. பட்டினிச் சாவுகளும், குடும்பமாய் தற்கொலை செய்து கொள்வதும் தமிழர்களின் தலைவிதியாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட்டு உழைப்பாளர்கள் உரிமைக்காய் ஒன்று சேர்வதற்கும், மேதின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம்.