தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, August 23, 2017


மாற்றம் தேவை
By எஸ்ஏ. முத்துபாரதி  
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு எனச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது உயர்ந்த குணங்களுக்காக சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது என்ன நிலை?
அண்டை மாநிலங்களோடு இணக்கமில்லாத சூழல். நமது பொருட்களை விற்கச் சென்றாலும் சரி, நாம் அவர்களிடமிருந்து நதிநீர்ப் பங்கீடு பெறுவதாக இருந்தாலும் சரி எப்போதும் பிரச்னைதான். ஏன் இந்த நிலை?
ஒரு குடும்பத்தில் அண்ணன் - தம்பி உறவே சரியில்லாதபோது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் எப்படி உறவு சுமூகமாக இருக்கும் என்பது நியாயமான கேள்விதான்.
ஆனால், சிறந்த ஆட்சி என்பது அண்டை மாநில உறவுகளை முறையாக பராமரித்து நமக்கான காரியங்களை ராஜதந்திர முறையில் சாதித்துக் கொள்வதுதான்.
பிற மாநிலங்களில் அவர்களின் கல்வி முறையில், அரசு இயந்திர நிர்வாக முறையில், மழைநீர் சேமிப்பு அல்லது நீராதார முக்கியத்துவத்தினை நாம் ஏன் பின்பற்ற மறுக்கிறோம்? நல்லது எங்கிருந்தாலும் நாம் சென்று கற்றுக்கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் தவறல்லவே.
தான் வாழும் இந்த சொற்ப காலத்திற்குள் தேவைக்கும் அதிகமாக சொத்து சேர்த்து, இன்னும் சேர்க்க வேண்டும் என்கிற பேராசையுடன் அலைந்து பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளை நாம் என்னவென்று சொல்வது?
அவர்கள் தங்கள் நிலை உணர்ந்து போதும் என நினைத்து இனிவரும் காலங்களிலாவது மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்தால்கூட தமிழகம் சற்று தலைநிமிரும் என நம்பலாம்.
அரசாங்க பணிகள் நடைபெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் நியமனம் அல்லது ஏதாவது கொள்முதல் செய்வது உள்ளிட்ட எந்த செயல்பாடு என்றாலும் ஊழல்தான். இதில் என்ன கொடுமை என்றால், யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்கும் லஞ்சம், ஊழல் எனும்போது யாரிடம் சென்று என்ன முறையிடுவது?
ஆனால், இம்மாதிரியான குறுகிய நோக்கமுள்ளவர்கள் இந்தத் தலைமுறையினர்தான். முப்பது நாற்பது வருடத்திற்கு முந்தைய தலைமுறையினர் தங்கள் பெரும் சொத்திலிருந்து பெரிய பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டி தானமாக தந்துள்ளனர்.
அன்றைய மனிதர்கள் இம்மாதிரி குறுகிய மனப்பான்மையோடு இருந்திருந்தால் நிறைய கல்விக்கூடங்கள் இருந்திருக்காது.
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது மன்னர் வம்சம் ஆண்ட அந்தக்காலம். இந்தக்காலத்தில் மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களால், மக்கள் எவ்வழியோ அப்படியே ஆட்சியாளர்களும் இருப்பார்கள்.
மக்கள்தான் எங்கு போனாலும் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதே கடமை என முடிவெடுத்துச் செயல்படுகிறார்கள்.
ஊழல் நடந்தால் அதில் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிற குறையறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சாலைகளில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த அளவு வேண்டுமானாலும் குழி தோண்டுகிறார்கள். ஏதோ பணி செய்கிறார்கள். அந்தப் பணி முடிந்தவுடன் அந்த சாலையை சீர் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.
இங்குதான் மக்கள் கேள்வியே கேட்க மாட்டார்களே. அவரவர்களுக்கு வேறு சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதற்காக வீதிதோறும் மதுபானக்கடை. மக்களுக்கு குடிக்கும் பழக்கத்தை அடிக்கடி ஞாபகப்படுத்த திரைப்படங்களில் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை மதுபானக்கடை காட்சிவேறு.
அதுவும் இப்போது சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சி தொடர்களில்கூட மதுக்குடிக்கும் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
எத்தனையோ வளர்ந்த நாடுகளை, வல்லரசு நாடுகளைப் பற்றி படிக்கிறோம், கேள்விப்படுகிறோம். அப்போதெல்லாம் நமது நாடும் அந்த நிலைமைக்கு வரவேண்டும் என மனதிற்குள் ஆசைப்படுகிறோம்.
ஆனால் நடக்கும் அநியாயங்களை, அக்கிரமங்களை பார்த்து சிறிதுகூட எதிர்ப்பின்றி, உணர்ச்சியின்றி நாம் பயணப்பட்டால் எப்படி ? இந்திய அளவில் தமிழர்களின் மரியாதை எந்த அளவிற்கு உள்ளது என்பதை பிற மாநிலங்களுக்குச் சென்றால் புரிந்து கொள்ளலாம். எந்த மாநிலத்திலும் தமிழன் என்றால் மரியாதையில்லை.
காரணம் நமது ஆட்சிமுறையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ஊழல்கள், லஞ்சம், மக்களின் எழுச்சியின்மை, போராட்ட குணமின்மை, நேர்மையின்மை போன்றவை. விதிவிலக்காக சிலரும் சில செயல்பாடுகளும் இருக்கலாம். அதை வைத்து தமிழகத்தின் பெருமை உயர்ந்துவிடாது.
சிலர் பொதுநலன் கருதி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்து அவர்களை சிறையில் அடைப்பதும் ஒரு நாகரிக சமுதாயத்திற்கு அடையாளமில்லை.
ஆட்சியின் மீதும் அதிகாரத்தின் மீதும் சம்பாதிப்பதின் மீதும் பேராசை உள்ளவர்கள் சமூக ஆர்வலர்களை தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறையில் தள்ளிவிடுவார்கள்.
இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பேதமெல்லாம் இல்லை. படித்தவன் அவனுக்குரிய வகையில் சட்டத்தை மீறுவதும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும்தான் முயற்சி செய்கிறான். இதற்கு படிக்காதவர்கள் எவ்வளவோ பரவாயில்லை எனும் சொல்லும்படியான சூழல்தான் உள்ளது.
மக்களிடையே நேர்மை இருந்தால்தான் அவர்களிலிருந்து வரும் தலைவர்களுக்கும் நேர்மை இருக்கு.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR