தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, February 21, 2018

உலக தாய்மொழி தினம் 
 “தனது தாய் மொழியில் சரிவர எழுத, பேச, படிக்க, சிந்திக்க கற்றுக் கொள்ளும் ஒருவரால்தான் இதர மொழிகளை மிகச் சரியாக உச்சரித்துப் படிக்க முடியும்.  “தாய் மொழி பேசாதவனும் தந்தை வழி கேளாதவனும் வாழ்வில் வளம் பெற்றதாக வரலாறு இல்லை.
சமீபத்தில் நமது பஞ்சாப் அரசும் ஆங்கில மருத்துவ நூல்களை பஞ்சாபி மொழிக்கு மாற்றம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தாய் மொழியில் கல்லாத எந்தவொன்றும் கிணற்றில் போடப்பட்ட கல்தான். தங்கத் தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல!
மொழிப்பற்று என்பது இதர மொழிகளையும் பற்றிக் கொள்ளவே விரும்பும். “’மும்மொழி கற்றவன் மூன்று மனிதர்களுக்கு சமம்” என்பது சீன பழமொழி. தாய் மொழிப் பற்று கட்டாயம் இருக்க வேண்டும். அதே வேளை வேற்று மொழிகளைத் தூற்றுவது மொழிப் பற்றின் முகவரியல்ல; அது மொழி வெறியின் முதல் அடையாளம்.
     ஒவ்வொரு மொழியும் ஏதோ ஒரு வகையில் சிறப்புக்குரியவைதான். எழுத்தற்ற மொழியும் மொழிதானே! ஆனால் இன்றைக்கு ஒரு மொழி அது என்ன செய்து விடும் என்று வெகு சாதாரணமாக இருந்து விட முடியாது.
சர்வதேசமெங்கும் “மொழிப் போர்” முன்மொழியப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மொழி யுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாய் பரிமாணமும், பரிணாமமும் பெற்றிருப்பது பெரும் வேதனைக்குரியதே! இன்றைய சமஸ்கிருத மொழித்திணிப்பும் ஒரு கணம் நம் கண்முன் கொண்டு வர வேண்டிய ஒன்று.
     முதன் முதலாக மொழிப் போர் இன்றைய வங்கதேசமான கிழக்கு பாகிஸ்தானிலிருந்துதான் தொடங்கியது. தமது தேசத்தின் மொழியாக வங்காளம் வளர வேண்டும் என்பதை முன்னிறுத்தி டாக்கா பலகலைக் கழக மாணவர்கள் கலகத்தில் ஈடுபட்டு அதிரடிக் காவலர்களின் அடக்கு முறைக்கு ஆளாகி நான்கு மாணவர்கள் உயிரிழந்தார்கள். இது நடந்தது 1952 பிப்ரவரி 21.
பாரம்பரியங்களின் பாதுகாப்பு மையமான யுனெஸ்கோ பிப்ரவரி 21 ஐ சர்வதேச தாய்மொழி தினமாக 1999 இல் அறிவிக்க அது கடந்த 2000 முதல் சர்வதேசமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    நமது தாய்மொழி கண்  போன்றது, இதர மொழிகள் கண் கண்ணாடி போன்றது, கண்ணாடிகளை மாற்றலாம். கண்களை மாற்ற முடியுமா? இன்றைக்கு நாம் நமது தாய் மொழியான தமிழ்மொழியில் எப்படி இருக்கிறோம்...? வெளியே சொல்வதற்கு கூட வெட்கமாக இருக்கிறது, இருந்தாலும் சொல்லிக் கொள்கிறோம், நாமும் தமிழர் என்று. சென்னை கூவத்திற்கு மட்டுமல்ல தங்கலீஷுக்கு பிரபலமான ஒன்றே! ஆங்கில மோகம் நம் நாவுகளை ஆட்டிப் படைக்கிறது, தமிழோ தலை குனிந்து கொள்கிறது, கூடவே தமிழனும்...
      தனிமை மிகு தமிழ் தொன்னூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் பத்து ஆயிரம் கோடி மக்களால் பேசப்படுகிறது. உலகப் பழம் பெரும் ஏழு மொழிகளில் தமிழும் ஒன்று. ஆங்கிலம் தோன்றி 500 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் முத்தமிழுக்கு வயதோ 3500. கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன் எழுந்ததற்கான எழில் தமிழின் கல்வெட்டுக்கள் எகிப்தில் என்றைக்கோ கண்டெடுக்கப்பட்டுவிட்டன. இது மொழிப் பரவலை முன்னிறுத்து கிறதல்லவா?
சுமார் 30 உலகளாவிய மொழிகளுக்கு தமிழ்தான் தாய் என்பார் திரு ஜான் சாமுவேல் என்ற தமிழறிஞர். உலக அளவில் தமிழ் 18 ஆம் இடத்தில் இருப்பது சற்று பெருமைக்குரிய விசயமே! மலையாளத்திற்கு 29 ஆம் இடம். இந்தி 04 ஆம் இடத்தில் இருப்பதையும் நாம் மிகவும் கூர்ந்து கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். அச்சு மொழி, வலைமொழி என்று வரும் போது இதன் தரப்பட்டியல் வரிசை எண் நிச்சயம் மாறுபடலாம்.
     பிரபல விக்கிப்பீடியாவின் தேடல் அடிப்படையில் இந்தி 40 ஆம் இடத்திலும் தமிழ் 61 ஆம் இடத்திலும் இருக்கிறது என்பது கவனத்திற்குரியதே. “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்பார் பாரதி, அது தமிழகத்திற்கு நன்கு பொருந்தும் எனலாம். ஆம் சுய உரையாடல்களுக்கு அடுத்தபடியாக அவர்கள் அதிகம் செவியுறுவது “சீரியல் (நாடகத்)தமிழ்” தான். இதை “தொலைத் தமிழ்” என்றும் அன்புடன் அழைக்கலாம். இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன் முறையாக… என்று சொல்லும் போது “தமிழைக் கொன்றதும், கொச்சைப்படுத்தியதும் நாங்கள்தான்” என்பதையும் கூடவே சேர்த்துக் கொள்ளலாம்.
   நாம் அத்திப்பட்டியில் இருக்கிறோமோ இல்லை ஆஸ்திரேலியாவில் இருக்கிறோமோ என்று தெரியவில்லை. ஏனெனில் இன்றைய இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியவில்லை. ஏனெனில். ஏதோ ஆங்காங்கே ஒரு சிலர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தமிழ் பேசுவதால் இன்றைய தலைமுறை திக்கித் திணறி தமிழ் பேசிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட தாத்தாக்களும் பாட்டிகளும் வாழும் வரை தமிழ் வாழும் என்று நம்பலாம்!
சமீப காலங்களாக பெருகி வரும் “முதியோர் இல்லங்கள்” அந்த நம்பிக்கையையும் முறித்துப் போட்டு விட்டது. இந்திக்கும் இங்கிலீசுக்கும் கொண்டாட்டம்தான். “தமிழ் வீழாது வீறு கொண்டு எழும்” என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான், என்றாலும் தமிழர்களின் அபார வளர்ச்சி அவர்களது தாய் மொழியை வளப்படுத்துவதின் வழியேதான், இதர மொழிகளிலும் புலமை பெற முடியும் என்பதையும் கூடவே உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொன்னூறுகளில் சென்னைத் தொலைக் காட்சியில் “ஜுனூன்” என்றொரு இந்தி நாடகம் தமிழ் பெயர்ப்பு செய்து ஒளிபரப்பப்பட்டது. கேட்பதற்கே இன்னும் இரண்டு காதுகள் வேண்டும், அப்படி ஒரு கொடுந்தமிழ் அது. நாளடைவில் அந்நாடக மொழி மக்களின் மனங்களிலிருந்து நாவின் வழியே நடனமாடத் தொடங்கிய போது அது “ஜுனூன் தமிழ்” என்று பெயராக்கம் பெற்றது. ஒரு வகையில் அப்பெயர் மிகப் பொருத்தம் என்றே தோன்றுகிறது.
ஜுனூன் என்ற அரபுச் சொல்லுக்கு “பைத்தியம்” என்று பொருள், அதை பைத்தியத் தமிழ் என்று நமது பைந்தமிழில் சொல்லலாம். கொஞ்சம் ஓவராக உளறுபவர்களை (ஓவர் என்பது என்றைக்கோ தமிழ்ச் சொல்லாகிப் போய் விட்டது. அதை நீங்கள் ஆங்கிலச் சொல் என்று எண்ணினால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு) புத்தி கெட்டவன், பைத்தியக்காரன், புத்திசுவாதீனம் இல்லாதாவன் என்றெல்லாம் சொல்வதுண்டு.
    ஒரு ஜுனூன் ஒரே பாஷையில் பேசுவதில்லை, அவனுக்குள் பல்வேறு பாஷைகள் குடி கொண்டு நாவின் வழியே வெளிப்படுவதுண்டு, சிலவேளை இலக்கியமாகவும் சிலவேளை இழுக்காகவும்! மேம்பட்டவர்களை மஸ்தான், முனிவர், சித்தர், மகான் என்றெல்லாம் அழைப்பதுண்டு. அந்த வகையில் நாமும் ஒரு வகை மகான்கள்தான். ஏனெனில் ஒரு ஐந்து நிமிடத்தில் நம்முடைய பன்மொழித் திறன் நமது பேச்சிலும் மூச்சிலும் வெளிப்பட்டு விடுகிறதல்லவா...
தாய்மொழி, தேசிய மொழி, தொழில் மொழி இம்மூன்று ஓவ்வொருவருக்கும் வெகு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இத்துடன் ஒரு முஸ்லிமுக்கு அவனது சமய மொழியான அரபு மொழியும் கட்டாயமான ஒன்றே! அதிஷ்டவசமாக தமிழ், அரபி இவ்விரண்டிலும் மூன்று “ல, ழ, ள” க்கள் இருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. சுமார் 25 நாடுகளில் அரபு மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. ஐ.நாவின் ஐந்து மொழிகளில் அரபியும் ஒன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைதி, நகல், வாரிசு, ஜாமின், அமுல், மகசூல், இனாம், வசூல், ரஷீது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அரபு மொழியின் அருட்கொடையே!
தமிழைப் போலவே நீண்ட பாரம்பர்யம் கொண்டதுதான் அரபி. நமது ஆதித் தாயின் மொழி தமிழ் என்றால், நமது ஆதித் தந்தையின் மொழி அரபி என்று அடித்துச் சொல்லலாம் என்பார் அகட விகடம் புகழ் தி.மு.அப்துல் காதிர், அது ஆய்வுக்குரிய ஒன்றுதான்.
 
    நமது இந்தியத் திருநாட்டில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசின் புள்ளி விபரம் ஒன்று விவரிக்கிறது.
     ஆறுவயது வரை குழந்தைகளால் எம் மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும், குறிப்பாக தாய் மொழியை... அந்தோ பரிதாபம் தமிழ் பிள்ளைகளுக்கு அரைவயதில் ஆங்கிலமல்லவா ஆசை ஆசையாக அள்ளித் திணிக்கப்படுகிறது பிறகு அவர்கள் மேலைக் கலாச்சாரத்தோடு வளராமல் இந்தியக் கலாச்சாரத்தில் வேஷ்டியும் சேலையும் கட்டிக் கொண்டா வளரும்...?
வாருங்கள்!
சேய் மொழிகளை போற்றி வளர்ப்போம்
தாய் மொழிகளை காப்பாற்றுவோம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR