தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, December 25, 2017

44 மனிதர்கள்  எரிக்கப்பட்ட நாள்.
25-12-1968
கீழவெண்மணித் தீ !
சாதித் தளையறுத்து 
தமிழர் இணையும் காலத்தில் 
அணையும் ஊழித்தீ!

🔥
வெண்மணி வெப்பம்!
செருப்பணியவும், தோளில் துண்டுபோடவும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது இந்தியாவில்/தமிழகத்தில்!

வெள்ளையனிடம் சுதந்திரம் பெற காந்தியால் கத்தியின்றி ரத்தமின்றி போராட முடிந்தது.

ஆனால் சுயமரியாதைக்காக, கூலி உயர்வுக்காக ஏழைகள் எரிந்த கதை உலகசரித்திரத்தில் உண்டா! தெரியவில்லை.

அண்டை நாட்டுக்காரரிடம் எல்லைக்காகவோ, தண்ணீருக்காகவோ ஒப்பந்தம் போடுவதைக் கேள்விப்பட்டிருப்போம். சொந்த ஊர் ஆண்டைகளிடம் அடிமைகளாக்கப்பட்ட கூலிகள் போட்டுக்கொண்ட 'மன்னார்குடி ஒப்பந்ததத்தை' நம் வரலாற்றுப் புத்தகங்க
ளெதிலும் பாடமாகப் படித்ததில்லை.
பகத்சிங், சே தெரிந்த அளவு நம்மில் எத்தனை பேருக்கு களப்பால் குப்பு, சிக்கல் பக்கிரிசாமிகளைத் தெரியும். 

வறுமை போக்கவும், இழிவு நீக்கவும் செங்கொடி தூக்கி போராடிய நிகழ்வுகள் சுதந்திர போராட்டத்தை விடவும் வீரம் செறிந்தவை.அதன் இழப்புகளோ காலத்தால் துடைக்க முடியா கறைகளைக் கொண்டவை.


ஆம்..தோழர்களே வெண்மணியில் 
நிகழ்ந்தது உள்ளங்கையளவு நெல்மணிகளை உயர்த்திக் கேட்ட கூலிப்போராட்டம் மட்டுமன்று.  அப்படியிருந்தால் ஆண்டைகள் படியளந்திருப்பார்கள்.   
அவர்கள் கேட்டது சுயமரியாதை உணர்விலெழுந்த விடுதலை. 

எங்கள் தேசம் விடுதலை அடைந்த பின்னும் நாங்கள் மட்டும் அடிமைகளாக இருக்கவேண்டுமா? என்கிற கேள்வியிலிருந்த நியாயத்துக்கு பதிலளிக்க  விரும்பாது குடிசைகளை எரித்தார்கள், சாதி காப்பாற்றும் ஆண்டைகள்!


சாணிப்பால் சவுக்கடி என எத்தனையோ துயரடைந்த எம் தமிழர்கள்  துடிதுடித்துச்  செத்தார்கள்! 


20 பெண்கள்
19 சிறுவர்கள்
 2 நிறைமாத கர்ப்பிணிகள்
 5ஆண்கள்
முதியவர் ஒருவர் 

என 44 உயிர்களை வெண்மணியில்
சாதியின் தீ நாக்கு தின்று செரித்தது! 

கீழவெண்மணித் தீ தமிழர்களின் சாபம். 

அது ஒவ்வோரு தமிழனின் மனசாட்சியையும் சுட்டுக்கொண்டே இருக்கும். சாதித் தளையறுத்து தமிழர் இணையும் காலத்தில் அணையும் ஊழித்தீ அது! சக மனிதனை, நேயத்தால்  அணைத்துக் கொள்ள,
தமிழரெலாம் பழகும்போதே அணையும்,
கனன்று கொண்டிருக்கிற வெண்மணித்  தீ!
பழகுவாரா எம் தமிழர்?

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR