தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, April 29, 2018

உலக உழைப்பாளர் தினம்
எஸ். சிவசிதம்பரம்.

உழைக்கும் வர்க்கத்தின் விடியலுக்காக போராடி உயிர்நீத்த  தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக நாம் மே தினத்தை கொண்டாடுகிறோம். 
ஆரம்பத்தில் உலக நாடுகள் பலவற்றிலும் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை வாங்கப்பட்டு கசக்கிப் பிழியப்பட்டனர். இதை எதிர்த்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா  போன்ற நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது. 
1856ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 மணி நேர வேலை போராட்டம் வெற்றி பெற்றது.  இதுதான் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் தொடக்கமாக கருதப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை  நடத்தியது. அதோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ, நியூயார்க், பால்டிமோர் போன்ற நகரங்களில் உள்ள 12000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய 3 1/2 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
அதற்குப் பின் மே 3 ம் தேதி 3000 பேர் திரண்டு சிகாகோவில் உள்ள ஒரு நிறுவனத்தின் வாயிலில் கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு  கலவரம் ஏற்பட்டு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலியானார்கள்.
அடுத்த நாளே மே 4 ம் தேதி ஹே மார்க்கட் சதுக்கத்தில் 2500 பேர் பங்கேற்று அமைதியாக கண்டனக் கூட்டம் நடத்தினர்.  அப்போது காவல் துறையினர்  கலைந்து செல்லுமாறு கூட்டத்தினரை விரட்டியடித்தபோது அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் ஒரு காவலர் பலியானார்.
பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்கும்  தொடுத்தனர்.  இந்த வழக்கு ஜூன் 211886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல்  ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் சக்தியோடு மக்கள் சக்தியும் சேர்ந்தவுடன் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  வேறு வழியில்லாமல் அது பணிந்தது.
1889 ஜூலை 14ல் பிரான்ஸ் 14 நாடுகளைச்  சேர்ந்த 400 முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை நேரமாக வரையறுக்க வேண்டும் என்ற மசோதா  நிறைவேற்றப்பட்டது. காரல்மார்க்ஸ் அவர்களின் அறிவுறுத்தல்படி 1990 மே 1 அன்றுதான் ஐ.நா. சபை மே 1 ஐ உலக தொழிலார்கள் தினமாக அறிவித்தது. அமெரிக்க சரித்திரத்தில் போட்டி, பொறாமை போன்ற பல காரணங்களால் தனித்தனியே பிரிந்து கிடந்த தொழிலாளர்கள் அனைவரும்  நாம் அனைவரும் ஒன்று என்று உணர்ந்து இணைந்த நாள்தான்  மே 1.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
 இதன் பின்னர் எல்லா நாட்டிலும் உழைக்கும் மக்கள் மே முதல் நாளை 8 மணி நேர வேலை நேரத்தை கோரிக்கையாக வைத்து‍ பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்த வேண்டும் என்று  கம்யூனிஸ்ட் அகிலம் வேண்டுகோள் விடுத்தது. அன்றிலிருந்து‍ மே முதல் நாள் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான நாளாக அனுசரிக்கப்பட்டு‍ வருகிறது.
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ஆன தோழர். ம. சிங்காரவேலர் அவர்கள்  1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.
உழைப்பவர்கள் வாழ்க்கையில்  ஏற்பட்ட  மிகப் பெரிய மாற்றம்தான்  8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர கேளிக்கை என்பது. 
இந்த மாற்றம் வரவில்லையென்றால் மக்கள் செத்து சுண்ணாம்பாய்  போயிருப்பார்கள்.
இந்த வெற்றிக்குப் பிறகுதான் ஜூரிச் நகரத்தில்  நடந்த முதல் மாநாட்டில்   ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.
அதாவது மே தினம் என்பது 
முதலாளித்துவச் சுரண்டல்,  
அடிமைத்தனம்,
வர்க்க வேறுபாடுகள் 
இவைகளை  அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானிக்கிறது. 

மே தினம் கடைபிடிக்கப்பட்டு ஆண்டுகள் 128 ஐக் கடந்து விட்டது. அதற்குப் பின் பல நாடுகளின்  விடுதலை, எண்ணற்ற முன்னேற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமைகள் நிறைய கிடைக்கப்பெற்று உலகம் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது.  இதில் யாதொரு சந்தேகமுமில்லை.
இப்படிப்பட்ட முன்னேற்றம் ஒருபுறம் ஏற்பட்ட போதிலும் மறுபுறம் பார்த்தால்  போட்டி, பொறாமை, சுரண்டல், நாட்டின் வளங்களை சூறையாடுதல்,   நல்ல ஆட்சிகளை நாசமாக்குதல், பல நாடுகளின் தலைவர்களை  கொலை செய்தல், நவீன முறையில் பிற நாட்டு வளங்களைக் கொள்ளையடித்தல்  போன்றவைகளும் வளர்ந்துள்ளது.  ஒரு சில நாடுகள்   முன்னேறியிருக்கும். சில நாடுகள் முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும். இன்னும் சில நாடுகள் ரொம்பவும் பின் தங்கியிருக்கும்.  இதுதான் சர்வதேச நிலைமை.

நமது நாட்டைப் பொறுத்தவரை என்ன நிலைமை என்பதைப்  பார்ப்போம்!  பாரத தேசம் பழம் பெரும் தேசம்!  நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்!!  இது பாரதியின் வரிகள்.
அவ் வரிகளுக்கு ஏற்பவே நமது நாடும் ஜனநாயக நாடாக    உள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.  ஜனங்களின் மனங்களை நல்வழிப்படுத்தக் கூடிய, மிகச் சிறந்த  காவியங்களும், காப்பியங்களும், ஆன்மீக, நாத்திக வழியிலான நம்பிக்கை தரும் கருத்துக்களும், மருத்துவக் குறிப்புகளும்  உலகிலேயே நமது நாட்டில்தான் அதிகம். தேசத்தை ஜனநாயக முறைப்படி நடத்திச் செல்ல, அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட  அற்புதமான சட்ட நடைமுறைகள் உள்ள நாடும் நமது இந்திய தேசமே.  அதிலும் உலகப் பொதுமறையான திருக்குறள், உலகிலேயே சிறந்த செவ்வியல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி உருவான  மாநிலமாக தமிழகம் இருப்பது வெகு சிறப்பு.

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னதாக வந்த ஆட்சியாளர்கள் நாளடைவில் மோசமான ஆட்சியாளர்களாகவும், சொந்த தேசத்தின் வளங்களையே சூறையாடுபவர்களாகவும் மாறிவிட்டார்கள்.
இன்றைக்கு காசுக்காக யார்  காலில் வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையும் உருவாகிவிட்டது. வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு அபரிமிதமான சலுகையும், வங்கியில் கடன் வாங்கி ஏப்பம் விடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க திராணியில்லாதவர்களாகவும் அல்லது நடவடிக்கை எடுக்க மனமில்லாதவர்களாகவும் நம்மை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள்   மாறிவிட்டார்கள். மக்களுக்கு மத, இன, மொழி ஆகியவற்றின் பேரால் வெறியூட்டி  கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இம்மாதிரி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். உலக சமாதானத்துக்கு பெயர் போன நம்ம நாடு, பாதுகாப்புக்குத்தான் நம்ம வருமானத்துல அதிகத் தொகையை செலவு செய்கிறதென்றால்  நாடு போகும்  போக்கை தீர்மானிக்கலாம்.

மக்களை எந்நேரமும் போதை அல்லது மாயையிலேயே வைத்திருக்கும் கலையை இன்றைய அரசியல் வாதிகள் நன்கு கற்று வைத்திருக்கிறார்கள்.  
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற பட்டுக்கோட்டையாரின் கவிதை வரிகள்தான் இந்த நேரத்தில் நமக்கு நினைவில் வருகிறது. தானாய் எதுவும் மாறாது.
நாம்தான் மாற வேண்டும். நம்மால் எதையும் மாற்ற முடியும் என்ற சிந்தனைதான் நம்மை, நமது மக்களை ஏன் தேசத்தையே காப்பாற்ற முடியும் என்பதை உணர்வோம்.  அதற்காக போராடுவோம்.

நேர்மையான கோரிக்கைகளுக்காக எவர் போராடினாலும் அவர்களுக்கு பக்க பலமாக, உறுதுணையாக இருப்போம். அவர்கள் எந்தக் கட்சி, எந்த அமைப்பாக இருந்தாலும் துணை நிற்போம். 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR