தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, September 29, 2012


 BSNL தின சலுகை :
 13வது BSNL தினத்தையொட்டி பிரிபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகளை மாநில நிர்வாகம் வழங்க உள்ளது.
 சலுகை காலம் : 01-10-2012 முதல் 07-10-2012 வரை
Sl.No. MRP of Top-up voucher/C-top-up/Flexi top-up in Rs. (incl. of S.Tax) Usage value offered with Top-up voucher in Rs.
1 200 240
2 500 600
3 1000 1200
4 6000 7200
 உததரவு எண் : GM S & M-CM/165/RCVs& TOPUPs/2012-13/98 Dated @ Chennai-6 the 26.09.12

Friday, September 28, 2012

IDA உயர்வு 
      IDA உயர்வு அக்டோபர் 2012 முதல் 5.8 % உயர்ந்துள்ளது.   மொத்தம் IDA 67.3 %.

Saturday, September 22, 2012

சர்க்கரை நோயாளிகளுக்கு இனி அரிசி சாத(க)ம்

சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம்.

ர்க்கரை நோய், உடல் பருமன், அதிகப்படியான கொழுப்பு இப்படி எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நாம் தவிர்க்க நினைக்கும் உணவு அரிசி. ஆனால் ஒட்டுமொத்தமாக அரிசியை வில்லனாகப் பார்க்க வேண்டிய அவசியம் இனி நமக்கு இல்லை. ஏனென்றால் இந்தியாவில் விளையும் அரிசி, சர்க்கரை நோய்க்குப் பாதகமானது அல்ல என்று சர்வதேச ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம்.

200க்கும் அதிகமான நெல் வகைகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன. இதில் இந்தியாவில் விளையும் நெல் வகைகளிலிருந்து பெறப்படும் அரிசி  உடல் பிரச்சினைகளுக்கு எதிரி இல்லை என்று சமீபத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute - IRRI  ),  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் கிளைசீமிக் குறியீடு (Glycemic index -  GI) இந்தியாவில் விளையும் அரிசியில் குறைவாகவே உள்ளது.

இந்த GI  குறியீட்டை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். 55 அல்லது அதற்கும் குறைவான அளவில் உள்ளது முதல் வகை. 56லிருந்து 69 வரை உள்ளவை 2வது வகை. கிளைசீமிக் அதிகமாக உள்ள 3 வது வகை 70க்கும் அதிகமாக GI குறியீடு உள்ளவை.

சுவர்ணா, சம்பாவில் மேம்படுத்திய மஹ்சூரி போன்ற நாம் பயன்படுத்தும் பெரும்பாலான அரிசி வகைகளின் GI  குறியீடு 55க்கும் குறைவாகவே உள்ளது. அதேபோல பாசுமதி அரிசி 2வது பிரிவில் (gi 60) வருகிறது.  

அதுசரி, நாம் சாப்பிடும் உணவு உடல் பிரச்சினையை உண்டாக்குமா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

உணவு சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்து குறிப்பிட்ட உணவில் உள்ள கிளைசீமிக் அளவு (glycemic index GI கணக்கிடப்படுகிறது. உணவுப் பொருளில் உள்ள சர்க்கரைத் தன்மை கிளைசீமிக். குறிப்பிட்ட உணவை சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்தால் அதில் GI  அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம். ரத்த சர்க்கரையின் அளவு மிக மெதுவாக ஏறினால் அந்த உணவில் குறைந்த அளவு கிளைசீமிக் உள்ளது. கிளைசீமிக் அளவு 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகளே நல்லது.

GI  55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகள் பெரும்பாலான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், அவரை வகைகள் அனைத்தும்.

