நர்மதை அணைத் திட்டம்: அர்ப்பணிப்பா, அபகரிப்பா?
வரலாறு என்பது நிகழ்ந்து முடிந்த ஒன்று அல்ல. மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டிருப்பது. ஒரு முறை தவறு செய்துவிட்டால், கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அறிவு. ஆனால், செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வது அழிவுக்கு இட்டுச் செல்லும் வழி. நர்மதை நதி, இப்போது அழிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறது. அது நம்மையும் அழைத்துக்கொண்டு செல்கிறது என்பதுதான், நாம் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள விரும்பாத உண்மை.
நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சர்தார் சரோவர் அணையை, கடந்த 17-ம் தேதி, தனது பிறந்த நாள் பரிசாகப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித் திருக்கிறார். சர்தார் சரோவர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியின் நீளத்தைவிட (214 கி.மீ), அது ஜலசமாதி ஆக்கப்போகும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகம் என்ற உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சுமார் 244 கிராமங்கள். குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் என மூன்று மாநிலங்களையும் சேர்த்து!
கற்றுக்கொள்ளாத குஜராத்
இந்திய அணைகள் வரலாற்றில், 1979-ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. அதுவும் குஜராத்துக்குப் பாடம் கற்பிக்கப்பட்ட ஆண்டு. அந்த ஆண்டில்தான் குஜராத்தில் உள்ள மச்சு நதியில் கட்டப்பட்ட மச்சு அணை, கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,800 முதல் 25 ஆயிரம் வரை எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அழிவுக்கு, அன்றிருந்த அமைச்சர்கள், கடவுளைக் கைகாட்டியதாக, ‘நோ ஒன் ஹேட் எ டங் டு ஸ்பீக்’ எனும் நூலின் ஆசிரியர்கள் டாம் வூட்டென் மற்றும் உத்பால் சந்தேசரா ஆகியோர் கூறுகின்றனர். தொடர்ந்து, அதே ஆண்டில்தான், மத்திய நீர் ஆணையத்தின் சார்பாக ‘அணைப் பாதுகாப்பு அமைப்பு’ ஒன்றும் உருவாக்கப்பட்டது.
மேலும், நர்மதையில் அணை கட்டி நீர் பங்கிடுவது தொடர்பாக குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் எழுந்தன. இதற்குத் தீர்வுகாண அமைக்கப்பட்ட ‘நர்மதை நீர் சச்சரவுத் தீர்ப்பாயம்’ அதே ஆண்டில்தான், நர்மதையில் அணைகள் கட்ட ஒப்புதல் அளித்தது. குடிநீர், விவசாயம், மின்சாரம் எனப் பல தேவைகளைச் சொல்லி சர்தார் சரோவர் அணையை குஜராத் கட்டத் தொடங்கியது. இன்று, அது ஒரு பேரழிவுக்கான ஆயுதமாக நம் முன் நிற்கிறது.
ராட்சதத்தன்மை எனும் நோய்
‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்று 1955-ல் அணைகளைக் குறிப்பிட்டார் அந்நாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அவரேதான் 1958-ல் அணைகளை ‘ராட்சதத்தன்மை நோய்’ என்று அழைத்தார். அவர் மேலும் இப்படிச் சொன்னார்: ‘‘நம்மால் பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்று காட்டுவதற்காகவே இப்படிச் செய்வது ஒருபோதும் நல்லதல்ல”.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, 1948-ல் நாட்டின் முதல் அணையான ஹிராகுட் அணை கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வந்த பத்தாண்டுகளில் பல பெரிய அணைகள் கட்டப்பட்டன. அந்தப் பணிகளின்போது, ஏராளமான மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானார்கள். அந்தத் துயரத் தைப் பார்த்த பிறகுதான், நேருவுக்கு, பிரம்மாண்டமான திட்டங்கள்மீது ஒரு திகைப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் சுதாரித்துக்கொள்வதற்குள் காலம் நகர்ந்துவிட்டது.
அவருக்குப் பிறகு வந்த பிரதமர்கள் அனைவருக்கும் இந்த பிரம்மாண்டங்களின் மீது பேருவகை இருந்தது. இந்த ஒப்பீட்டைப் பார்த்தால் நமக்குப் புரியும். 1947-ல் இந்தியாவில் சுமார் 300 அணைகள் இருந்தன. இதில் பெரும்பாலானவை நமது மன்னர்களும் ஆங்கிலேயர்களும் கட்டியவை. 2009-ல் அணைகளின் எண்ணிக்கை 4,291. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து, உலகிலேயே அதிக அணைகளைக் கொண்டிருப்பது இந்தியாதான். அத்தனையும் பெரிய அணைகள். இது நிச்சயமாகப் பெருமை அல்ல!
நர்மதையில் அணை கட்டத் தொடங்கியபோது, குறைந்தபட்ச சூழலியல் நடவடிக்கைகளைக்கூடப் பின்பற்றாத காரணத்தால், அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே, கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தியது. அப்போது, குஜராத் அரசுக்கு உலக வங்கி கைகொடுக்க வந்தது. தொடர்ந்து வந்த மேதா பட்கரின் போராட்டத்தால், அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பதிலிருந்து அந்த வங்கி பின்வாங்கியது.
ஆனால், இதே உலக வங்கிதான், 1998-ம் ஆண்டு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ‘அணைகள் தொடர்பான உலக ஆணையம்’ ஒன்றை ஏற்படுத்தி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு உலகிலுள்ள 79 நாடுகளின், ஆயிரம் அணைகளை ஆய்வுசெய்தது. அந்த ஆய்வின் முடிவில், ‘பெரிய அணைகளின் பயன்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கொள்ள விரும்பாத பிரச்சினை
சரி, இப்படியான பெரிய அணைகளால் என்ன பிரச்சினை? அணைகளால் ஏற்படும் மக்கள் இடப்பெயர்வு, காடு, காட்டுயிர்களின் அழிவு, அரசுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை… இவை எல்லாவற்றையும் விடுங்கள். இவற்றைக்கூட, எந்தக் காரணத்தைச் சொல்லியாவது மக்களைத் திசைமாற்றிவிடும் அரசு.
ஆனால், அரசே எதிர்கொள்ள விரும்பாத ஒரு பிரச்சினை உண்டு. அது… வண்டல்! உலகிலுள்ள மிகப் பெரிய அணைகள் பலவும் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டு இருக்கின்றன. ஆழமான சரிவுகளைக் கொண்ட நர்மதைப் பள்ளத்தாக்குப் பகுதி, மண் அரிப்புக்குப் பலியாகக் கூடிய ஒன்று. இதுநாள் வரை, பெருமளவுக்கு மண் அரிப்பு ஏற்படாமல், அந்தப் பகுதியிலிருந்த மரங்களும் காடுகளும் காத்துவந்தன.
அணை கட்டுவதற்காக, இந்த மரங்கள் பலவும் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் மண் சரிந்து, நதியில் கலந்து, சேறாக ஓடும். அது அணைகளுக்கு வந்து சேரும்போது, வண்டலையும் கொண்டுவந்து சேர்த்திருக்கும். இப்படியான வண்டல் மண், அணையைத் திட்டமிடும்போது கணக்கிடப்பட்ட அளவைக் காட்டிலும் நிஜத்தில் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். இன்று இந்தியாவில் இருக்கும் சுமார் 85% அணைகளின் நிலை இதுதான்.
சிறிய அணைகளில் இப்படியான வண்டல் படிந்தால், அணையின் மதகுகளை மூடிவிட்டு, ஓரளவு தூர்வாரிவிட முடியும். ஆனால், சர்தார் சரோவர் போன்ற பெரிய அணைகளில் இப்படித் தூர்வாருவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்போது, வண்டல் படியப் படிய அணையில் நிரம்பும் நீரின் கொள்ளளவு குறைந்துகொண்டே வரும். நீராவியாதல் இழப்பு அதிகரிக்கும். இதனால், இங்கு மின்சாரம் எடுக்கும் அளவும் குறையும். நாள் ஆகஆக, அணைக்குள்ளே நீர் வர முடியாமல், மீண்டும் பின்வாங்கி உப்பங்கழியில் வெள்ளம் ஏற்பட வழிவகுக்கும்.
இந்த வண்டலைச் சுத்தப்படுத்த ஆகும் செலவு என்பது, சமயங்களில் அணையைக் கட்டுவதற்கான செலவைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்கிறார் ‘ரிஸர்வாயர் செடிமெண்டேஷன் ஹேண்ட்புக்’ எனும் நூலை எழுதிய க்ரிகோரி மோரிஸ் எனும் பொறியாளர்.
வீணாகப் பாய்கிறதா நதி?
‘அப்படியென்றால், இந்தப் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு... அணைகளே வேண்டாமா?’ என்று பலர் கேட்கலாம். அணையோ, அணுமின் நிலையமோ ஒரு தொழில்நுட்பம் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை வைத்தே, அது மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்கிறார், காலம்சென்ற சூழலியலாளர் அனில் அகர்வால்.
நதிநீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது என்ற தவறான புரிதல்தான் நீர் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை. நதியைக் கையாள முற்படுவது தவறல்ல. ஆனால், இயற்கைக்கு எதிராக நம்முடைய முயற்சி திரும்புமானால், அதன் பின்விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும்!
- ந.வினோத்குமார்,
நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்
No comments:
Post a Comment