தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, May 22, 2018

நமது பார்வையில் தேசிய டிஜிடல் 
தகவல் தொடர்பு கொள்கை 2018
தோழர். ஆர். பட்டாபிராமன் 

அனைவருக்கும், கட்டுப்படியான விலையில், உலகத் தரத்தில் தொலைபேசி என்ற முழக்கத்துடன் திரு. நரசிம்மராவ் பிரதமராக அமெரிக்கா புறப்படும் முன் அறிவிக்கப்பட்டது ’புதிய தொலைத்தொடர்பு கொள்கை’.  அதன் அடுத்தடுத்த பரிணாமங்கள், அரசுத் தொலைத்தொடர்பு துறை BSNL என்ற பொதுத்துறையாக மாறியது, புதிய புதிய டெலிகாம் தனியார் நிறுவனங்கள் உதயம், நிறுவனங்கள் இணைப்பு, நிறுவனங்கள் மூடல் என தொலைத்தொடர்பு வரலாறு தொடர்கிறது. அதன் அடுத்தக் கட்ட பரிணாம அவதாரம் மே 1-ம் தேதி அரசு அறிவித்துள்ள புதிய கொள்கை அறிவிப்பு.
இந்த முறை புதிய தொலைத்தொடர்பு கொள்கை என்ற முந்தைய பெயரைக் கைவிட்டு புதிய நாமகரணத்துடன் உதித்துள்ளது:  தேசிய டிஜிடல் தகவல் தொடர்பு கொள்கை -2018. இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமில்லை. இந்திய நாட்டின் டிஜிடல் தொலைத்தொடர்பு வர்த்தகப் பொருளாதாரத்தைச் சாராம்சத்தில், நாட்டின் மின்னணு முதலாளித்துவத்தை நோக்கித் தள்ளி உலகமயப்படுத்துவது என்பதை உணர்த்துவதே. தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அரசின் கொள்கை வரைவு நகலின் பெரும்பகுதியான அம்சங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுக் குழு (TRAI) பல பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கலந்து பேசி பரிந்துரைத்தவைகளே டிஜிடல் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. 2025-ம் ஆண்டு வாக்கில் இந்திய டிஜிடல் பொருளாதாரம் (one trillion) பதினாயிரம் கோடி கோடி அமெரிக்க டாலர் என்பதாக ஆகப்பெரிதாக வளரக் கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தத் துறை, பெரும் முதலீடுகள் தீவிரமாகத் தேவைப்படும் துறை என்பது கொள்கை அளவில் ஏற்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இதில் ஏற்கனவே செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் அந்த முதலீட்டிற்கு என்ன செய்யும், எங்கே போகும், எப்படி அரசின் கொள்கைகளை நிறைவேற்றும்வகையில் தொலைத்தொடர்பு வசதி விஸ்தரிப்புகளை மேற்கொள்ளும் என்பது விளக்கப்படவில்லை.  இது சாத்தியமாக வேண்டுமானால், அரசு 4G/5G ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளைச் சமச்சீரான வகையில் நமக்கு ஒதுக்கீடு செய்து வழங்கிட முன்வரவேண்டும்.  அரசு பெரிதும் வலியுறுத்தி முன்னிறுத்தும் கொள்கையான அனைத்து மக்களுக்கும் டிஜிடல் சேவையின் பலன் கிடைக்கச் செய்தல் என்ற ’டிஜிடல் இறையாண்மை’ என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் --BSNL, MTNL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வலிமைப்படுத்தப்படுவதுடன் அதன் ஸ்திரத்தன்மையும் நீட்டிப்பும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.  
வரைவுக் கொள்கையில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் சமமான சொற்களால் குறிப்பிடப்பட்டாலும், செயல்படும் சமமான வாய்ப்புள்ள தளமாக இல்லை. உதாரணத்திற்குத் தொலைத்தொடர்புத் துறையையும் அதிலுள்ள வேலை வாய்ப்பையும் எடுத்துக் கொள்வோம். பொதுத்துறை நிறுவனங்கள்தான் வேலையின்மையைப் போக்கும் சமூகக் கடப்பாடுள்ளதாகவும், நாட்டின் அனைத்து தொழிலாளர் நலச் சட்ட திட்டங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியவைகளாகவும் உள்ளன. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ அல்லது அதற்கென எந்த நெறிமுறைகளைப் பின்பற்றவோ கிஞ்சிற்றும் கவலைப் படுவதில்லை. அவைகளிடம் வெளிப்படையான ஆளெடுப்புக் கொள்கைகளோ ஊழியர்களுக்கான சேவை விதிமுறைகளோகூடக் கிடையாது.  அவ்வளவு ஏன், நிரந்தரமான வேலை என்பதே இல்லை; எல்லாம், ஒப்பந்த முறையில்—ஒப்புக்கொண்டால் உள்ளே, இல்லையெனில் உடனடியாக வெளியே என்ற அடாவடி கொள்கைதான். எவ்வளவு பணிக்கு எத்தனைப் பணியாளர்கள் / மேற்பார்வையாளர்கள் என்பது பொதுவிதியாக ஆக்கப்படாவிட்டால், சமதளத்தில் விளையாட்டு என்பதோ இந்தக் கொள்கை அமலாக்கத்தால் இவ்வளவு இலட்சம் இலட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்ற அரசின் அறிவிப்போ கேலிக்கூத்தாகவே முடிந்து போகும். 
. இந்திய நாட்டில் 15 லட்சம் கி.மீ.  OFC கண்ணாடி இழை கேபிள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதில் எவ்வளவு கேபிள், யார் யாருடைய உரிமையாக உள்ளது என்பது பகுத்துத் தெரிவிக்கப்படவில்லை. இந்த கேபிள் சொத்து எந்தத் திசைவழியில், ’முதலில் கண்ணாடி இழைமூலம் அனைவருக்கும் இணைய வசதி’ என்ற இலக்கை அடைய எப்படிப் பயன்படுத்தப்படும் என டிஜிடல் கொள்கையில் விளக்கப்படவில்லை. கட்டவிழ்த்தல் என்ற பெயரில் பொதுத்துறைகள் வசமுள்ள கேபிள்கள் மற்றவர்களுக்குத் திறந்துவிடப்படுமா என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அப்படிச் செய்யப்படுமானால் அது பொதுத்துறைகளின் உட்கட்டமைப்பு செல்வாதாரத்தைச் சீர்குலைப்பது மட்டுமல்ல, ’டிஜிடல் இறையாண்மையை’யும் பேரபாயத்திற்கு உள்ளாக்கும். அது மட்டுமா, ’தேசியக் கண்ணாடிஇழை அதிகார அமைப்பு’ (National Fibre Authority)’ ஒன்று உருவாக்கப்படும் என்று கூறும் வரைவுக்கொள்கை, அது வகிக்கப்போகும்  பங்கு குறித்து எந்த விவரமும் தரவில்லை.; அது BBNL போல இருக்குமா அல்லது இந்தியாவில் உள்ள அனைத்து கண்ணாடிஇழை கேபிள்களின் பொதுஅதிகார அமைப்பாக இருக்குமா என்பதும் தெரியாது. 
முன்பு கேட்டவுடன் அகல அலைக்கற்றை வசதி என்ற முந்தைய முழக்கம் தற்போது ’அனைவருக்கும் ப்ராட் பேண்ட்’  என்று உரத்துக் கூவுகிறது.  அதற்கென வரிச் சலுகைகள், நிதிச்சலுகைகள், தரைவழி நிரந்தர இணைப்பு மூலம் ப்ராட் பேண்ட்களுக்கான சலுகைகள் உண்டு என உறுதியளிக்கிறது.  ஆனால் பொதுமக்களுக்கு ப்ராட் பேண்ட் வசதி அளிப்பதில் BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கனவே முன்னணியில் செயல்பட்டன.  அந்த வகையில் 2011 புதியத் தொலைத்தொடர்புக் கொள்கையின் திட்ட இலக்கை அடைய விஸ்வாசமாகச் செயல்பட்டுச் சேவையாற்றிய அந்த நிறுவனங்களின் சாதனைப் பங்களிப்பிற்கு என்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது தெரியவில்லை. எனவேதான் நாம் வற்புறுத்துகிறோம், 2011 முதல் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய ப்ராட் பேண்ட் சாதனைகளுக்குத் தற்போது உறுதியளிக்கப்படும் நிதிச் சலுகைகள், வரிச்சலுகைகள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்கிறோம். அப்படி வழங்குவதன் மூலம் தற்போதைய கொள்கையான அனைவருக்கும் இணையதள வசதி  என்பதைச் சாதிக்கவும் பெரும் ஊக்கமாக அது அமையும்.   
தற்போதைய வரைவுக்கொள்கை, அலைக்கற்றை என்பதைச் சமூகப் பொருளாதார இலக்கை அடைய உதவுகின்ற மிகக் கேந்திரமான இயற்கைச் செல்வாதாரம் என அங்கீகரிக்கிறது.  அரசு அந்தக் கருத்தில் உறுதியாக இருக்குமென்றால், 4G/5G  அலைக்கற்றையைப் பொதுத் துறை நிறுவனங்கள் வசம் முதலீட்டு பங்களிப்பாக ஒப்படைக்க முன்வர வேண்டும்.  அதற்கு மாறாக, சமூகப் பொருளாதார நோக்கம் ஏதுமின்றி லாபம் ஒன்றையே இலக்காகச் செயல்படும் தனியார் நிறுவனங்களைப்போல பொதுத்துறை நிறுவனங்களையும் சந்தைவிலையில், அலைக்கற்றை பெற நிர்பந்திக்கக் கூடாது.  
விண்வெளித் துறையின் ’சாட்காம்’ (SATCOM விண்வெளிக் கலங்கங்கள் மூலம் தொலைத்தொடர்பு) கொள்கையைப் பரிசீலிக்கும்போது, பொதுத்துறை நிறுவனங்களையும் நம்பிக்கைக்கு உரியதாக ஏற்று விவாதிக்க வேண்டும்.  அப்போதுதான், தேசியப் பாதுகாப்பும், மக்களுக்கு வழங்க நினைக்கும் ’டிஜிடல் இறையாண்மை’யையும் முழுமையாகக் சாதிக்க உதவ முடியும்.  
வரைவுக்கொள்கையில்  பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்க ஒரு முன்முயற்சி காணப்படுகிறது.  அது அனைவரையும் இணைத்துக் கொண்டு முன்னேறுவது. இதுவரை தொலைத்தொடர்பு வசதி கிடைக்கப்பெறாத பகுதிகளையும், டிஜிடல் வசதி பெறாத பகுதிகளையும் வசதி பெறச் செய்வது, சமூகத்தில் விளிம்புநிலையில் ஒதுக்கப்பட்ட வகுப்பினர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நகரங்களில் சமூக- பொருளாதார நிலையில் நலிந்தவர்கள் என அனைவருக்கும் டிஜிடல் தகவல் தொடர்பால் அடையப்பெறும் பொருளாதார வளர்ச்சியின் பயன்களைப் பெறச்செய்தல்.  மேன்மையான இந்தச் சமூக உயர் நோக்கங்கள் அரசின் சிறப்புத் திட்டமாக, முழுமையாகப் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்படாவிட்டால், பயன்பெற வேண்டிய உரியவர்களைச் சென்றடையாது. 
2022-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டியவைகளாக பல பெரிய இலக்குகள் இந்தக் கொள்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றில் மிக முக்கியமானது, 100 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய்) முதலீட்டைக் கவர்ந்து ஈர்ப்பது.  அது ஒரு வருடத்தின்  மொத்த டெலிகாம் துறையின் GDPக்குச் சமமானது.  முதலீட்டை ஈர்ப்பதற்கு முன்பு வழங்கப்பட்ட ஊக்கச் சலுகைகளின் கடந்தகால அனுபவம் எதுவும் விவரமாகத் தரப்படவில்லை.  தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெற்ற 4. 5 லட்சம் கோடிக் கடனில் 80 சதவீதம் உள்நாட்டு வங்கிகளால் தரப்பட்டவை. தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு கடன் ஏதும் வழங்காதீர்கள் என்று அந்த வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு கதவை மூடிவிட்டன. காரணம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மீது அவநம்பிக்கை எற்பட்டுவிட்டதுதான்.  இந்த நிலையில் கொள்கைப் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வளவு பெரிய முதலீட்டை அவை எங்கிருந்து, எப்படிப் பெறும் என்பது நமக்கு விளங்கவில்லை; அப்படி அது சாத்தியமாகுமென்றால், எத்தகைய கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச்செய்து, எந்த அடிப்படையில், முதலீடுகள் வரும், யார் அறிவார் பராபரமே?
        ஆனால் நிறைவளிக்கக்கூடிய ஒன்று, டெலிகாமின் உட்கட்டமைப்பு மேம்பட சாலைப் போக்குவரத்து, இரயில்வே, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கு நிகராகக் கருதி முக்கியத்துவமளித்து, குறைந்த செலவில் நிதி திரட்ட வழிவகை செய்யப்பட்ருப்பதே. இந்தக் கிரியாஊக்கி எப்படி அவர்களுக்குச் சேவையாற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  புதியதாக நிர்மாணிக்கப்பட உள்ள நலந்திகழ் நகர்களில் (ஸ்மார்ட் சிட்டி) டிஜிடல் தகவல் தொடர்பு  ஆதார ஸ்ருதியாக விளங்கும் என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டிகளின் நிர்மாணம் தடங்கலின்றி முறையாகச் செயல்படுத்தும் நோக்கில் அனைத்துச் செயற்திட்டங்களும்  முழுமையாக BSNLக்கு வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை எழுப்பியிருக்கிறது.  இந்த வகையில் வரைவுக் கொள்கை நமக்கு உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். 
லைசென்ஸ் கட்டணம், நிதி உதவி, ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் முதலியவற்றை மறுஆய்வு செய்வதையும், வரிகள் மற்றும் மேற்கட்டணங்களைச் சீரமைப்பதையும் பரிந்துரைத்துள்ள கொள்கையைப் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. தங்களது 30 சதவீதமான வருமானம் அரசால் வரிகளாகவும் கட்டணங்களாகவும் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகின்றன என்று அவர்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.  அந்த வகையில் இந்தப் பரிந்துரை மூலம் அரசு கஜானாவிலிருந்து சலுகைகளாக எவ்வளவு கோடியை டெலிகாம் கார்பரேட்டுகள் குறி வைத்திருக்கிறார்களோ? 
முந்தைய 2011-ம் ஆண்டு புதிய தொலைத்தொடர்பு கொள்கை போல பொதுத்துறைகளை வலுப்படுத்துவது என்பதை தற்போதைய கொள்கை அவ்வளவு ஆர்வமாகக் குறிப்பிடவில்லை. அதே போல பொதுத் துறைகளைத் தொடர்வது, பொதுத்துறை கடந்த காலங்களில் ஆற்றிய சேவையைப் பாராட்டுவது என்ற அம்சமும் இடம் பெறவில்லை .  மாறாக, தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்நுட்ப உயர்திறன் நிர்வகித்தல் என்ற அம்சங்களின் மீது கவனம் குவிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டுள்ளது.  இது தற்போதைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் (பொதுத்துறை) அகம்சார் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் அறிவுசார் நிர்வாகிகள் மனதில் மிகப்பெரிய சந்தேகத்தையும், தங்களின் எதிர்கால பங்குபணி முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுமோ என்ற  அச்சஉணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.  பொதுத்துறைகள் வசம் தற்போதுள்ள பயிற்சி உட்கட்மைப்புகளைத் திறன் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை நாம் வரவேற்கலாம் – அதனால் பொதுத்துறைகளின் நிதி ஆதாரம் ஆரோக்கியமாக மேம்படும் என்றால்.  
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தக் கொள்கை பிரகடனம் நல்லவையும் அல்லவையும் கலந்த ஒரு கலவை.  கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகைகளைச் வழங்கும் ஊக்கியாகவும் அதன்மூலம் இந்தியத் தொலைத்தொடர்பு டிஜிடல் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்தோடு இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.  அதன் மின்னணுமயமாக்கல் தொடர்பால் அதிகாரம் பெறுவது என்பது துணை விளைவாகலாம்.  எல்லாம் சரி, இதன் பலன் என்னவாகப் போகிறது?  யாருக்கு, எவ்வளவு, எத்துணை விரைவாகப் பலன் பெறுவர் என்பது பலலட்சம் டாலர் பெறுமானமுள்ள கேள்வி.  ஆனால் விடை ஒன்றும் பரம ரகசியம் அல்ல, நிச்சயம் பலன் பெறப் போவது ஆகப்பெரிய டெலிகாம் அசுர பகாசுரக் கம்பெனிகளே.  

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR