அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்-15
நான்கடி இமயத்தின் நாவாற்றல்
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது.
அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை (கரகோஷம்)
ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல.
இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுபுறத்தான் ஒருவனை கூப்பிட்டு கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று?…. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? …. தெரியாது.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? …. தெரியாது.
நமது பிரதம மந்திரி யார்? … தெரியாது.
இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது?… தெரியாது.
முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்?… தெரியாது.
எமனுக்கு வாகனம் என்ன?…. எருமைக்கடா! (பலத்த கரகோஷம்)
இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம் கர்னாடி மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள்.
அயோத்தியில் தசரதன், மாளிகையைப் பற்றி அல்ல. ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள்.
அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள். (கரகோஷம்)
நான் எத்தனையோ கதையைப் படித்திருக்கிறேன். அவற்றிலே எழுத்துக்கெழுத்து சீர்திருத்தத்தைப் புகுத்தியது வ.ரா.வின் நூல்கள்தான். வ.ரா.வைப்பற்றி எழுதப் பலர் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவரும் என்னைப் போல் சந்தேகிக்கப்பட்டவர். (கரகோஷம்)
இதில் ஒரு விஷயம் தாங்கள் ஒரு சாராரால் சந்தேகிக்கப்படுகிறோம். வ.ரா.இரு சாராராலும் சந்தேகிக்கப்படுகிறார். (கரகோஷம்)
எழுத்தாளத் தோழர்கள் ஒவ்வொருவரும் காண்டேகராகவும், வால்ட்டேராகவும், வால்ட்விட்கனாகவும் மாற வேண்டும் ஏன்? வ.ரா.வாக மாறவேண்டும்.
உவமை கொடுக்கும்பொழுதும் கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் சந்திக்கிழுக்கக் கூடாது. காளமேகத்தைப் போலக் கவி பாடினான் என்ற எழுதாதீர்கள். காளமேகத்தைப் போல ஆகவேண்டுமானால் ஒரு காளி வேண்டும். அந்த கோவிலுக்கு அவன் போகவேண்டும். பிரசன்னமானதும் வாயைத் திறக்கச் சொல்லவேண்டும். திறந்த வாயிலே ஈட்டியால் எழுதவேண்டும் இவ்வளவு சிரமத்தை. அவனுக்குக் கொடுக்காதீர்கள். ஏன் நாமக்கல் கவிஞரைப்போல அற்புதமாகப் பாடினான் என்ற எழுதுங்கள்.
ஆண்மையிலே பீமனைப் போல் எழுதவேண்டாம். அவினாசிலிங்கத்தைப்போல் ஆண்மை வேண்டும் என்று எழுதுங்கள். வியாசரைப் போல் எழுதினான் என்று எழுதாதீர்கள் – தோழர் டி.எஸ்.சொக்கலிங்கத்தைப்போல் எழுதினான் என்று எழுதுங்கள். சம்பந்தப்பட்டவன் உடனே புரிந்து கொள்ள இதுதான் சரியானவழி. (கரகோஷம்)
உங்கள் ஏட்டை அழுக்குத் துடைக்கும் துடைப்பம் ஆக்குங்கள் நாற்றம் எடுக்கும் குப்பைத் தொட்டியாக்கிவிடாதீர்கள்.
நான் சில பத்திரிக்கைகளைப் பார்க்கிறேன். பத்துப் பக்கம் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சோதிடத்தை நம்பாதீர்கள். அது சுத்தப்புரட்டு. மக்களை அஞ்ஞானக் காரிருளில் ஆழ்த்தி வைக்கும் அறியாமை. அதில் ஆழ்ந்து விடாதீர்கள் என்று வாசார கோசரமாய் எழுதிவிட்டு பதினோராவது பக்கத்திலே, திருத்தணி ஜோசியர் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள். அற்புதமாகக் கணித்து அனுப்புவார் என்றிருக்கும். இது வயிற்றுப் பிழைப்புக்காக என்றால், அவர்கள் வாழ்வதிலும் சாவதுமேல்.
வ.ரா.சொன்னார். காதல் இல்லாவிட்டால் கதையே இல்லை என்று. அவரது கருத்து காதல் அதிகம் வரக் கூடாது என்பது. அதுவல்ல உண்மை; பழைய புராணிகர்களிலிருந்து இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் வரை காதலைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம்.
அன்றிருந்தவர் ஆரத்தழுவாயோ என்று ஆரம்பித்தார். தழுவல் காதலிலே பிறக்கிறது. ஆரத் தழுவாயோ என்று ஆரம்பித்தால் உலகை மாயையாக்கும் வைதீகக் கூட்டங்கள் அடிக்க வந்துவிடுமே என்ற பயந்தார். அரங்கனே என்று முடித்தார். (கரகோஷம்)
இன்று பகுத்தறிவு ஆக்கம் பெற்றுவிட்டது. எழுத்தாளர்கள் பகிரங்கமாகக் காதலைப்பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அதில் பழமை வாடை வீசுகிறது.
கமலா விதவை; பிராமணப் பெண். நாராயணன் அழகன்; முதலியார் பையன் – இருவரும் காதலித்தார்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். சாதிக் கட்டுப்பாடுகள் உறுமின; தகர்த்தெறிந்தார்கள், என்று முடியுங்கள் கதையை(கரகோஷம்) பெயருக்குப் பின்னால் வரும் சாதி வால்களை அறுத்தெரியுங்கள்.
கமலா விதவை; பிராமணப் பெண். நாராயணன் அழகன்; முதலியார் பையன் – இருவரும் காதலித்தார்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். சாதிக் கட்டுப்பாடுகள் உறுமின; தகர்த்தெறிந்தார்கள், என்று முடியுங்கள் கதையை(கரகோஷம்) பெயருக்குப் பின்னால் வரும் சாதி வால்களை அறுத்தெரியுங்கள்.
உலகம் மாயை என்பவர்கள் உங்கள் பார்வையிலே விழட்டும். உலகம் மாயையல்ல. மாய உலகத்தில் மந்திரிகள் இருக்கமாட்டார்கள். (கரகோஷம்) மாய உலத்திலே நாமக்கல் கவிழர்கள் இருக்கமாட்டார்கள். மாய உலகத்திலே காதல் இருக்காது. மாய உலகத்திலே நீங்களும் நானும் இருக்கமாட்டோம்!
இறுதியாக ஒன்று கூறுகின்றேன் வீழ்ந்திருக்கும் சமுதாயம் வீறு கொண்டெழ, சுரண்டுவோர் ஒழி சமத்துவம் நிலவ, உங்கள் பேனாமுனை, வாள் முனையாகட்டும். (கரகோஷம்)
No comments:
Post a Comment