தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, August 30, 2018


கடைமடைப் பகுதிக்கு ஏன் 
தண்ணீர் வரவில்லை!
எஸ். சிவசிதம்பரம்.
காவிரித் தண்ணீர் ஏன் கடைமடைக்கு வரவில்லை?  அது வருமா! வராதா! இது பற்றி நமக்கு பல சந்தேகங்கள் இருக்கிறது. பொதுவாக மேட்டூரில் தண்ணீர் திறந்தால் ஒரு வாரம், 10 நாளில்  கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும்.   ஆனால் கடந்த ஜுலை 19ல் தண்ணீர் திறந்து இன்றைக்கு 40 நாட்களைக் கடந்த பின்னும் இது நாள் வரை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை!  

கடந்த ஒன்றரை  மாத காலமாக இந்தப் பிரச்சினை  நமது விவசாயிகளை பெரிதும் அலைக்கழித்துக்   கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில்  ஆற்றுப் பாசனம் மூலம் கடைமடைப் பகுதிகளுக்கு ஒருபோக விவசாயம்தான். அதுவும்  3 முறைதான் நடந்துள்ளது. 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கனவாகவே உள்ளது.  தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகள் என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை.  காவேரி நீரில் நமக்கான உரிமையைக் கேட்டு, சண்டைபோட்டு, போராட்டங்கள் எல்லாம் நடத்தி கடைசியாக  உச்ச நீதி மன்றமும் நியாயமாக தீர்ப்பளித்துள்ளது.  அந்தத் தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அது தன் கடமையை முறையாக நிறைவேற்றுமா! மறுத்தால் மத்திய அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்குமா என்பதை பார்ப்பதற்குள் இயற்கை வெகு சீற்றத்தோடு மழையைப் பொழிந்து விட்டது. வெள்ளம்! வெள்ளம்!! எங்கும் வெள்ளம்! இந்தப் பக்கம் கேரளாவில் கொட்டித் தீர்த்த மழை வெள்ளம் தேசியப் பேரிடர் ஆகவே உருவாகிவிட்டது. 
மேட்டூர் அணை 2 முறை  நிரம்பி விட்டது.  தண்ணீர் திறந்த சில நாட்களில் தஞ்சை கல்வராயன்பேட்டை கிராமத்தில் கரை உடைந்து தண்ணீர் வீணாக போனது. அதன் பிறகு கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து கடலுக்கு விட்டார்கள். கல்லணை  கால்வாய்க்கு தண்ணீர் அனுப்புவது குறைந்தது. 
வரலாறு காணாத அளவில் கிட்டத்தட்ட 4 லட்சம் கன அடி நீரை கர்நாடகா திறந்து விட்டது. அணை நிரம்பியதால் காவிரி- கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 
2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டும் கடைமடைப் பகுதிகளுக்கு  தண்ணீர் வந்து சேரவில்லை.  கல்லணையிலிருந்து மாயனுர்  கட்டளைக் கால்வாயில்   திறந்து விடப்பட்ட தண்ணீர் அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பூதலூரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கே  தண்ணீர் வரவில்லை. 
ஆனா துணை முதல்வர் கடைமடைப்பகுதிக்கும் தண்ணீர் பாய்கிறது என்கிறார்! அவரு எந்தத் தண்ணிய சொல்றாருன்னு தெரியல்ல. தண்ணீர் வந்தா ஏன் போராடப் போறாங்க. முதல்வரோ அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, 
மழைப்பொழிவு இல்லாததால், காவிரியிலும் இப்போது வந்த அளவுக்குத் தண்ணீர் வரவில்லை என்பதால், அரசு மெத்தனமாக இருந்து விட்டது. இந்த முறை முன்கூட்டியே தூர்வாரியிருந்தால், காவிரி தண்ணீர், கடைமடைப் பகுதிகளை இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். ஆனால், தூர் வாராமலேயே தண்ணீரைத் திறந்துவிட்டால், எப்படிக் கடைமடைப் பகுதிகளுக்கு  தண்ணீர் வந்து சேரும். மேலும், தண்ணீர் வராத காலத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆற்றில் இருந்த மணல் முழுவதுமாக, சுமார் நான்கு அடி ஆழத்துக்குத் தோண்டியெடுத்து விற்றுவிட்டனர். குடிமராமத்துப் பணிகளையும்கூட, விவசாயிகள் பொறுப்பில் விடுவதில்லை. கொடுமை என்னன்னா! நம்ம மக்களுக்கும் குடிக்கத் தண்ணியில்ல, ஆடு மாடுகள் குடிக்கவும்  தண்ணியில்ல!
ஆறுகள் மராமத்துப் பணிகளுக்கு 12 கோடி பணம் ஒதுக்கியிருப்பதாக சொல்கிறார்கள். 
இந்த மராமத்துப் பணிகளை அவர்கள் காலத்தே செய்யாமல், காலம் கடந்து குடி மராமத்து என்ற பெயரில் தூர்வாரியதாக கணக்குக் காட்டி  12 கோடியில் 8 கோடியைச் சாப்பிட்டுவிட்டார்கள். மீதமுள்ள 4 கோடியில் வருஷா வருஷம் அணைகளுக்கு வெள்ளை அடிக்கிற வேலை மட்டும்தான் நடக்கிறது. ஷட்டர்களோட   சுவர்கள் தெறித்து, வெடித்து இருக்கிறது. இவைகளை சரி செய்வதில்லை. சில இடங்களில் ஷட்டர்கள் திறக்க முடியாத நிலைமைகளும் இருக்கிறது.
நமது டெல்டா பகுதியில் கல்லணைக்கு அருகில் பூதலூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், செங்கிப்பட்டி, கும்பகோணம் அருகில் வலங்கைமான் பகுதிகள், நாகை மாவட்டம் மற்றும் அங்குள்ள திருமருகல், வேதாரண்யம்  பகுதி இங்கெல்லாம்  தண்ணீர் வரவில்லை. நாகை மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் உள்ளது.  இங்கு கடல் நீர் உள்வாங்கி விட்டது. சாகுபடிப் பணிகளைத் துவங்குவதே கஷ்டம்.  அதோடு அந்தப் பகுதி வறட்சி அபாயத்திலும் இருக்கிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ராஜாமடம், மதுக்கூர் பகுதிகள் இங்கெல்லாம் அறவே தண்ணீர் வரவில்லை. 
மாவட்டக் கலெக்டருக்கு அரசினுடைய கவனக் குறைவை சமாளிக்கவே நேரம் போதவில்லை. அமைச்சர்களுடன் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். கொள்ளிடத்தில் குதிச்சிடாதீங்க, கரையை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு செல்லுங்கள் என்கிற அறிவிப்பை மட்டும்  விட்டுக் கொண்டிருக்கிறார்.

சொன்னா ஆச்சரியப்படுவீர்கள்.  அப்போதெல்லாம் கர்நாடகா துவங்கி கடைமடைப் பகுதிவரை அணையே கிடையாது.   நமது தஞ்சை டெல்ட்டா மாவட்டம் முப்போகம் விளைந்த மண். அபாரமான விளைச்சல். மாடு கட்டி போரடித்தால் மாளாதுன்னு  யானையைக் கட்டி போரடிச்ச  மண். முப்போகம் விளைந்த மண்ணில் இன்னைக்கு  ஒரு போகத்துக்குக் கூட வழியில்லை. மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு, இதன் மூலம் தமிழக அரசு மறைமுகமாக உதவுகிறதா என்ற சந்தேகமும் நமக்கு  ஏற்படுகிறது.  எந்த ஏரியும் முறையாக தூர்வாரப்படவில்லை. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேளாண்மை அமைச்சராக இருக்கும்போதும் இப்பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பது வேதனைக்குரியது. 
அதிராம்பட்டினம் அருகில் உள்ள  320 ஏக்கர் கொண்ட பரந்து விரிந்த செல்லிக்குறிச்சி ஏரி வறண்டு கிடக்கிறது.நீர் நிலைகளை தூர்வார வேண்டும். ஏரி, குளம், கண்மாய்களுக்கு மீண்டும் வழி ஏற்படுத்தி நீரை நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை  உயர்த்த வேண்டும். நிர்வாகக் கோளாறுகளை சரி செய்து ஆற்றில் முறைவைக்காமல் நீரைத் திறந்து விடவேண்டும். நீர் நிலைகளை நிரப்பிய பின்னர்தான் சாகுபடி நடக்க வேண்டும். 
தஞ்சை மாவட்டத்தில் 1000 கி.மீ தூரம் பயணிக்கும் 26 ஆறுகள், 25000 வாய்க்கால்களை பாதுகாத்தால் தான் கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் வரும். டெல்டா பகுதியில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளது. 
இந்த ஜீவாதாரமான பிரச்சினையில் விவசாயிகளோடு, ஏனைய மக்களாகிய நாமும் கரம் கோர்ப்போம்! நமது கடைமடைப்பகுதி விவசாய விளைநிலங்களை பாதுகாப்போம்.தமிழக அரசை  நீர் மேலாண்மையில், மேலும் அக்கறை கொள்ள வைப்போம்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR