நன்றி தினமணி
பிகார் மாநிலத்தில், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாபோதி கோயிலில் தொடர்ச்சியாக 9 குண்டுகள் வெடித்து, இரண்டு புத்தத் துறவிகள் காயமடைந்திருக்கிறார்கள். ஆயுதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அன்பை அணியாகப் பூண்ட அசோக மன்னன், போதிமர நிழலில் ஞானம் பெற்ற புத்தருக்கு, அதே புத்த கயையில் (கயா), அவர் மறைந்த 250 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிய கோயிலில் குண்டுகள் வெடித்துள்ளன. வெடிக்காத இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் புழங்கும் நேரத்தில் இந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யாமல், அதிகாலை 5.30 மணியளவில், குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்திருப்பதை தீவிரவாதிகளின் "கருணை' என்று வகைப்படுத்த முடியாது. இதன் நோக்கம் இந்த புனிதத் தலத்தை மதிக்கும் பௌத்தர்களின் மனதில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
மியான்மர் மற்றும் இலங்கையில் முஸ்லிம்கள் மீது பௌத்தர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதலை நடத்த இந்திய முஜாஹிதீன்கள் திட்டமிட்டிருந்ததாக ஆறு மாதங்களுக்கு முன்பே மத்திய உளவுத்துறை தெரிவித்திருந்தது. அந்தத் தகவலைத் தொடர்ந்து, இந்தக் கோயிலின் அருகே மாநிலக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயிலுக்கு வெளியில் மட்டுமே இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கோயிலுக்கு உள்ளே, 80 அடி புத்தர் சிலை அருகிலும் மற்றும் 3 இடங்களிலும் குண்டு வெடித்திருப்பதால், கோயிலுக்கு உள்ளே பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவது அவசியம்.
எல்லா குண்டுவெடிப்புகளின்போதும் வழக்கமாகச் சொல்வதைப் போலவே இந்தச் சம்பவத்திலும்கூட, "தீவிரவாதிகளின் திட்டம் குறித்து முன்னமேயே எச்சரித்தோம்' என்று மத்திய புலனாய்வுத் துறை சொல்வது பொறுப்பின்மையின் உச்சம். இத்தகைய தகவல் கிடைத்தவுடன், மாநில அரசின் காவல்துறையுடன் மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒரு பிரிவும் களத்தில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டாமா?
"யுனெஸ்கோ'-வினால் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மகாபோதி கோயிலைப் பாதுகாப்பதில்கூட இத்தகைய மெத்தனப் போக்கு இருக்குமேயானால், நாம் எப்படி மற்ற பாதுகாப்புச் சின்னங்களையும், நகரங்களையும் அப்பாவி மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு மத்திய உள்துறையும் மாநில அரசும்தான் விடையளிக்க வேண்டும்.
அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமுக்கு கொள்கை அளவில் நேர்எதிரிடையான மதம் பௌத்தம்தான். இஸ்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் இறை மறுப்பாளர்களையும் "காஃபிர்'கள் என்று இடித்துரைக்கிறது. ஏனைய மதங்கள் இஸ்லாமைப்போல ஏகஇறைவனை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர இறை மறுப்பை அங்கீகரிக்கும் மதங்களல்ல. ஆனால், பௌத்தத்தின் அடிப்படையே இறை மறுப்பு என்பதால் பௌத்தமும் இஸ்லாமும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று முரணானவை. அதனால்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்க்க முற்பட்டனர். ஆகவே மியான்மர் மற்றும் இலங்கையில் இந்த இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் நடந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக இந்தியாவிலுள்ள புத்த கயையில் இப்படியொரு தாக்குதலை நடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.
மியான்மர் மற்றும் இலங்கையில் பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடையே மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. அதற்காக, உலகின் வேறு நாடுகளில் அமைதியாக வாழ்ந்துவருகின்ற, எந்தவகையிலும் தொடர்பே இல்லாத அப்பாவி பௌத்தர்களைத் தாக்குவது நியாயமற்றது, அர்த்தமற்றது
புத்தர் ஞானம் பெற்ற போதிமரத்தை வழிபடுவதற்காக உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும், குறிப்பாக சீனா, ஜப்பான், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பக்தர்கள் புத்த கயை வந்து கொண்டிருக்கிறார்கள். இச்சம்பவத்தால் அயல்நாட்டவருக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்க வேண்டியது இந்திய அரசின் முதல் கடமை.
இந்தப் பிரச்னைக்கு ஜனநாயக ரீதியாகவும், சட்டப்படியும் தீர்வு காண அமைதியான அரசியல் வழிமுறைகள் இருக்கின்றன. அதைவிட்டுவிட்டு வன்முறையைக் கையாளுவதும் சாதாரண பொதுமக்களைக் காயப்படுத்துவதும் இறைநம்பிக்கை உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்தின் பெயரால் நடத்தப்படும் எந்த ஒரு வன்முறைத் தாக்குதலும் அன்பும் கருணையும் உருவான இறைவனுக்கு நிச்சயமாக ஏற்புடையதாக இருக்காது என்பதுகூட தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஏன் தெரியவில்லை?
இத்தகைய வன்முறை குறிப்பிட்ட மதத்தினரிடையே பீதியை ஏற்படுத்தினாலும், இறைநம்பிக்கையை மேலும் வலிமையாக்கவே இந்த பீதி பயன்படும் என்பதைத் தீவிரவாதிகள் உணர்ந்தால், இவ்வாறு வழிபாட்டு ஸ்தலங்களின் மீதான தாக்குதலை நடத்த மாட்டார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளிலும், தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும், அவர்களுக்குப் பணம் கிடைக்கும் வழிகளைத் தடுப்பதிலும் அரசியல் நெஞ்சுரம் இல்லாமல் இருப்பதால்தான் தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தீவிரவாதிகளுக்கு இதயமும் கிடையாது. இரக்கமும் கிடையாது; உண்மையான இறை உணர்வும் கிடையாது என்பதைத்தான் இந்தத் தாக்குதல் வெளிப்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment