பாஜகவின் அணுகுமுறை மிக மோசமான முன்னுதாரணம்!
கு
ஜராத்தில் மிகச் சாதாரணமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநிலங்களவைத் தேர்தலை, ஒரு தேசிய விவகாரம் ஆக்கி, ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளைக் கையாண்டு அவமானப்பட்டிருக்கிறது பாஜக.
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக இரு இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்வது நிச்சயம் என்ற சூழலே இருந்தது. காங்கிரஸ் வேட்பாளராகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் அறிவிக்கப்பட்டபோது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார். பேர அரசியலின் விளைவாக குஜராத் காங்கிரஸ் உடைக்கப்பட்டது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சங்கர் சிங் வகேலா வெளியேறினார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து வெளியேறினார்கள். காங்கிரஸிலிருந்து கவரப்பட்ட பல்வந்த் சிங் ராஜ்புத் வேட்பாளராகக் களத்தில் இறக்கப்பட்டார். காங்கிரஸ் சட்ட சபை உறுப்பினர்கள் பாஜகவால் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டனர் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டு வந்தது. இதன் விளைவாகத் தங்கள் கட்சியினுடைய சட்ட சபை உறுப்பினர்களை கர்நாடகத்துக்குக் கூட்டிச் சென்று விடுதியில் தங்கவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ்.
தேர்தலில் பாஜக வேட்பாளர்களான அமித் ஷா, ஸ்மிருதி இரானி இருவரும் எதிர்பார்த்தபடி வென்றனர். கடுமையான போராட்டத்துக்குப் பின் அகமது படேல் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். ஆனால், அவரது வெற்றி அறிவிக்கப்படுவதற்கு முன் பாஜக நடந்துகொண்ட விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரையும் முகம் சுளிக்கவைத்தது. அணி மாறி பாஜகவுக்கு வாக்களித்த இரு உறுப்பினர்கள் வாக்குச் சீட்டில் முத்திரையிட்டுப் பெட்டியில் போடுவதற்கு முன்னால், பாஜகவின் தேர்தல் முகவரிடம் ஓட்டுச் சீட்டுகளைக் காட்டியது அங்கிருந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்தத் தேர்தலை பாஜக எதிர்கொண்ட விதத்துக்கான அப்பட்டமான சாட்சியமாக அது அமைந்தது. காங்கிரஸார் இதைச் சுட்டிக்காட்டி, அந்த இரு ஓட்டுகளைச் செல்லாததாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது, ‘அப்படி ஏற்கக் கூடாது’ என்று வலியுறுத்துவதற்காகக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவில் தொடங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேட்லி, சட்ட அமைச்சர் ரவிஷங்கர் வரை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்தது பாஜக. மிக மோசமான முன்னுதாரணம் இது. ஆளுங்கட்சி யின் அழுத்தத்தையும் தாண்டி தேர்தல் ஆணையம் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டதன் விளைவாக நாட்டின் மானம் அங்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது.
அரசியல் வெற்றிக்காக எந்த வழிமுறையையும் கையாள லாம் என்ற முடிவுக்கு ஒரு கட்சி வருவதைக் காட்டிலும் மோசம் இல்லை. வெற்றி - தோல்விகளைத் தாண்டியது ஒரு கட்சி மக்களிடத்தில் பெறும் நம்பிக்கையும் நம்பகத்தன்மையும். பாஜக இதை ஒரு படிப்பினையாகக் கருத வேண்டும்!
நன்றி: தி ஹிந்து
No comments:
Post a Comment