தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, February 27, 2019

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே?

முகிலன் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேலாகி விட்டது. சமூக மாற்றத்தில் நம்பிக்கையுடன் களமாடும் அனைவரும் அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரியாமல் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர் இருக்கின்றாரா? இல்லையா? என்பதே கேள்விக்குள்ளாகி இருக்கின்றது. 'முகிலன் எங்கே?' என்ற கேள்வி சமூக வலைத்தளங்களை தாண்டி பொதுச் சமூகத்தின் கேள்வியாக மாறிக் கொண்டு இருக்கின்றது. முகிலன் எங்கே என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நாம் அனைவரும் பெரும் துயரமும் அச்சமும் அடைந்துள்ள நிலையில், அதற்கு சட்டப்படி பதில் தர வேண்டிய அரசு எந்தவித செயல்பாடும் அற்று, இரை தின்ற மலைப்பாம்பைப் போல அசைவற்றுக் கிடக்கின்றது. அவர்களுக்கு முகிலனைப் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை முகிலனைப் போன்றவர்கள் இருப்பதைவிட இல்லாமல் போவதே நல்லது. அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக கேள்வி எழுப்பும் அனைவரும் காணாமல் போக வேண்டியவர்கள் என்றே அரசு நினைக்கின்றது.
இந்த அரசுக்குத் தெரியாமல் முகிலன் காணாமல் போய் இருக்க ஒரு துளி அளவு கூட வாய்ப்பில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்காக 13 பேரை படுகொலை செய்த இந்த குற்றக் கும்பல் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது அனைவருக்கும் தெரியும். முகிலன் வெளியிட்ட துப்பாக்கி சூடு பற்றிய ஆதாரங்கள் இத்தனை நாட்களாக இந்த அரசு சொல்லி வந்த அப்பட்டமான பொய்யைக் கிழித்து இருக்கின்றது. அரசு, காவல்துறை, ஸ்டெர்லைட் மூன்றும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதை முகிலனின் வீடியோ அம்பலப்படுத்தி இருக்கின்றது. இந்த வீடியோவின் மூலம் பின்வரும் தகவல்கள் நமக்குத் தெரிய வருகின்றது.
11:55:24 மணிக்குத்தான் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே வருகின்றார்கள். காவல்துறை சரியாக 11:57:50 மணிக்குத் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்குகிறது. அதற்கு முன்பாக அங்கிருந்த CCTV கேமாரக்கள் சிலரால் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றன. துப்பாக்கிச்சூடு தொடங்கிய ஒரு நிமிடம் பதினான்கு விநாடிகளுக்குள் மக்கள், ஆட்சியர் அலுவலகத்தைவிட்டு வெளியேறி விடுகின்றன‌ர். அதற்குப் பிறகு காவல்துறை அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை, தடுத்து விடுகின்றார்கள். அதன்பின் 12:06 மணிக்கு ஸ்டெர்லைட்டின் அடியாள் கும்பல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்த வாகனங்களுக்குத் தீ வைக்கின்றது. இதை அங்கிருந்த காவல்துறையினர் அனைவரும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் துணை வட்டாட்சியர் சேகர் மூலமாக 11 மணிக்கே போராட்டக்காரர்கள் தீ வைப்பு நிகழ்த்தி விட்டதாகவும், அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே மக்கள் வந்ததே 11:55:24 மணிக்குத்தான். அப்படி இருக்கும்போது எப்படி 11 மணிக்கே தீ வைக்க முடியும்?
மேலும் 11.48 மணிக்குத் தீ வைக்கப்பட்டதாக திருநெல்வேலி காவல்துறை உதவி ஆணையர் புகார் அளித்ததாகவும், அதனால் 11.50 மணிக்குத் தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதாகவும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போலியான ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் தீயணைப்புத்துறை அதிகாரி சண்முகம் ஆவார். ஸ்டெர்லைட்டின் கூலிப்படை தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பே துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலைகளை மறைப்பதற்காகவே காவல்துறையின் துணையுடன் ஸ்டெர்லைட் தன்னுடைய கூலிப்படையை வைத்து தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டது சந்தேகத்திற்கு இடமின்றி இந்த வீடியோ மூலம் அம்பலமாகி இருக்கின்றது.
ஆனால் சில சமூக விரோதிகள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால்தான் சுட நேர்ந்தது என இத்தனை நாட்களாக அரசும், காவல்துறையும், தினமலர் போன்ற விபச்சார ஊடகங்களும், சில விஷ நாக்குப் பேர்வழிகளும் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தார்கள். ஆனால் முகிலனின் வீடியோ இதை எல்லாம் பொய் என்று நிரூபித்து இருக்கின்றது. மக்களவைத் தேர்தலும் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளுக்குமான தேர்தலும் நெருங்கி வரும் சமயத்தில் இந்த வீடியோவை முகிலன் வெளியிட்டது அரசைக் கோபப்படுத்தி இருக்கலாம். ஸ்டெர்லைட்டுடன் தனக்குள்ள கள்ளக்கூட்டையும், கொலையில் தனக்குள்ள பங்கையும் அம்பலப்படுத்துவதால் மக்களின் கோபம் முழுவதும் உண்மையான தேச விரோதிகளான தங்கள் மீதும், தங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாத பிஜேபியின் மீதும் திரும்பி, மக்கள் தங்களை படுதோல்வி அடையச் செய்து விடுவார்கள் என்ற கோபத்தில் தான் அரசு திட்டமிட்டு முகிலனை ஏதோ செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அரசின் மீதும், அதன் கூலிப்படையாக செயல்படும் தமிழக காவல்துறை மீதும் சந்தேகப்படுவதற்கான அத்தனை காரணங்களும் மிக வலுவாகவே உள்ளன‌.
முகிலனுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கான முழு பொறுப்பும் இந்த அரசையே சேரும். ஸ்டெர்லைட் கம்பெனிக்காக தன் சொந்த நாட்டு மக்களை இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொன்ற இந்த அரசு மக்கள் மன்றத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டிய அரசு ஆகும். கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், ஊழல் பேர்வழிகளும் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது முகிலன் மட்டுமல்ல, இந்த குற்றக் கும்பலுக்கு எதிராகப் போராடும் அனைவரும் காணாமல் போகும் நிலை நிச்சய‌ம் வரும். காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய ராணுவத்தால் காணாமல் போகச் செய்யப்பட்டதைப் போல இனி தமிழ்நாட்டிலும் நடக்கும். எல்லா வகையிலும் தோற்று வெட்கக்கேடான முறையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் குற்றக் கும்பல் தன்னை காப்பாற்றிக் கொள்ள மிகக் குரூரமான வழிகளை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆட்சி கொலைகளின் மூலமும், காணாமல் போகச் செய்வதன் மூலமும் தன்னை தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கின்றது.
நாம் அனைவரும் முகிலனுக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுப்போம். அதே சமயம் ஸ்டெர்லைட் ஆலைக்காக அப்பாவி பொது மக்களை கொலை செய்த, கொலை செய்யத் தூண்டிய அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்பதற்காகவும் போராட்டத்தை முன் எடுப்போம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR