தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 17, 2018

ஜனவரி 19 தியாகிகள் தினம் 

1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த தியாகிகள்

 அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்

 ஆகியோரின் நினைவுதினம் ஜனவரி 19 ல்  தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

19-01-2018 அன்று மன்னார்குடியில் தியாகி ஞானசேகரன் நினைவு ஸ்தூபியில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 இந்த தினத்தில் தியாகிகள் தின உறுதியேற்பு தமிழகமெங்கும் நடைபெறுவதில் நாமும் பங்கெடுப்போம். இத்தியாகச் செம்மல்களின் நினைவு நாளில் தொழிலாளிவர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்போம்.

நடந்தது என்ன?      விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து 1982, ஜனவரி 19 அன்று, அகில இந்திய பொது வேலைநிறுத்த அறைகூவலை தொழிற்சங்கம் விடுத்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளோடு விலைவாசி போன்ற மக்களின் இதர பல கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கம் களம் கண்டது.                                                 மேலும் படிக்க click Read more> 

இந்திய விடுதலைக்குப்பிறகு இந்த வகையான அகில இந்திய நடவடிக்கைகளில், 
ஜனவரி 19 பொது வேலைநிறுத்தம் தான் முன்னோடி.தொழிற்சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இந்தியா முழுவதும் விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களுக்கு திட்டமிட்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் தொழிலாளர்கள் - விவசாயிகளின் ஒன்றுபட்ட சக்தி பெரும் வீச்சோடு வெளிப்பட்டது.அரசுகள், இந்த போராட்ட வடிவங்கள் குறித்து கடுங்கோபம்கொண்டன. அதையும்தாண்டி தொழிலாளி - விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்றுபட்டு, கரம் கோர்த்துப் போராடுவது என்ற வர்க்க ஒருமைப்பாட்டுடன் வெகுண்டெழுந்தன. கடும் அடக்குமுறைகள் ஒரே தன்மையில் பல மாநிலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டன.தமிழகத்தில் ஜனவரி 19 அன்று நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் வேலைநிறுத்தம் செய்து ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்தது. இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் விவசாயிகளின் வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அரசுக்கு எதிரான முழக்கங்களைத் தெருக்களில், வயல்வெளிகளில் எழுப்பினர். வேறு எதையும் விட இந்த வர்க்க ஒற்றுமை அரசுகளின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.
துப்பாக்கிச்சூடு
1982ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் அருகில் உள்ள சாலையில் விவசாயிகள் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். பேருந்துகளை இயக்கக்கூடாது என்று தடுத்தனர். உடனே காவல்துறை, ஏற்கனவே தருணம் பார்த்திருந்த ஓநாய் போல தடியடி, துப்பாக்கிச்சூடு இரண்டையும் தொடங்கியது. விவசாயிகளை, வாலிபர்களை வயல்வெளிகளில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியது. வழியில் இருந்த கிராமங்களிலும், திருமெய்ஞானம் கிராமத்திலும் வீடுகளில் புகுந்து சட்டி, பானை, பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தது.ஊர்மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றும் நோக்கத்தோடு இளைஞர்கள் போலீசை எதிர்த்து நின்றார்கள். மற்றவர் உயிர்காக்க நின்ற இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.எம்.ஜி.ஆர். ஆட்சியின் தோட்டாக்களுக்கு பலியான அஞ்சான், நாகூரான் ஆகியோர்திருமெய்ஞானம் பூமியை தங்கள் குருதியில் நனைத்தார்கள். திருவாரூர் பகுதியில் ஞானசேகரன் என்ற வீரப்புதல்வன் தோட்டாக்களுக்கு இன்னுயிரை இரையாகத் தந்தான். ஏராளமான கைதுகள், வழக்குகள், தடியடிக் காயங்கள் என எம்.ஜி.ஆர். ஆட்சி அடக்குமுறை தாண்டவமாடியது.தமிழக உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜனவரி 19 ஒரு மைல்கல். தொழிலாளி - விவசாயி ஒற்றுமையை குருதியோடு உறுதிப்படுத்திய அந்த நாளை ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக தமிழகத் தொழிலாளி வர்க்கம் கடைப்பிடிக்கிறது.
குற்றம்_என்ன?              
இந்த வீரம் விளைந்த அந்த பூமியில்தான் 1968 வெண்மணி படுகொலையும் நடந்தது. டிசம்பர் 25ம் நாள் இரவு, விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரை உயிரோடு எரித்துக் கொன்ற கொடும்பாதகத்திற்கு இணையான இன்னொன்று அதற்கு முன்பும் நடந்ததில்லை. அதற்குப் பின்பும் நடத்தியதில்லை.உயிரோடு எரித்து சாம்பலாக்கும் அளவிற்கு அந்த ஏழை மக்கள் என்ன குற்றம் புரிந்தனர்? சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை கொடுமை என்கிற சமூக இழிவு ஒருபுறம். எதையும் கேட்கும் உரிமையற்ற பண்ணையடிமைத்தனம் மறுபுறம். மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட இந்த இரண்டு ஒடுக்குமுறைகளையும் அந்த மக்கள் எதிர்த்தார்கள். மனிதனாய் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் நிமிர்ந்தார்கள். ஆனால் சட்டப்படி இந்த நிலையை அரசே உருவாக்கித் தந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் இங்கே அரசில்லை.
சங்கம்_கண்டனர்
அந்த மக்கள் தங்களின் குறைந்தபட்ச உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், தங்கள் வேலைக்கான நியாயமான கூலியை தீர்மானித்துக் கொள்ளவும் சங்கம் அமைத்து செங்கொடி உயர்த்தினார்கள். இந்த விவசாயிகள் சங்கத்தை பூண்டோடு ஒழித்துவிட வேண்டும் என்று பண்ணையார்கள் கொலைவெறியோடு ஆயுதம் உயர்த்தினார்கள். அரசும், மாவட்ட ஆட்சி நிர்வாகமும், காவல்துறையும் இந்த ஏழை மக்களின் உரிமைக்குரலை புரிந்துகொள்ளும் உணர்வு அற்றவையாகவே இருந்தன. அடிமைகளுக்கு ஏனிந்த ஆசை என்று இளக்காரமாய் பார்க்கும் பார்வைதான் இவைகளுக்கு இருந்தன. பண்ணையார்களின் அடியாட்கள் கூட்டத்தோடு, உடுப்புப் போட்ட சேவகர்களாக காவல்துறையினர் இருந்தனர். விவசாய சங்க ஊழியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள். கூட்டம் கூட்டமாய் வேலை மறுத்து பட்டினி போட்டு வதைக்கப்பட்டனர்.
எதிர்விளைவு
இதற்கெல்லாம் எதிர்வினையாக, கூலி விவசாயிகள் அறுவடை நேரங்களில் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டு பண்ணையார்களுக்கு சவால்விடுத்தனர். அப்படிப்பட்ட வேலைநிறுத்தங்களையும் பேசித் தீர்ப்பதற்கு பதிலாக, வெளியாட்களை கொண்டு வந்து உடைக்க முற்பட்டனர். வெளியாட்களை தடுக்கும் முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபடும் போது கை கலப்புகள் நடந்தன. காவல்துறை பண்ணையார்கள் பக்கம் நின்றது. நித்தம் நித்தம் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டதைப் போலவே விவசாயிகள் இயக்கம் போராட்டப் பயணத்தைத் தொடர்ந்தது.
சூழ்ச்சி
பண்ணையார்கள் நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். செங்கொடி சங்கத்தை கலைத்துவிட்டு எல்லோரும் இந்த சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றும், செங்கொடிகளை இறக்கிவிட்டு அவர்களின் மஞ்சள் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் கிராமம் கிராமமாக அடியாட்களை கொண்டு மிரட்டத் தொடங்கினர். இதற்கு மேல் விவசாயிகள் கடைசியாக கேட்ட அரைப்படி நெல் கூலி உயர்வுக்குப் பதிலாக ஒருபடி நெல் கூலி உயர்வாகத் தருவதாக ஆசையும் காட்டினார்கள்.இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட செங்கொடிப் புதல்வர்கள் தலையே போனாலும் செங்கொடியைத் தாழ்த்தும் பேச்சிற்கு இடமில்லை என்று பதிலளித்தனர். எங்களை மனிதனாய் மதித்து, தோள் மேல் சுமந்து, எங்களின் உரிமையைக் கோருகிற கம்யூனிஸ்ட் இயக்கத்தை கைவிடும் தவறை எங்கள் கைக்குழந்தையும் செய்யாது என்று முழங்கினர்.இந்த வர்க்க உணர்விற்கு எதிரான பண்ணையார்களின் கொலைவெறியாட்டத்தின் உச்சகட்டம்தான் வெண்மணித் தீயின் கோரத் தாண்டவம். இந்தக் கொடுமைகளையெல்லாம் தாண்டி இறுதியில் பண்ணையடிமைத்தனத்திற்கு செங்கொடி கடிவாளமிட்டது.ஆயினும் அரசுகளின் துணையோடு பெரும் நில உடைமைக் கூட்டமும், பெரு முதலாளிக்கூட்டமும், வெளிநாட்டு முதலாளிகளும் தங்களின் சுரண்டலை புதுப்புது வழிகளில் செயல்படுத்துகின்றனர்.
பணி_தொடருகிறது!
சங்கம் அமைக்கும் உரிமையும், சங்க அங்கீகார ஏற்பாடும் இப்போது மறுக்கப்படுகிறது. ஒப்பந்தக்கூலி முறையை அதிகப்படுத்தி நவீன கொத்தடிமைத்தனத்தை தீவிரப்படுத்துகின்றனர். குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000 என்பதைக் கூட ஏற்க மறுக்கின்றனர். பயிற்சியாளர் அப்ரன்டீஸ் போன்ற பெயர்களில் மிகக் குறைவான கூலியில் உழைப்புச் சுரண்டல் நடக்கிறது.விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நிலையோ படுமோசமாக உள்ளது. அவர்களே கிராமப்புற முறைசாரா தொழிலாளர்களாகவும் பல மாதங்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்ச கூலி என்பதே இல்லை. பெண் உழைப்பாளர்கள் மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக பாரபட்சங்களும், பாலியல் துன்புறுத்தல்களும் தொடர்கின்றன. 100 நாள் வேலைத்திட்டம் முடக்கப்படுகிறது. முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்கின்றன. விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையும் கிடைக்கவில்லை. விவசாயத்தைக் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்கொலைகள் தொடர்கின்றன.எனவே தொழிலாளர் - விவசாயிகளின் போராட்ட ஒற்றுமை பலப்பட்டு ஓங்கிட வேண்டும். ‘நாடு நகரமெல்லாம், பட்டி, தொட்டியெல்லாம் உழைப்பாளர் படை திரட்டல் நடத்தல் வேண்டும்‘ உழைப்புச் சுரண்டல்களையும் கூலி அடிமைத்தனத்தையும் புதைத்தல் வேண்டும்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR