புத்தகக் காட்சிகளில் சமையல் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக குவிந்து கிடப்பவை சுய முன்னேற்ற புத்தகங்கள். அத்தனை புத்தகங்களின் ஆதார சுருதி... ஆசைப்படு, கனவு காண், நம்பு, முயற்சி செய், வெற்றி பெறு.
பாலோ கோஹெலோவின் 'தி அல்கெமிஸ்ட்'டும் கனவையும் நம்பிக்கையும் பேசுகிற ஒரு புத்தகம்தான். ஆனால் அது கட்டுரை அல்ல. புதினம். சுவாரசியமான ஒரு நாவல். 'நம்பிக்கை ஒன்றே நன்மருந்து' என்று உபதேசம் செய்கிற புத்தகங்களின் பட்டியலிலே இதைச் சேர்த்துவிட முடியாது. மற்றவர்களிடமிருந்து கோஹெலோ ஒரு விஷயத்தில் ரொம்பவே வித்தியாசப்படுகிறார்.
வாழ்வில் எல்லோருமே ஏதாவது ஒரு லட்சியத்தை, கனவை துரத்தி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த கனவும் லட்சியமும் நம் பிள்ளைப் பிராயத்தில், பால்யத்தில் உருவானவையா? நிச்சயமாக இல்லை. அவை வேறு... இன்றைய கனவும் லட்சியமும் வேறு. இன்று காலம் கொடுத்த மரண அடியில் பால்யத்தின் கனவுகளைத் தொலைத்துவிட்டு புதிய லட்சியங்களை வரித்துக் கொண்டோம். இதுதான் சாத்தியம். இதுதான் நம்மால் முடியும் என்று அவற்றை துரத்திக் கொண்டு ஓடுகிறோம். மற்ற சுயமுன்னேற்ற புத்தகங்கள் ஜே போடுவது... இந்த ஓட்டத்தை வாழ்த்தித்தான். ஆனால் கோஹெலோ இதைத் தப்பு என்கிறார். பால்யத்தின் கனவுகளும் லட்சியங்களுமே நம் இலக்காக இருக்கவேண்டும் என்கிறார்.
அறியாத வயதில், விவரம் புரியாத பருவத்தில் நம்முள் எழும் ஆசைகளும் கனவுகளுமே இயற்கையானவை. நம் இதயத்தின் குரல் அதுதான். நாம் பின்தொடர்ந்து செல்ல வேண்டியதும் அதைத்தான். அதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். இதுதான் கோஹெஹோ தன் நாவலில் சொல்லவருவது. ஆனால் யதார்த்தத்தில் சிறு வயது கனவை யாரும் துரத்துவதில்லை. ஏனென்றால் அனுபவமும் அறிவும் அந்த கனவுகள் நடைமுறை சாத்தியம் இல்லை என்று நம் சிறகுகளை முறித்துப் போட்டுவிடுகின்றன. அதனால் பறக்க முடியாமல் கால்களால் ஓடத்துவங்கி விடுகிறோம்.
ஸ்பெயின் நாட்டில் அண்டளுசியா கிராமத்தில் ஆடு மேய்க்கும் சாண்டியாகோவுக்கு ஒரு கனவு வருகிறது. பாலைவன பிரமிட்டில் புதைந்திருகிறது ஒரு புதையல். அந்தப் புதையலை தேடிப் போகிறான் சாண்டியாகோ. பல்வேறு மனிதர்கள்... விதவித அனுபவங்கள்... இடையே ஒரு காதல்... இரண்டு வருடம் வெற்றிகரமான வியாபாரியாக ஒரு வாழ்க்கை... செம்பையும், தகரத்தையும் தங்கமாக மாற்றும் ரசவாதியான அல்கெமிஸ்ட்டுடன் நட்பு.
இப்படியான பயணத்தில் பாலைவனத்தில் மணற்புயலை உருவாக்குகிற ஆற்றலையும் அடைகிறான் சாண்டியாகோ. இறுதியாக புதையல் இருக்கும் இடத்தை அடைந்து தோண்டிப் பார்க்க ஒன்றையும் காணோம். 'இந்த மாதிரி கனவில் வந்ததை நம்பியெல்லாம் வாழ்கையை இழக்காதே... எனக்குக்கூடத்தான் அண்டளுசியாவில் புதையல் கிடைக்கிற மாதிரி அடிக்கடி கனவு வரும்' என்று புத்தி சொல்லிவிட்டு போகிறான் ஒருவன்.
சாண்டியாகோவுக்கு புதையல் ரகசியம் இப்போது தெரிந்து விட்டது. அது வேறெங்கும் இல்லை. அவன் ஆடுமேய்த்து, படுத்துறங்கி கனவு கண்டானே அதே இடத்தில்தான் அந்தப் புதையல் இருக்கிறது!
தன் கனவைக் கைவிடாமல் கடைசி வரை பின்தொடர்ந்து போனதால்தான் புதையல் இருக்கிற இடம் அவனுக்கு தெரிய வந்தது. அவனால் வெற்றி பெற முடிந்தது. உங்கள் பால்ய கனவுதான் இயற்கையின் உத்தரவு. அதைத் துரத்திக் கொண்டு போனால் இயற்கை நிச்சயம் உங்களுக்கு உதவும். இதுதான் 'தி அல்கெமிஸ்ட்' நாவலின் அடிநாதம்.
ஒருவகையில் இப்புதினம் தேடுதல் மற்றும் சாகசக் கதைதான். ஆனால் சாண்டியாகோ இடத்தில் நம்மை உருவகப்படுத்திக் கொண்டால் நமக்கே நமக்கான வேறு வேறு தரிசனங்கள் கிட்டும்.
“இந்த புதினத்தை நான் திட்டமிட்டெல்லாம் எழுதவில்லை. இது என்னால்தான் எழுதப்பட வேண்டும் என்பது இயற்கையின் உத்தரவு. நான் அந்த உத்தரவை நிறைவேற்றினேன்” என்கிறார் பாலோ கோஹெலோ.
ஒருவேளை இயற்கை நம் பால்ய கனவுகளுக்கு உதவ தயாராக இருக்கலாம். ஆனால் நாம்தான் அதை உதாசீனப்படுத்திவிட்டு வேறு திசையில் போய்க் கொண்டிருக்கிறோம்.
'என் சின்ன வயதில் இந்தியாவில் ஒரு புரட்சியை நிகழ்த்தி லெனின்னாக ஆசைப்பட்டேன் நான்' என்கிற என் பக்கத்து வீட்டுக்காரர் பேசாமல் அந்தக் கனவை துரத்திக் கொண்டுபோயிருக்கலாம். மனிதர்... 'வாழ்ந்திருப்பார்'. சே... அதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று பிராக்டிக்கல் மனிதராகி... இன்று ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
'பறவை கிளையில் வந்து உட்காருவது கிளையின் பலத்தை நம்பி இல்லை... கிளை திடீரென முறிந்தாலும் தன்னால் பறக்க முடியும் என்கிற நம்பிக்கையினால் தான்'. பறவைக்கு சிறகின் மீதிருக்கும் நம்பிக்கையை நாம் நம் கனவுகளின் மீது வைப்போம். சிறகை விரிப்போம்.