ந்த ஆய்வு குறித்து கோவை கே.ஜி.மருத்துவமனை மூத்த டயட்டீஷியன் சுபத்ரா சுந்தர் கூறும்போது, “இந்திய அரிசியில் கிளைசீமிக் குறியீடு குறைவாக உள்ளது என்பது நல்ல விஷயம். குறைவாக உள்ளது என்பதற்காக 3 வேளையும் அரிசியையே சாப்பிடுவது கூடாது. அவரவர்களின் உடல் உழைப்பைப் பொறுத்து தினமும் 1800லிருந்து 2400 கலோரி தேவை. 100 கிராம் அரிசி சாதத்தில் 360 கலோரி உள்ளது. ஒரு வேளை மட்டும் குறிப்பாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள் 100 கிராம் சாதம் சாப்பிட்டால் போதும். நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் என்று உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசியில் (பிரவுன் ரைஸ்) வைட்டமின்கள் அதிகம் என்பதால் அதையும் அவ்வப்போது சாப்பிடலாம். திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, கேரட் போன்றவற்றில் GI  மிகக் குறைவு. எனவே இவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம். அதேபோல கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள். கிளைசீமிக் அளவு குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வராது. உடற்பருமன் உள்ளவர்கள், கிளைசீமிக் குறைவாக உள்ள உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான உடல் எடை குறையும்.”

Saturday, September 15, 2012

சில்லறை வர்த்தகத்தில் 51 % அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு

சில்லறை வர்த்தகத்தில் 51 % அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு

சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில் மத்திய அரசு அதிரடியாக இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய புரட்சியாக இது கருதப்படுகிறது. எனினும் நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்து துறை: இவை தவிர தகவல் ஒளிபரப்புத் துறையில் 49 சதவீதமாக உள்ள நேரடி அன்னிய முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தவும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 49 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவை தவிர மின் துறையிலும் 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதில் 26 சதவீதம் நேரடி அன்னிய முதலீடாகவும், 23 சதவீதம் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மூலமும் அனுமதிக்கப்படும்.
அடுத்த அதிர்ச்சி... மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் வழங்குவதில் கட்டுப்பாடு ஆகிய அறிவிப்புகள் மூலம் மத்திய அரசு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இப்போது அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் அப்போது முயற்சி கைவிடப்பட்டது.
விரும்பும் மாநிலங்கள் செயல்படுத்தலாம்: மத்திய அமைச்சரவையின் முடிவை தில்லியில் அறிவித்துப் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விஷயத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். தனது மாநிலத்தில் அதனை செயல்படுத்துவதா அல்லது வேண்டாமா என்பதை அவர் முடிவு செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இதில் விருப்பமுள்ள மாநிலங்களுக்கும் அவரைப் போலவே உரிமைகள் உண்டு.
பல இலச்சினை (மல்டி பிராண்ட்) சில்லறை வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.550 கோடி) நேரடி அன்னிய முதலீடாக அனுமதிக்கப்படும். இவற்றில் பாதியளவு கிராமப்பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள், குடோன்கள் அமைக்க பயன்படும்.
நிபந்தனைகள்: குறைந்தபட்சம் 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட நகரில்தான் பெரிய அளவிலான சில்லறை விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்படும். மலைப் பகுதி நகரங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
விமானத்துறையில் ஏற்கெனவே 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் கிங்பிஷர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிதிச்சிக்கலில் சிக்கியுள்ள நிறுவனங்கள் பொருத்தமான வெளிநாட்டு நிறுவனங்களை கூட்டு சேர்த்துக் கொள்ள முடியும்.
மக்கள் நலனுக்காக... இது கடந்த நவம்பரிலேயே எடுக்கப்பட்ட முடிவுதான். அதனை நாங்கள் திரும்பப் பெறவில்லை. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை விரும்பாத மாநிலங்கள் அதனை அமல்படுத்தத் தேவையில்லை. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பாஜக மீது குற்றச்சாட்டு: தங்கள் கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனை எதிர்க்கின்றனர். ஆனால் பாஜக இதனை வைத்து அரசியல் நடத்துகிறது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.
தில்லி, ஜம்மு-காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியாணா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இதனை வரவேற்கின்றன. பிகார், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் ஆர்வமாகவே உள்ளன என்று ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
"வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கு உதவும்'
சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய நேரடி முதலீடு செய்ய அனுமதி தரும் முடிவானது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, அமைச்சரவை பல தீர்மானங்களை எடுத்துள்ளது. கடினமான தருணத்தில் நாட்டின் நலன் கருதி அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதலீடு செய்ய இந்தியா ஒரு சிறந்த நாடு என்ற நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Thursday, September 13, 2012

தோழர் A .M . கோபு அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.     



































தொழிற்சங்கவாதியும், தியாகியுமான தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாதது.   அவரின் மறைவுக்கு நமது மாவட்டச் சங்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செய்கிறது 

Monday, August 20, 2012

சிரிப்’பூ’ 

அப்ப வேலை இல்லையா..? 

“அப்பா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை”

“அப்ப நீங்க படிச்சா வேலை இல்லையா..?”

Saturday, August 18, 2012

TTA தேர்வு முடிவுகள் 
     கடந்த 27-05-2012 அன்று நடந்த TTA தேர்வில் நமது மாவட்டத்தில் 38 தோழர்கள் தேர்வெழுதினர்.   இவர்களில் 31 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை தெரிவிக்கின்றோம்.   வென்ற தோழர்களுக்கு நமது மகிழ்வான வாழ்த்துக்களும், பாராட்டும்.     
     இத் தேர்வுக்காக தஞ்சையில் பயிற்சி எடுத்துக்கொண்ட 31 தோழர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது பெருமகிழ்ச்சி.  வெற்றிக்குத் துணையாக பாடங்கள், கேள்வி-பதில்கள்  தயாரித்தளித்த திருச்சி AIBSNLEA தோழர் பால்சாமி அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம். ( இவருடைய குறிப்பிலிருந்து 45 சதவீத கேள்விகள் வந்தது குறிப்பிடத்தக்கது.).   இப் பயிற்சிக்கான ஏற்பாட்டுக்கு பெரிதும் ஒத்துழைத்த நமது தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்டச் சங்கத் தலைமைக்கும் மிக்க நன்றி.    அடுத்து நமது மாநிலச் செயலர் அவர்கள் அறிவித்த 18-08-2012 அன்றே தேர்வு முடிவுகள் வெளியானதும் நமக்குப்  பெருமகிழ்வு.
     தோழர்களுக்கான பயிற்சி வகுப்பை முறைப்படுத்தி ஏற்பாடு செய்து தந்த நமது TTA  தோழர் மோகன் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
     இப் பயிற்சி வகுப்பை சோராது பாடங்களை நடத்தி தந்த கீழ்க்கண்ட தோழர்களுக்கும்  நமது நன்றியை வணங்கி தெரிவிக்கின்றோம்.

பயிற்சி ஆசிரியர்கள் திருவாளர்கள்:
N. மோகன், TTA/TTP 
S. திருஞானமூர்த்தி, புரபசர், பெரியார் கல்லூரி.
கதிரவன், TTA / TTP 
ராம்ப்ரசாத், TTA / TNJ 
லெட்சுமி நரசிம்மன், சாஸ்தா  கல்லூரி BE மாணவர்.
( இவர் தோழர் நடராஜன் அவர்களின் அண்ணன் பையன்.) 
ராஜேஸ்வரன்,  TTA / TNJ 
ராஜேஷ், SDE 
ஜெயராமன், SDE 
சத்தியசீலன் DE 
குணசேகரன் DE 
தட்சிணாமூர்த்தி TTA  

வெற்றி பெற்ற தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்.
T. பக்கிரிசாமி, மாவட்டப் பொருளர்.     
தேர்வு முடிவுகளை தரவிறக்கம் செய்ய  DOWNLOAD



Friday, August 10, 2012

 விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்களின் பங்கு 
என்ற வரிசையில் .....

என். ஜி. ராமசாமி அல்லது. கோவை என். ஜி. ராமசாமி தமிழ் நாட்டின் கோவை மாவட்டத்தில் பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். கோவை மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1937-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கோவை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவராக விளங்கியவர்.

இளமை

தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் 1912- ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் நாள் ராமசாமி பிறந்தார். தந்தை பெயர் கோவிந்தசாமி, தாயார் சித்தம்மாள். இவரது சிறு வயதிலேயே இவருடைய பெற்றோர்கள் காலமானதால், இவரது அண்ணன் ராஜு என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். 1930இல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதானபோது, இவர் தனது மாணவத்தோழர்களை ஒன்று திரட்டித் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். புரட்சியில் மனம் சென்றாலும் காந்தியின் அகிம்சை, சத்தியம் ஆகிய கோட்பாடுகள் இவரைக் கவர்ந்தன. ராமசாமியும் அவரின் நண்பர்களும் ஒன்றுசேர்ந்து "உண்மை உள்ள கழகம்" என்ற பெயரில் ஒரு சங்கம் நிருவி வாரம் ஒருமுறை ஒளிவு மறைவின்றி தத்தமது கருத்துக்களை வெளியிடும் வழக்கத்தைக் கையாண்டனர். இக்குழுவினர் ஓர் அச்சகத்தையும் நடத்தி வந்தனர்.

பணி

கோவையின் சரோஜா பஞ்சாலையில் வேலைக்குச் சேர்ந்த ராமசாமி, அங்குள்ள இயந்திரங்களில் பழுது நீக்குவதில் தலைசிறந்த வல்லுநர் என்று பெயர் பெற்றார். அந்த ஆலையில் 'மாஸ்டர்' எனும் தகுதி பெற்றார். மக்களை ஒன்று திரட்டுவதிலும், திறமையாக வழிநடத்திச் செல்வதிலும் சிறந்த பணியாற்றினார். பணியாற்றும்போதே தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு விளங்கினார்.
தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்ற முறையிலும் இவரது தொண்டுகளையும் கண்ட காங்கிரஸ் கட்சி 1937-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவரைப் போட்டியிட வைத்தது. இவருக்கு எதிராக வலிமையான போட்டி இருந்தும், காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவில் இவரே வெற்றி பெற்று தனது 25- ஆம் வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1937இல் ராஜாஜி தலைமையில் அமைந்த சென்னை சட்டசபையில் இவரே வயதில் இளையவர். இவரது தொழிலாளர் சார்பு நடவடிக்கைகள், தொழிலாளர் நலனையே முதன்மையாகக் கொண்டிருந்தது.

கொலை முயற்சிகள்

இவரது நடவடிக்கைகள் கோவை ஆலை உரிமையாளர்களுக்கு வருத்தத்தை அளித்தபோதும், அதனைப் பொருட்படுத்தாது இவர் தொழிலாளர் நலனையே முக்கியமாக நினைத்தார். ஆனால் இவரது நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆலை உரிமையாளர்கள் சிலர் இவரை ஒழித்துக் கட்ட முனைந்தனர். அந்த முயற்சியில் தொழிலாளர்களையேப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்தனர். அச்சமயத்தில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வந்தனர். புலியகுளம் எனும் இடத்தில் ஓர் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்புகையில் சிலர் இவரைத் தாக்கி விட்டு, இறந்துவிட்டார் என்று ஓடிவிட்டனர்.
ஆத்திரமடைந்த தொழிலாளர்களை என்.ஜி.ராமசாமி அழைத்து "அமைதியாக இருங்கள். ஆத்திரப்படாதீர்கள். கொதிப்பும் ஆத்திரமும் காந்திய கொள்கைகளுக்கு முரணானவை" என்று எடுத்துரைத்தார். தொழிலாளர் தலைவர் வி. வி. கிரி அவர்கள் தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1937இல் கோவை ஜில்லா சோஷலிச பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் நிருவப்பட்டது. அதற்கு என்.ஜி.ராமசாமி துணைத் தலைவராக இருந்தார். சோஷலிசம் என்ற பெயரை அரசாங்கம் ஏற்காததால் அந்தச் சொல்லை நீக்கியே சங்கம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் என்.ஜி.ராமசாமி இந்த சங்கத்தின் தலைவராக ஆனார்.
1938 -ல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இந்தக்கூட்டம் முடிந்து அனைவரும் திரும்பும் வேளையில் என்.ஜி.ஆரை இரும்புத் தடிகள் கொண்டு தாக்கி வீழ்த்தினார்கள். இவர் மருத்துவ மனையில் இரண்டு மாத காலம் சிகிச்சை பெற்றுத் தேறினார். பிறகு 1940இல் உடுமலைபேட்டையில் நடந்த கூட்டத்திலும் இவர் தாக்கப்பட்டார். இதில் இவரது தொடை எலும்பு முறிந்தது. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின் இவர் தேறினாலும் தனது 28ஆம் வயதிலேயே கைத்தடி கொண்டு நடக்கும் நிலைக்கு ஆளானார்.

விடுதலைப் போரில் பங்கு

இரண்டாம் உலகப் போர காலத்தில், பிரித்தானியரின் போர் முயற்சிகளுக்கு உதவக்கூடாது என்று சத்தியாக்கிரகம் நடந்தபோது, ராமசாமி கோவை பகுதியில் 1940 ஆகஸ்ட் 22ஆம் தேதி சிங்காநல்லூரில் சத்தியாக்கிரகம் செய்தார். இதனால் சிறைப்பட்டு, வேலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நோய் வாய்ப்பட்டார். 1941 நவம்பர் 6-இல் தண்டனை முடிந்து விடுதலையானார்.
இவர் கோவையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் எதிரிகள் இவரைக் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். தப்பிய ராமசாமி விடுதலைப் போரில் தீவிரமாக ஈடுபட்டார். இவரது தலைமையில் இருந்த தொழிற்சங்கம் மூலம் பல காங்கிரஸ் தலைவர்களை அழைத்துக் கூட்டங்களை நடத்தினார். சுதந்திரப் போராட்ட வேகத்தை அதிகப்படுத்தினார்.

தொழிலாளர் பிரச்சினைகள்

இந்தச் சூழ்நிலையில் கோவை முருகன் ஆலையில் பகுதிநேர வேலை (ஷிஃப்ட்) தொழிலாளர்களுள் ஒரு பகுதி தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்தனர். நீதி கேட்கச் சென்றபோது ராமசாமியும், கே.பி.திருவேங்கடம் எனும் தலைவரும் தாக்கப்பட்டனர். இதன் பயனாகப் பெரும் கலவரம் மூண்டது. ஒரு தொழிலாளி இறந்தார். இதற்கிடையே 1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் காந்தி "வெள்ளையனே வெளியேறு" எனும் முழக்கத்தைக் கொடுத்தார். எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கோவையில் 1942 ஆகஸ்ட் 13ஆம் தேதி ராமசாமியும் கைதானார்.

இறுதிக்காலம்

வேலூர் சிறையில் இருந்த ராமசாமியின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, யாராவது கோவையிலிருந்து வந்து அழைத்துப் போகுமாறு சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் யாரும் போய் அழைத்து வருவதற்கு முன்பே இவரை தொடர்வண்டியில் ஏற்றித் தனியாக அனுப்பிவிட்டது. கோவையில் மயக்க நிலையில் வந்திறங்கிய இவரை மருத்துவர் சிவானந்தம் என்பவர் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகு மூன்று மாதங்களே உயிரோடு இருந்த என்.ஜி.ராமசாமி தனது 31ஆம் வயதில், 1943 பிப்ரவரி 12ஆம் நாள் கோவையில் விடுதலையைக் காணாமலேயே மறைந்தார். கோவை உப்பிலிபாளையத்தில் இவரது பெயரால் ஒரு பள்ளி இயங்கி வருகிறது.

Thursday, August 9, 2012

சிரிப்’பூ’    

நாய் வாடகைக்கு கிடைக்குமா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”

“முதலில் செல்வது எனது மனைவி.”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”

“இரண்டாவது பிணம்?”

“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”

அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்”


Saturday, August 4, 2012

சிரிப்’பூ’    

இரண்டாவது டிக்கெட் 

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த ஒரு நபர் தன் சீட்டில் போய் உட்கார்ந்தார். அவரின் பக்கத்து சீட் காலியாக இருப்பதை பார்த்த வேறு ஒருத்தர், “அந்த சீட்டில் உட்கார யாராவது வருவார்களா?” என்று கேட்டார்.

“இல்லை, அந்த சீட் காலியாகத்தான் இருக்கும்” என்று முதல் நபர் சொன்னார்.

“நம்பவே முடியவில்லை, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, வராமல் போன அந்த நபர் ஒரு சரியான முட்டாளாகத்தான் இருக்க வேண்டும், என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்க,

“அந்த சீட் என்னுடையதுதான், என் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் பரிதாபமாக அவள் இறந்து போய்விட்டதால் இந்த சீட் காலியாக இருக்கிறது..”

“உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நினைத்தால், எனக்கே வருத்தமாக இருக்கிறது.. என்ன செய்ய..? அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே?”

“அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..!”

"..??????????"

 

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR