தோழர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வந்துள்ள சிறந்த படம். தலித் சமுதாயத்தில் பிறந்த ஒருவர், தனது இழிவுகளில் இருந்து விடுபடக் கல்வியைக் கருவியாக்கிப் போராட முயற்சி எடுக்கிறார். அவர் சந்திக்கும் சமுதாயத் தடைகளுக்குக் கலை வடிவம் கொடுத்துள்ள தோழர் மாரிசெல்வராஜ் அவர்கள், சரியான ஒரு விவாதத்தைத் தொடங்க விரும்புகிறார். உரையாட வேண்டியவர்கள் உரையாட வேண்டியதன் அவசியத்தை இதைவிடச் சிறப்பாகக் கூறமுடியாது.
தலித் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை வாழ்ந்து பார்க்காதவர்களுக்கும், தலித் வாழ்வியலை, தலித் உணர்வுகளை இதுவரை உணரமுடியாதவர் களுக்கும் இந்தப்படம் நிச்சயமாகப் புரியாது. பிடிக்காது. மேற்குத்தொடர்ச்சி மலை படத்துக்குத் தோழர் பா.இரஞ்சித் பாராட்டுத் தெரிவிக்கும் போது, “எளிமையைப் படமாக்குவது மிகப்பெரும் சவாலான வேலை” என்றார். அந்தச் சாதனையை மாரி செல்வராஜூம் எட்டியுள்ளார்.
“என்னை நாயாக மதிக்கிற உங்களோட நினைப்பு மாறாதவரை இங்கு எதுவுமே மாறப் போவதில்லை” என்று இறுதிக் காட்சியில் பரியன் பேசும் ஒற்றை வாக்கியம், பல நூறு பக்கங்களில் பேச வேண்டியவற்றை அடக்கியுள்ளது. மிகமிகத் திறமையான வசனம் அது. அதைவிட அந்த இறுதி ஷாட்.....திட்டிக்கொண்டே படம் பார்த்துக் கொண்டிருந்த சிலரையும் கைதட்ட வைத்தது. பல நூற்றாண்டுக் கொடுமைகளை ‘ஒரே ஒரு ஃபோட்டோ’ என்ற அளவில் உள்ள அந்த ஷாட் டில் விளக்கியுள்ள ஆற்றலுக்கு வாழ்த்துக்கள்.
தீண்டாமை ஒழிப்பு என்ற அளவில் ‘பரியன்’ பாராட்டுக்குரியவர்.
No comments:
Post a Comment