தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, February 9, 2019

ரூ.3000 ஓய்வூதியம் என அமைப்புசாரா தொழிலாளரை ஏமாற்றும் மத்திய அரசு.
=========================================================
(கொஞ்சம் நீளமாக இருந்தால் பெரும்பாலோர் படிப்பதில்லை. ஆனால் இது முக்கியமான விஷயம்.  இதற்கு மேலும்  சுருக்க வழியில்லை)

அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் கொடுக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினர். இதன்மூலம் அத்திட்டத்தின்சில விபரங்கள் தெரியவந்தன. அவை பின்வருமாறு:

1. இத்திட்டம் மாதம் ரூ.15,000க்குக் குறைவாக வருவாய் உள்ள அமைப்புசாராத தொழிலாளர்களுக்கான திட்டமாகும்.

2. தற்போது 18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
18 வயதுள்ள தொழிலாளி மாதம் தோறும் ரூ.55 சந்தா செலுத்த வேண்டும். வயது ஏற ஏற செலுத்த வேண்டிய தொகையும் உயர்கிறது. இப்போது 40 வயது என்றால் மாதம் ரூ. 200 செலுத்தவேண்டும். அதற்கு ஈடான தொகையை மத்திய அரசும் போடும். இப்போது 41 வயதாகியிருந்தால் அவருக்கு திட்டம் பொருந்தாது; ஓய்வூதியமும் கிடையாது.

3. இப்போது சந்தா தொடங்கினால், அவருக்கு 60ஆம் வயதில் ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்சம் 40 வயதானவர்தான் இதில் சேரமுடியும் என்பதால், இத்திட்டப்படியான முதல் ஓய்வூதியம் இன்னும் 20 ஆண்டு கழித்துத்தான் வழங்கப்படுகிறது. 

4. பணம் கட்டும் தொழிலாளி 60 வயதுக்கு முன்பே இறந்து போனால், அவரது மனைவி அல்லது கணவர் உடனே இத்திட்டத்தில் சேர்ந்து,  ஒருமாதம் கூட விட்டுப் போகாமல் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும். 

5. தொழிலாளி 60 வயது வரை இருந்தால்தான் ரூ.3000 ஓய்வூதியம். அவரது கணவன் அல்லது மனைவிக்கு என்றால் ரூ.1500 மட்டும்தான் விதவை ஓய்வூதியமாகத் தரப்படும். ஓய்வூதியம் பெறும் முன்பே தொழிலாளியும் அவரது மனைவி (அல்லது) கணவனும் இறந்து விட்டால் அதன்பின்பு கணக்கில் உள்ள கட்டிய தொகை எல்லாம் அரசுக்குப் போய்விடும். எல்.ஐ.சி. மூலம் இத்திட்டம் நிர்வகிக்கப்பட்டாலும், இதில் ஆயுள் காப்பீடு ஏதும் இல்லை.

6. இத் திட்டத்துக்காக இப்போது மத்திய அரசு ரூ. 500 கோடி ஒதுக்கியுள்ளது. அமைப்புசாராத தொழிலாளி எண்ணிக்கை 47 கோடி என்றும் பட்ஜெட் கூறுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு தொழிலாளிக்கு வெறும் 10 ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் உள்ளது. கட்டிடம் கட்டுபவர்களிடமிருந்து நலநிதி வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று 80 வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நலவாரியங்கள் உள்ளன. இவற்றில் பதிவு செய்து கொண்டவர்களுக்கு, அவர்கள் 59 வயதில் பதிவு செய்திருந்தாலும்கூட, 60 வயது நிறைந்ததும் மாதம் ரூ.1000 ஓய்வூதியமாகக் கொடுக்கப்படுகிறது. ஓய்வூதியத்துக்காக எந்த நிதிப்பங்களிப்பும் அவர்கள் செலுத்த வேண்டியதில்லை.

மத்திய அரசு மூலம் 20 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட இருக்கும் 3000 ரூபாயின் மதிப்பு, தற்போதைய 1000ரூபாய் அளவுக்காவது இருக்க வாய்ப்பில்லை. நல வாரியங்கள் மாநில தொழிலாளர் துறையின் நிர்வாகத்தில் இயங்குகின்றன. மத்திய அரசு ஓய்வூதிய திட்ட செயலாக்கத்தையும் அதே துறையிடம் விடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஊடகங்களில் செய்யப்பட்ட பெரும் விளம்பரம் மூலமாக, இப்போது 1000 ரூபாய் பெறுபவர்கள், அது 3000 ரூபாய் ஆகப்போகிறது என மகிழ்ந்து போயிருக்கின்றனர். ஆனால் உள்ளதையும் பறிப்பதாகத்  திட்டம் உள்ளது. தமது வாழ்வாதாரம் குறித்தும், பாதுகாப்பற்ற முதுமைக்காலம் பற்றியும் சாமானிய மக்களுக்கு இருக்கும் அச்சத்தையும் ஏக்கத்தையும் களமாகக் கொண்டு பாஜக அரசு விளையாடுகிறது. இந்த மலிவான தேர்தல் உத்தி கண்டனத்துக்குரியதாகும்.

பாரதீய ஜனதா தன்னை மாற்றிக் கொள்ளப்போவதில்லை.  இதைத் தனது தேர்தல் முழக்கமாக வைத்து, ஏமாந்தவர்களிடம் வாக்குகளைப் பறிக்க முயலும். மக்கள் அதற்குப் பதில் தருவார்கள். 

மத்திய அரசுத் திட்டம் விருப்பபூர்வமானது மட்டுமே. தொழிலாளி விரும்பினால் சேரலாம். மாநில நலவாரியங்களுக்கும் அதற்கும் தொடர்பு ஏதும் இல்லை. 

எனவே தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நலவாரி்யங்கள் வழியாக வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர வேண்டும் என்றும், ஓய்வூதியத்தை மாதம் ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மாநில அரசை ஏஐடியூசி கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR