தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 3, 2010

தேச தந்தைக்கு பிறந்தநாள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

1.புத்திலிபாய்
போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தினந்தோறும்  விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உபவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.

ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலர்ந்த  முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.

2. அரம்பை சொன்ன வழி
மோகன்தாஸ் காந்தி, சிறு பிள்ளையாக, இருந்தபோதே கோவிலுக்குச் செல்வார். தாயுடன்  விஷ்ணு கோவில்களுக்குப் போவார். புத்லிபாயின் பக்தியும்,  தெய்வ நம்பிக்கையும் கண்டு மோகனதாஸூக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால், மோகனதாஸின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவள், அவரது வீட்டில் வேலை செய்து வந்த அரம்பை என்ற பெண்மணியே ஆவார்.

காந்திஜியை எடுத்து வளர்த்த செவிலித்தாயாகவும் இருந்தவள் அரம்பை. காந்திஜிக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் அதிகம். அத்துடன் இருட்டைக் கண்டால் காந்திஜி நடுநடுங்கிப் போவார். இருட்டில், கண்ணை மூடினால் பிசாசுகள் நிறைய வருவதாகவும் எண்ணி நடுங்குவார்.

காந்திஜிக்கு இருந்த இந்த பயங்களைப் போக்க வேண்டும் என்று அரம்பை மிகவும் பாடுபட்டாள்.

ஒருநாள் காந்திஜி, இருட்டறையில் தனியாகச் செல்வதற்குப் பயந்தார்.

“ஒன்றும் பயமில்லை, போ” என்றார்கள் அவருடைய சகோதரர்கள். ஆனால் காந்திஜி போகவில்லை. பயத்தோடு நின்றிருந்தார்.

அரம்பை இதனைக் கண்டாள். காந்திஜியின் பயத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணினாள்.

“மோகன்தாஸ், உனக்கு பயம் தோன்றும் போதெல்லாம் ‘ராம், ராம்’ என்று சொல். அந்த ராம நாமம் உன் பயத்தைப் போக்கிவிடும்”.

அவள் சொன்னதும், மோகன்தாஸ் காந்திஜிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ‘ராம், ராம், ராம்’ ராம்’ என்று கூறிக்கொண்டே இருட்டறைக்குள் சென்றார். பயம் மெல்ல மெல்ல அவரை விட்டு அகன்றது.

அது முதல் மோகன்தாஸ் காந்தி ராம நாம ஜெபம் செய்யத் துவங்கினார். அவர் இறக்கும் தருணத்திலும் ‘ஹே ராம்’ என்று ராம நாமத்தைக் கூறிக்கொண்டேதான் இறந்தார்.

 3. மனத்தில் நிலைத்த நாடகம்
இராஜ்காட்டில் மோகன்தாஸ் பள்ளிப் படிப்பைத் தொடந்தார். மத்தியதர மாணாக்கனாகவே அவர் விளங்கினார். வெட்கம் நிறைந்த மாணவனாகவே அவர் விளங்கினார். வெட்கம் நிறைந்த மாணவனாக, யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பார். ஒருமுறை அவர் படித்த பள்ளிக்கு மிஸ்டர் கைல்ஸ் என்பவர் இன்ஸ்பெக்டராக வந்தார்.

மோகன்தாஸ் படிக்கும் வகுப்புக்கு இன்ஸ்பெக்டர் வந்து, ஜந்து வார்த்தைகளைச் சொல்லி மாணாக்கர்களை எழுதுமாறு கூறினார். அந்த வார்த்தைகளில் ஒன்று ‘கெட்டில்’ என்பதாகும். அதனை மோகன்தாஸ் தவறாக எழுதினார். அப்போது, அங்கே வந்த வகுப்பு ஆசிரியர், மோகன்தாஸ் தவறாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரது கால்களை அழுத்தினார்.

அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து, சரியாக எழுதச் சொல்லவே அவர் அழுத்தினார். ஆனால் அவ்விஷயம் மோகன்தாஸூக்குப் புரியவில்லை.

‘காப்பி’ அடித்து எழுதுவது தவறு என்று மோகன்தாஸ் எண்ணினார். ‘கெட்டில்’ என்ற வார்த்தையை மோகன்தாஸைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் சரியாக எழுதியிருந்தார்கள்.  மோகன்தாஸ் தமது ஆசிரியரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் வைத்திருந்தார்.

மோகன்தாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த மற்ற இரு நிகழ்ச்சிகள், அவருடைய பிற்கால வாழ்வின் அடித்தளங்களாக அமைந்தன எனலாம்.

காபா காந்தியின் ‘சிரவணபித்ரு பக்தி நாடகம்’ என்னும் புத்தகம் இருந்தது. அப்புத்தகம் மோகன்தாஸை மிகவும் கவர்ந்தது. புத்தகத்தை அவர் பலமுறை படித்தார். அச்சமயத்தில் படக்காட்சி நடத்துபவர் சிலர் ராஜ்காட்டிற்கு வந்தார்கள். சிரவணன் பித்ரு பக்தி நாடகக் காட்சிகளைப் படமாக காட்டியதை மோகன்தாஸ் பார்த்தார். கண்ணிழந்த தாய் தந்தையரை சிரவணன் காவடியில் வைத்துக்கொண்டு தூக்கிச் செல்வதை மோகன்தாஸ் படக்காட்சியில் பார்த்தார். அக்காட்சியானது அவரது மனத்தை விட்டு அகலவே இல்லை. சிரவணன் இறந்ததும் அவனது பெற்றோர்கள் துன்பக் கடலில் ஆழ்ந்து புலம்பினார்கள். அப்போது சோகரசம் ததும்பும் பாடல் ஒன்றைப் பாடுவதாக படக் காட்சியில் காட்டப்பட்டது. அந்தப் பாட்டும் அதன் மெட்டும் மோகன்தாஸின் உள்ளத்தை உருக்கியது. தந்தை வாங்கித் தந்த வாத்தியக் கருவியில் மோகனதாஸ் அந்த சோகப்பாட்டை அடிக்கடி வாசிப்பார்.

சிரவணனின் கதை, மோகன்தாஸூக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

இச்சமயத்தில், ஒரு நாடகக் கம்பெனி, அரிச்சந்திர நாடகத்தை நடத்தியது. மோகன்தாஸ், இந்த நாடகத்தைக் காணத் தந்தையிடம் அனுமதி பெற்றிருந்தார். நாடகத்தைக் காணச் சென்றார். அரிச்சந்திரனின் சத்தியம் தவறாத வாழ்வும் அதனால் அவர் அடைந்த துன்பங்களையும் கண்டு மோகன்தாஸ் மனம் உருகினார். அந்த நாடகம் அவரது நெஞ்சில் நீங்கா  இடம் பெற்றது.

பலமுறை அந்நாடகத்தைக் காணச் சென்றார். வீட்டிற்கு வந்தபிறகும் அதே நினைவாக, அரிச்சந்திரனாக தன்னை கற்பனை செய்துகொண்டு நடித்து மகிழ்ந்திருப்பார்.

‘அரிச்சந்திரனைப் போன்று ஏன் எல்லோரும் சத்தியவந்தர்களாக இருக்கக்கூடாது?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வார்.

சத்தியத்தைக் கடைப்பிடிப்பது நின்று அரிச்சந்திரன் பட்ட துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற இலட்சியம் அவருடைய உள்ளத்தில் குடி கொண்டது.

மோகன்தாஸின் வாழ்வு மகத்தான வாழ்வாக மலர, இளம் உள்ளத்தில் விழுந்த இந்த விதைகளே, பெரும் மரங்களாகி உயர்ந்த லக்ஷியங்களாயின என்பதைக் கூறவும் வேண்டுமோ?

 4.சைவ உணவின் பெருமை

மோகன்தாஸூக்கு பதின்மூன்று வயது இருக்கும் பொழுது, ஒரு நண்பர் அவரோடு நட்பு பாராட்டினார். அந்த நண்பர் அவரோடு நட்பு பாராட்டினார். அந்த நண்பர் நல்ல பலசாலியாகவும் பராக்கிரமச் செயல்கள் செய்பவராகவும் விளங்கினார். அவருடைய தேக பலத்தைப் பார்க்க மோகன்தாஸூக்கு வியப்பு ஏற்படும்.

“நாம் பலவீனர்களாக இருப்பதற்குக்  காரணமே புலால் உண்ணாததுதான். ஆங்கிலேயர்களைப் பார். நம்மை அவர்கள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதற்கு என்ன காரணம்? அவர்கள் புலால் உண்கிறார்கள். பலசாலியாக விளங்குகிறார்கள்” என்று நண்பர் அடிக்கடி கூறுவதை மோகன்தாஸ் கேட்டார்.

மோகன்தாஸ் இயல்பாகவே மிகுந்த பயந்த சுபாவம் உடையவர். உடல் மெலிந்தவர். நண்பர் கூறுவதைக் கேட்டு, புலால் உண்ணுவதால்தான் பலம் பெற முடியும் என்று தீர்மானித்தார். புலால் உண்டு, பலம் பெற்று, இந்தியர்களை, ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்றும் எண்ணினார்.

மோகன்தாஸின் குடும்பத்தார் சைவ உணவே உண்பவர்கள். எனவே புலால் உண்பதை வீட்டில் இருப்போர் அறியாமல் உண்ண வேண்டும். இதை எண்ணி மோகன்தாஸ் கலங்கினார். ஆனால் நண்பர், அவரது கலக்கத்தைப் போக்கினார். வீட்டிலுள்ளோர் அறியாதவாறு உண்ணலாம் என்றார்

முடிவாக, ஒருநாள் குறிக்கப்பட்டது. நண்பர் ஆற்றங்கரைக்கு மோகன்தாஸை அழைத்துச் சென்றார். தனியான இடத்தில் நண்பர், தாம் கொண்டுவந்திருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்தார். இருவரும் சாப்பிடத் துவங்கினார்கள். மோகன்தாஸூக்கு, புலால் உணவும் பிடிக்கவில்லை. யாரும் அறியாமல் இச்செயலைச் செய்வதும் பிடிக்கவில்லை. ஒரு வாய்கூட அவரால் சாப்பிட முடியவில்லை. எழுந்துவிட்டார்.

நண்பரும் அதிகம் வற்புறுத்தவில்லை. முதல்நாள் தானே, இனி போகப் போக, மோகன்தாஸூக்கு புலால் உண்ணும் பழக்கம் ஏற்பட்டுவிடும் என்று நினைத்தார்.

மோகன்தாஸ், வீடு வந்து சேர்ந்தார். அவருக்கு, தாம் ஏதோ குற்றம் செய்துவிட்டோம் என்ற குறுகறுப்பு இருந்தது.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் செய்ததை மோகன்தாஸ் பெரும் குற்றமாகவே எண்ணினார். இரவு முழுவதும் இதைப்பற்றி எண்ணி வருந்தினார். தூங்கினால், வயிற்றுக்குள் உயிருள்ள ஆடு கத்துவது போலக் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்துக்கொண்டார்.

உடல் பலம் பெறுவதற்காக புலால் உண்பதும் அதை மறைத்துச் செய்வதும் மோகன்தாஸூக்குப் பிடிக்கவில்லை.

பொய் சொல்வது என்பது மோகன்தாஸூக்கு பிடிக்காத குணம். எனவே, தாய் தந்தையரை ஏமாற்றி அவர்களிடம் பொய் சொல்லி புலால் உண்டு, பலம் பெற வேண்டாம் என்று தீர்மானித்தார்.

எனவே மறுநாள் முதல், நண்பரிடம் தன்னுடைய தீர்மானத்தைக் கூறிவிட்டார். நண்பர் பலமுறை வற்புறுத்தியும், மோகன்தாஸ், தமது தீர்மானத்தைக் கைவிடவில்லை.

மோகன்தாஸின் இந்தக் கொள்கை பிற்காலத்தில் அவருக்கு மிகவும் பயனளித்தது. புலால் உண்பதைவிட சைவ உணவு உண்பவரே தேகபலத்தில் விஞ்சியவராக இருக்கிறார் என்று மகாத்மா காந்தி கூறினார். மகாத்மா காந்தி இங்கிலாந்தில் படித்த காலத்திலும், தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த காலத்திலும் சைவ உணவையே உண்டு வந்தார். அதுவே சாத்வீகமான–ஆரோக்கியமான உணவு என்பது காந்திஜியின் கொள்கை.

 5. தந்தை காட்டிய பாதை
காந்திஜியின் இளம் வயதில் ஒருவரோடு நட்பு கொண்டுருந்தார். அந்த நண்வர் சுருட்டு குடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திஜிக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. சுருட்டு குடிக்கும் பழக்கத்தை நாகரீகம் உள்ளவர் என்பதைக் காட்டிக் கொள்ள காந்திஜியும் நண்பருடன் சேர்ந்து புகை பிடிக்கத் துவங்கினார்.

இப்பழக்கத்தின் காரணமாக செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. சுருட்டு வாங்குவதற்கு பணம் வேண்டுமே. சில காலம் கடைகளிலும் நண்பர்களிடமும் பணம் கடனாகப் பெற்று சுருட்டு வாங்கினார். கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார்.

தமது மூத்த சகோதரரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை காந்தி வெட்டி எடுத்தார். இவ்வாறு செய்யும் போது அவர்மீது அவருக்கே வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டது. தாம் செய்யும் செயல் எத்தகையது என்று எண்ணிப் பார்த்து தாங்கொணாத துயரம் அடைந்தார்.

கடைசியாக, தாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் செய்தவற்றை, நேரில் சொல்வதற்கு நடுக்கமாக இருந்தது. எனவே காகிதத்தை எடுத்தார். தாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காந்திஜியின் தந்தை காபா காந்தி உடல்நலம் சரியில்லாத்தால் படுத்த படுக்கையாக இருந்தார்.

தந்தையிடம் சென்று தாம் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அவர் படித்துவிட்டு தரும் தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார்.

காந்திஜி தந்த கடித்த்தை வாங்கிக்கொண்ட காபாகாந்தி, எழுந்து உட்கார்த்துகொண்டார். கடித்த்தைப் படித்தார். படிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கடிதத்தைப் படித்து முடித்தும் கண்களை மூடிக் கொண்டார். பிறகு கடிதத்தைக் கிழித்துப் போட்டார். பிறகு படுத்துக்கொண்டார்.

தான் செய்த தவறுகளுக்கு தந்தையிடம் தண்டனையை எதிர்பார்த்து நின்ற காந்திஜி அழுதார். கோபம் கொண்டு திட்டுவார் அல்லது அடிப்பார் என்றி காந்திஜி எண்ணினார்.

தந்தையிடம் காந்திஜி மறைக்காமல், தமது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்டாரல்லவா? குற்றம் செய்வதை ஒப்புக்கொள்பர்களை மன்னிக்க வேண்டும் என்பதே காபா காந்தியின் எண்ணமாக இருந்தது.

இதை காந்திஜிஅஹிம்சை என்று உணர்ந்தார். அன்பால் எதையும் வெல்லாம் என்பதே அஹிம்சையின் ஆணிவேர். இந்த தத்துவம், இளம் பிள்ளையாக இருக்கும் போதே காந்திஜியின் மனத்தில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே!

பெரும் சாதனைகளை பிற்காலத்தில் செய்ய அஹிம்சையும் சத்தியமுமே காந்திஜிக்குத் துணையாக நின்றன.

தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பையும் பெற்றபிறகு காந்திஜி, தேவையற்ற பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்.

 6. சத்தியம் காத்தார்
மோகன்தாஸ் காந்திஜியின் தந்தை உடல்நலம் குன்றி படுத்த படுக்கையானார். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை மோகன்தாஸ் செய்து வந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த புண்ணைத் துடைத்துக் கட்டுவது, மருந்து கொடுப்பது, அவருடைய கால்களைப் பிடித்துவிடுவது போன்றவற்றைச் செய்தார். மருத்துவம் பார்த்தும், கவனமுடன் இருந்தபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் காலமானார்.

தந்தை இறந்தபோது மோகன்தாஸூக்கு வயது பதினாறு. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். இரண்டு வருஷங்களில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறினார்.

பின்பு பவநகரில் இருந்த ஸமால்காஸ் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி வாழ்வு மோகன்தாஸூக்குப் பிடிக்கவில்லை. தந்தையின் நண்பரும் குடும்ப ஆலோசகருமான மாவ்ஜி தவே என்பவர் ராஜ்காட் வந்திருந்தார். அவர், மோகன்தாஸின் கல்வியைப் பற்றி கேட்டார்.

கல்லூரியில் படிப்பது பற்றிக் குடும்பத்தார் கூறினார்கள்.

ஆனால் மாவ்ஜி தவே, பி.ஏ. படித்து, பின்பு சட்டம் படிக்க இன்னும் ஆறு வருஷம் ஆகும். அப்படிப்படித்தாலும் சம்பளம் அதிகம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதைவிட இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்தால் வக்கீலாகவும் இருக்கலாம். இல்லையென்றால் சமஸ்தானங்களில் திவான் பதவியில் இருக்கலாம். பாரிஸ்டர் படிப்பு மூன்று வருஷத்தில் முடிந்துவிடும் என்றார்.

அவர் கூறியது நல்ல யோசனையாகவே இருந்தது. ஆனால் மோகன்தாஸ் குடும்பத்தார்  அதற்கு ஒப்பவில்லை. அக்காலத்தில் கடல் கடந்து செல்வது என்பது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.

சிறிய தந்தையைப் பார்த்துப் பேச மோகன்தாஸ் ராஜ்காட்டிலிருந்து போர்பந்தருக்குச் சென்றார்.

இங்கிலாந்து சென்று மேற்படிப்பு படிப்பதைப் பற்றிய அவரது எண்ணத்தைக் கேட்டார்.

எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட மோகன்தாஸின் சிறிய தந்தை, ‘என்னுடைய ஆசி உனக்கு என்றும் உண்டு. உன் தாய் சம்மதம் தந்தால் நீ இங்கிலாந்துக்குப் போ’ என்று கூறி அனுப்பினார்.

மோகன்தாஸ் ராஜ்காட் வந்ததும் நேராக அன்னை புத்லிபாயிடம் வந்தார். சிறிய தந்தை அனுமதியளித்துவிட்டார் என்று கூறி அன்னையின் அனுமதியை வேண்டினார்.

புத்லிபாய் எளிதில் இணங்க மறுத்தார்.

‘அம்மா, நான் வெளிநாடு சென்று படிப்பதில் உனக்கு விருப்பமில்லையா? ஏன் என்னைத் தடுக்கிறாய்?’

‘மோகன்தாஸ் என் மனத்தில் இதைப்பற்றி சில எண்ணங்கள் இருக்கிறது. வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அதனால்தான் நான் உன்னை அனுப்பத் தயங்குகிறேன்’.

‘என்னை நம்புங்கள் அம்மா. நீங்கள் செய்ய வேண்டாம் என்று சொல்வதைச் செய்யமாட்டேன். இது உண்மை’ என்றார்.

‘தூரதேசம் செல்லும்போது நீ உறுதியாக இருந்தாலும் அவ்வாறு இருக்க முடியுமா? மோகன்தாஸ் எனக்கு கலக்கமாக இருக்கிறது’.

அன்னையின் கலக்கத்தை மோகன்தாஸ் காந்தி உடனே போக்கினார்.

‘மதுபானம் செய்யமாட்டேன்; மாமிசம் உண்ண மாட்டேன். மங்கையரைத் தொடமாட்டேன்’ என்று உறுதியோடு கூறி சத்தியம் செய்து கொடுத்தபிறகு புத்லிபாயின் கலக்கம் நீங்கியது.

மோகன்தாஸ் காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதி அளித்தார்.

1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம நாளன்று பம்பாயிலிருத்து இங்கிலாந்துற்குக் கப்பலில் பயணமானார்.

7. மமிபாய்க்காக வாதிட்டார்

மூன்றாண்டு காலம் லண்டனில் வசித்து மேற்படிப்பை முடித்தார், மோகன்தாஸ் காந்தி. 1891-ம் ஜூன் மாதம் 10-ம் நாளன்று பாரிஸ்டர் ஆனார். மறுநாள், வக்கீல் தொழில் நடத்தும் உரிமையைப் பெற்றார். உடனே ஜூன் 12-ம் நாளன்று இந்தியாவுக்குப் பயணமானார்.

எஸ்.எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் தாய்நாடு நோக்கி பயணப்பட்ட மோகன்தாஸ் காந்தியின் மனம் கவலையில் ஆழ்ந்தது.

இங்கிலாந்தில் படித்த பாரிஸ்டர் படிப்பில், இந்தியச் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை. இது தெரியாமல் இந்தியக் கோர்ட்டுகளில் எவ்விதம் வாதாட முடியும் என்று கவலை கொண்டார்.

பிங்கட் என்ற ஆங்கிலேய நண்பர் கூறியதை நினைவில் கொண்டு மனத்தைத் தேற்றிக்கொண்டார். “வக்கீல் தொழில் செய்வதற்கு முயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்” என்றார் அந்த நண்பர்.

மோகன்தாஸ் காந்தி தாயகம் வந்தடைந்தார். வந்ததும் அவர், தாய் காலமான செய்தியறிந்து கண்ணீர் விட்டார். தாயிடம் அளித்த வாக்கை இந்த மூன்றாண்டு காலமும் மீறவில்லை என்று கூற எண்ணியிருந்தார். அவருடைய விருப்பம் நிறைவேறவில்லை.

‘பாரிஸ்டர்’ என்ற பட்டத்துடன் வந்த மோகன்தாஸ்காந்தி, தமது வக்கீல் தொழிலைத் துவங்கினார்.

முதல்முதலாக, பம்பாய் ஸ்மால்காஸ் கோர்ட்டில், காந்திஜி ஒரு வழக்கை எடுத்து நடத்தினார். மமிபாய் என்னும் பெண்ணின் சார்பில் வழக்கறிஞராக ஆஜரானார். மமிபாய் பிரதிவாதி. வாதியின் தரப்பில் இருந்த சாட்சிகளை காந்திஜி விசாரணை செய்ய வேண்டும்.

முதல் சாட்சி, கூண்டுக்கு அழைத்து வரப்பட்டார். விசாரனை செய்ய காந்திஜி எழுந்து நின்றார். ஆனால், அவருக்கு முன்னே, நீதிமன்றமும் நீதிபதியும் எல்லோரும் சுழல்வதுபோல இருந்தது.

ஆம் காந்திஜியின் தலை சுற்றியது. என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தார். பயமும் கலக்கமும் தோன்றின.

எதுவும் கேட்காமலேயே, தம்முடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். பிறகு, தமது கட்சிக்காரரான மமிபாயிடம், “என்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியவில்லை. வேறொருவரை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

திகைப்பும் தயக்கமும், சபை கூச்சமும் காந்திஜியை இவ்வாறு செய்ய வைத்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பாரிஸ்டர் காந்திஜி மன்றத்திற்குப் போகவில்லை. விண்ணப்பங்கள் எழுதிக் கொடுத்து ஓரளவு வருவாய் பெற்றார்.

முதல் வழக்கில் பேச இயலாமல் தயங்கி வெளிவந்த காந்திஜி பின்னாளில் லட்சக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டங்களில் பேசினார்; பல நீதிமன்றங்களில், ஆங்கில அரசுக்கு எதிராக, பலரும் போற்றும்படியாக வாதம் புரிந்திருக்கிறார். பல அரசியல் தலைவர்கள் பாராட்டும். வண்ணம் பேசினார் என்பதை அறிய வியப்பாக இருக்கிறதல்லவா?

 8. கம்பவுண்டர் வேலை
வக்கீல் தொழிலிலும் குடும்ப வாழ்விலும் காந்திஜிக்கு நிறைய பொறுப்பும் பணிகளும் இருந்தன. அத்துடன் பொதுச்சேவை செய்வதிலும் காந்திஜிக்கு அதிக நாட்டம் இருந்தது. தொண்டு செய்யும்போது, மனம் அமைதியடைவதாக காந்திஜி நினைத்தார்.

ஒருநாள், காந்திஜியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவன் வந்து பிச்சை கேட்டான்.

அவனைக் கண்டு இரங்கிய காந்திஜி, ஊர் பெயர் எல்லாம் விசாரித்தார். அவன் ஒரு ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்தவன். வேலையின் கடுமை, சரியான வசதியில்லாததால் நோய்வாய்ப்ப்ட்டான். குஷ்ட நோய் பற்றியதால், அவனை கூலியாக ஒப்பந்தம் செய்யதவர்கள், வேலையை விட்டு விலக்கினார்கள். அதுமுதல் பிச்சை எடுத்து வாழ்வதாக அவன் சொன்னான்.

அந்தப் பிச்சைக்காரனுக்கு ஒருவேளை சோறு போட்டு அனுப்பி வைத்துவிட காந்திஜி விரும்பவில்லை.

தன்னுடைய வீட்டில் தங்கச் சொன்னார். அப்போது, அவனுடைய உடம்பிலிருந்து புண்களைத் தாமே துடைத்து மருந்திட்டார். இவ்வாறு சில நாட்கள், காந்திஜி அந்த பிச்சைக்காரனுக்கு தொண்டு செய்தார்.

அவனுக்கு சற்று உடல்நிலம் தேறியதும்,ஒப்பந்தக் கூலிகளுக்காக ஏற்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதுமுதல் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காந்திஜியின் உள்ளத்தில் அதிகமாகியது.

ரஸ்டம்ஜி, தர்மப்பணிக்காக என்று அளித்த பணத்தில், காந்திஜி ஏழைகளுக்காக ஒரு இலவச மருத்துவமனையை நிறுவினார். டாக்டர் பூத் என்பவரை நியமித்தார்.

இந்த இலவச மருத்துவமனையில் தினமும் ஒரு சில மணி நேரங்கள் பணியாற்றினார்.

டாக்டர் பூத் நோயாளிகளைக் கவனித்து, அவர்களுக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுப்பார். காந்திஜி, அதன்படி மருந்துகளைக் கலக்கித் தந்து, ‘கம்பவுண்டர்’ வேலை செய்தார்.

எளியவர்களுக்குத் தொண்டு செய்வதுடன், எதையும் தானே செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர் காந்திஜி. தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார். அவ்வளவு ஏன், தலைமுடி வெட்டிக்கொள்வதையும் கூட அவரே செய்துகொள்வார்.

 9. சிநேகிதமும் சொந்தமும்
பம்பாயை விட்டு மீண்டும் ராஜ்காட் வந்து சேர்ந்தார் காந்திஜி. காந்திஜியின் மூத்த சகோதரர் போர்பந்தர் ராஜாவின் செயலாளராக இருந்தார். அப்போது, அவர் பேரில் ராஜா, தவறாக யோசனை சொன்னார் என்ற காரணம் காட்டி, காந்திஜியின் சகோதரர்மீது குற்றம் சாட்டினார். அக்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பு, ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ‘பொலிடிகல் ஏஜெண்டிடம்’ ஒப்படைக்கப்பட்டது.

தமது சகோதரர் கூறியதை காந்திஜி ஒப்புக்கொள்ளவில்லை.

“தாங்கள் குற்றமற்றவர் என்றால் எதற்காக அவருடைய தயவை நாட வேண்டும்…… பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

“தம்பி, உனக்கு இந்த ஊரைப்பற்றித் தெரிய நியாயமில்லை.  உனக்குத் தெரிந்தவர் அந்த பொலிடிகல் ஏஜெண்ட். உனக்கு சகோதரனின் பேரில் சிறிதாவது பாசம் இருக்குமானால் இதைச் செய்வாய்”.

மூத்த தமையனாரிடம் அன்பும் பாசமும் நன்றியும் கொண்டிருந்தார் காந்திஜி . எனவே அவருக்காக, பொலிடிகல் ஏஜெண்டைக் காணச் சென்றார்.

அந்த ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்ததும், பழைய நட்பை நினைவூட்டினார். ஆனால் அந்த ஆங்கிலேயரோ, இந்தியர் ஒருவருடன் நட்புப் பாராட்டவும் விரும்வில்லை. நேரடியாக விஷயத்தைக் கூறினார்.

“உங்களுடைய சகோதரர்  செய்த செயல்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்காக நீங்கள் என்னிடம் எதுவும் பேச வேண்டியதில்லை. ஏதேனும் சொல்ல விரும்பினால் அதை அவரே முறைப்படி எழுத்துமூலம் தெரிவிக்கட்டும்” என்றார்.

அவர் இவ்வாறு கூறிய பிறகும் காந்திஜி ” தயவுசெய்து என் வார்த்தையைக் கேளுங்கள்” என்றார்.

அந்த ஆங்கிலேயருக்கு மிகுந்த கோபம் வந்தது.

”நீங்கள் வெளியே போகலாம்” என்றார் கடுமையாக.

அதன்பிறகும் காந்திஜி வெளியேறாமல் நின்றிருந்தார். உடனே ஆங்கிலேயர், தமது பணியாளை அழைத்தார்.

அந்தப் பணியாள், காந்திஜியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.

கோபம் கொண்ட காந்திஜி, அந்த ஆங்கிலேய அதிகாரியின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்பினார். ஆனால் வக்கீல் தொழிலில் உயர் அனுபவம் பெற்றவர்கள், அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சி காந்திஜிக்கு ஒரு படிப்பினையைக் கற்றுக் கொடுத்தது.

”இனிமேல் எக்காரணம் கொண்டும், சொந்தப் பணிகளுக்கு சிநேகிதத்தை–நட்பை–பயன்படுத்திக் கொள்ளமாட்டேன்” என்று தமக்குத்தாமே உறுதி எடுத்துக்கொண்டார்.

10. வாழ்வில் திருப்பம் தந்த பயணம்

போர்பந்தரிலிருந்த ஒரு வியாபாரக் கம்பெனியின் அழைப்பை ஏற்று காந்திஜி தென்னாப்ரிக்காவுக்குப் பயணமானார். தாதா அப்துல்லா கம்பெனியில் வேலை பார்ப்பவராக வருஷத்திற்கு 105 பவுன் சம்பளத்துடன் சேர்ந்தார். 1893-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காந்திஜி தென்னாப்ரிக்காவுக்குப் புறப்பட்டார்.

கப்பலின் மேல்தளத்தில் பயணம் செய்யுமாறு, கப்பல் தலைவர் காந்திஜியிடம் கேட்டுக்கொண்டார். முதல் வகுப்பு வேண்டும் என்று காந்திஜி கேட்டதற்கு ‘இடமில்லை’ என்றார் தலைவர்.

”எப்படியாவது ஒரு இடம் தர உங்களால் முடியாதா?” என்று காந்திஜி பணிவுடன் கேட்டார்.

காந்திஜியை தலைமுதல் கால்வரை உற்றுப் பார்த்த அந்தக் கப்பல் தலைவர், ”என்னுடைய சொந்த அறையில் என்னோடு சேர்ந்து இருங்கள்” என்றார். அவருக்கு காந்திஜி நன்றி கூறினார்.

அந்தத் தலைவருக்கு சதுரங்கம் விளையாடுவதில் விருப்பம் அதிகம். ஆனால் காந்திஜிக்கோ சதுரங்கம் பற்றி எதுவும் தெரியாது. கப்பல் தலைவர், காந்திஜிக்கு சதுரங்கம் விளையாடக் கற்றுத் தந்து, தன்னுடன் விளையாட வைத்தார்.

பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து, லாமு துறைமுகத்தை அடைந்தது. கரையில் இறங்கி ஊரைச் சுற்றிப் பார்க்க எல்லோரும் விரும்பினார்கள். காந்திஜியும் இறங்கினார்.

”இந்தத் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பு அதிகம். எச்சரிக்கையுடன் போய், விரைவில் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார் கப்பல் தலைவர்.

காந்திஜி லாமு நகரைச் சுற்றிப் பார்த்தார். மூன்று மணி வரை கரையில் இருந்துவிட்டு, பிறகு கப்பலை நோக்கிச் சென்றார்கள். படகிலே அதிகமாக மனிதர்கள் ஏறியதால் படகு தள்ளாடியாது. மேலும் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. காந்திஜிக்கு படகில் நிற்கவும் இடமில்லை.

கப்பலின் அருகில் படகு வரும். ஆனால் வேகமான அலைகளால் அடித்துக்கொண்டு போகும். இதனால் கப்பலில் இருந்த ஏணியைப் பற்றி ஏற முடியாமல் போயிற்று.

கப்பல் கிளம்புவதற்கான சங்கொலி கேட்டதும் காந்திஜி விரைவாகச் செயல்பட்டார். தம்முடைய படகின் அருகில் வந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டார். அதில் அதிகமானவர்கள் இல்லை. எனவே எளிதாக அப்படகை, கப்பலின் ஏணியருகே செலுத்த முடிந்தது.

காந்திஜி அவசர அவசரமக ஏணியைப் பற்றி ஏறி, மேல்தலத்தைஅடைந்ததும், கப்பலும் புறப்பட்டது. பயணம் தொடர்ந்தது.

தென்னாப்ரிக்கா பயணம், காந்திஜியின் வாழ்வில், மகத்தான திருப்பங்களை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR