தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, July 17, 2018

நவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த 

தீவிரவாத பாகிஸ்தான், 

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் 

ஜனநாயக இந்தியா!

=================================================================
              பனாமா நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் மொஸாக் பொன்செகா என்ற லெட்டர் பேட் நிறுவனம் 1977 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வழங்கி வந்த அனைத்து சேவைகள் பற்றிய தகவல்களும் திருடப்பட்டு உலகின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டன.    வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International consortium of investigative journalism) என்ற அமைப்பே இந்தத் தகவல்களை அம்பலப்படுத்தியது. இந்தியாவைச் சேர்ந்த ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடும் இதில் கலந்துகொண்டது.

உலக அளவில் 140 அரசியல் தலைவர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றிருந்தன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 500 திருடர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. அதில் சில முக்கியமான திருடர்கள் மற்றும் திருடிகளின் பெயர்கள் இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. அதில் ஒரு பிரபல திருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் ஆவார்கள். மேலும் டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலா டயர் புரோமோட்டர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா போன்ற பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்கள் தான் இன்று மோடியின் ஆட்சியில் இந்தியாவின் முகமாக உலக அரங்கில் அறியப்படுபவர்கள்.
பனாமா லீக்ஸில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முஸ்லீம் லீக் (நவாஷ்) கட்சியின் நிறுவனத் தலைவருமான நவாஷ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் லண்டனில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தினம்தோறும் விசாரிக்க உத்திரவிட்டது. விசாரணையில் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆடம்பர வீடுகள் சட்டவிரோதமாக வாங்கியது உறுதியானதை அடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று (06-ஜூலை-2018) தீர்ப்பு கொடுத்திருகின்றது. அதில் நவாஷ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ 73.05 கோடி அபராதமும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ18.27 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதே போல மரியம் நவாஷின் கணவர் கேப்டன் சஃப்தாருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் முறைகேடாக வாங்கப்பட்ட 4 வீடுகளையும் பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பனாமா லீக்ஸ் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பை பதவியில் இருந்து விலக உத்திரவிட்டதோடு, பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில்..? பனாமா பட்டியலில் உள்ள யாரும் தப்ப முடியாது என அருண்ஜெட்லி வீரவசனம் பேசினார். ஆட்சிக்கு வந்த புதிதில் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது என இதே போன்றுதான் வீரமாகச் சொன்னார். ஆனால் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியலைக்கூட வெளியிடத் துப்பில்லாத கோழைகள்தான் தாங்கள் என்பதை அவர்கள் இன்றுவரை நிரூபித்து வருகின்றார்கள். பனாமா லீக்ஸில் சிக்கிய அமிர்தாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலா டயர் புரோமோட்டர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா போன்றவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என யாருக்காவது தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது. ஏன் அருண்ஜெட்லிக்கே கூட தெரியாது.
எனவே இவர்களின் யோக்கியதை என்ன என்பதை நாட்டு மக்கள் இன்று பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை எல்லாம் மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று சொன்ன கும்பல், இப்போது சுவிஸ் வங்கியில் உள்ள பணமெல்லாம் கருப்புப் பணம் அல்ல, அது இந்தியர்கள் உழைத்துச் சேர்த்த வெள்ளைப்பணம் என்று நாக்கு கூசாமல் பேசுகின்றார்கள். ‘ஏண்டா கடன் வாங்குறது இந்திய வங்கிகளில், பணத்தை பதுக்குறது சுவிஸ் வங்கியிலேயா?’ என்று யாரும் கேட்டுவிடக்கூடாது, கேட்டால் தேசத் துரோகி பட்டம் கொடுத்து விடுவார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கருப்புப் பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அதாவது ரூ 7 ஆயிரம் கோடி.
மோடியின் கருப்புப் பண ஒழிப்பு என்பதே இந்திய மக்களை ஏமாற்றும் மிகப் பெரிய மோசடித் திட்டமாகும். கருப்புப் பணத்தை ஒழிக்கின்றேன் என்று டிமானிடைசேசன் கொண்டு வந்தார். ஆனால் எந்தப் பணக்காரனும் ஏடிஎம் வாசலில் காத்துக் கிடந்ததை ஒரு இந்தியன் கூட பார்க்கவில்லை. மாறாக அமித்ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட உடன், 755 கோடி ரூபாய் பணம் மர்மமான முறையில் மாற்றப்பட்டது. அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவிற்கு சொந்தமான ‘டெம்பிள் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு அதிகரித்தது. மோடியின் கருப்பு பண ஒழிப்பைப் பார்த்து இன்று நாடே வாய் பிளந்து நிற்கின்றது.
இந்திய வங்கிகளில் 8.5 லட்சம் கோடி வாராக் கடன் உள்ளது. ஆனால் இதை வசூலிக்க எந்த உருப்படியான திட்டமும் பிஜேபியிடம் இல்லை. பெருமுதலாளிகள் கொடுக்கும் எச்சில் காசில் கட்சி நடத்தும் கும்பல் நிச்சயம் ஒருநாளும் இதை வசூலிக்கப் போவதும் இல்லை. அவர்களால் அதிகபட்சமாக முடிந்தது இந்திய வங்கிகளை ஏமாற்றிவிட்டு சுவிஸ்வங்கியில் பதுக்கிய பணத்திற்கு ‘உழைத்துச் சேர்த்த வெள்ளைப்பணம்’ என்று சான்றிதழ் கொடுக்க முடிந்ததுதான். அதனால் பனாமா லீக்ஸில் வெளியான எந்த மோசடி பேர்வழியும் நிச்சயம் தண்டிக்கப்பட போவதில்லை. அமித்ஷாவிற்கும் அவரது மகனுக்கு மட்டும் சலுகை கொடுக்கும் அளவிற்கு மோடி கள்நெஞ்சக்காரர் கிடையாது. அவரது நட்பு வட்டத்தில் சாமியார்களும், சினிமா நடிகைகளும், கூலிப்படை கொலைகாரர்களும், காசுக்கு குலைக்கும் அதிகார வர்க்க நாய்களும் உள்ளார்கள். ஒரு நாட்டின் பிரதமராக அவர் அனைவரையும் அரவணைத்துப் போவதுதான் நேர்மையான செயல். அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கின்றார்.
அதனால் நாம் பாகிஸ்தான் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தீவிரவாதிகளின் சதி என சொல்லிப் பழகுவோம். இந்திய அரசு இன்னும் பனாமா லீக்ஸில் மாட்டியவர்களைத் தண்டிக்காமல் இருப்பதற்கு தேசபக்தியே காரணம் என்று சொல்லுவோம். மோடிக்கு ஜே! பாரத் மாதா ஹி ஜே! அமித் ஷாவுக்கு ஜே! அவன் மகனுக்கும் ஜே!

- செ.கார்கி

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR