தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, October 9, 2018

சேகுவேரா நினைவு தினம்: (14-06-1928   --   09-10-1967 )

சே குவேரா எனும் சாகசக்காரன்!

கியூபாவின் புரட்சியை தவிர்த்துவிட்டு, சேகுவேராவை எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மீதான நட்பிலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும். சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தலைநகர் ஹவானா உற்சாகக் கோலம் பூண்டது. ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரன்சியில் 'சே' எனக் கையெழுத்திடும் கவுரவுமும் வழங்கப்பட்டது. 
ஆடம்பரங்களை உதறித் தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்று கொண்டார் ‘சே’. உடனே, “ 'சே’வை காணவில்லை; அவரை ஃபிடல் கொன்றுவிட்டார்” என பேசப்பட்ட போதிலும், “ 'சே’ எங்கு இருக்கிறார்” என்று காஸ்ட்ரோ சொல்லவில்லை. காரணம், 'அமெரிக்க உளவுதுறையிடம் அவர் சிக்கிக் கொள்ளக் கூடாது' என்பதற்காகத்தான். இப்படியான ஒரு தோழனை விட்டுச்  செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.che guevara
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்தியாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை. பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவரிடம், 'இது என்ன இடம்?' என்று கேட்டார் ‘சே’. 'இது ஒரு பள்ளிக்கூடம்' என்றார் பணிப்பெண்.  'இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா... எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்' என்று கூறினார் ‘சே’. அந்த பணிப்பெண் வெடித்து அழுது அங்கிருந்து கிளம்பினார். தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.
1967, அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 51 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR