ஒரு சகாப்தம் மறைந்தது!
பல்துறைப் பேராசான்
முத்தமிழ்க் கவிஞர்
கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்தார்!
அனைத்துக் கட்சிகளும்,
அனைத்து இயக்கங்களும்
அவராலும் புத்தாக்கம் பெற்றோம்.
சிலேடைப் பேச்சு, சீரிய சொல்லாடல்
எத்தனை பேருக்கு வாய்க்கும்.
தமிழகம், தமிழால் சிறப்புற்றதும்
அவரால்தான் என்பதே
அனைவரும் பெற்ற அரிதான வாய்ப்பு.
இட ஒதுக்கீட்டில் அவரது பங்கு
வேறெந்த மாநிலமும் பெறாத ஒன்று.
இறந்த பின்னும் இட ஒதுக்கீட்டில்
வெற்றி கண்ட சாதனையாளர்,
கலைஞரைத் தவிர வேறெவர்?
படித்த படிப்பும் காட்டிய திறமையும்
அறிஞர்களையும் ஆச்சரியப்படுத்தும்.
உடன்பிறப்புக்கு அவர் எழுதிய கடிதங்கள்
இயக்கத்தைக் கட்டிப்போடும் உணர்ச்சிப் பிணைப்பு!
அண்ணா மறைந்தபோது அவரிடம்
இரவலாய் இதயம் கேட்டார் கலைஞர்
இன்று அந்த இதயத்தை
அண்ணாவிடம் கொண்டு சேர்க்கிறார்.
விடை பெறுகிறேன் என்ற அவரது எழுத்தால்
விடை கொடுக்க முடியாமல் தவிக்கிறது தமிழகம்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் தொண்டர்கள்,
தலைமையை இழந்த உறவுகள்!
அனைத்தும் தனது வாழ்வையும்
ஆன்மாவையும் இழந்து தவிக்கிறது.
தவிப்பில் உள்ள நாமும்
அஞ்சலி செலுத்துவோம் தோழர்களே!
No comments:
Post a Comment