தனக்கு ஒரு கஷ்டம் என்றால் தன் கடவுள் வருவாரோ மாட்டாரோ, ஆனால் பக்கத்து வீட்டு பாய் வருவார் என நம்பும் இந்துவும், எதிர்த்த வீட்டு சுப்ரமணி வருவான் என நம்பும் இஸ்லாமியரும் தான் இங்கு அதிகம்.
அதனால் தான் கடவுளின் பெயரை வைத்து அழைத்தாலுமே இருவரும் தீவிரவாதம் பக்கமும் சரி, சகிப்பின்மை பக்கமும் சரி போவதேயில்லை.
இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதிகள் செய்யும் செயல்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் அனைவரும் ஆதரவு கொடுத்திருந்தால் இந்நேரம் உலகமே அழிந்து போயிருக்கும்.
இந்துத்துவம் என்னும் பெயரால் இங்கு சிலர் போடும் ஆட்டங்களுக்கெல்லாம் இந்துக்கள் அனைவரும் ஆதரவு கொடுத்திருந்தால் இந்தியாவே பீஸ் பீஸ் ஆகியிருக்கும்.
ஆனால் கடவுளை விட, என் கண் முன் இருக்கும் சக மனிதன் தான் முக்கியம் என இருவரும் இன்று வரை அன்பு பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நடுவில் இந்த மீடியாக்காரனும், கட்சிக்காரனும், கைக்கூலிகளும் தான் விதவிதமாக சர்க்கஸ் வித்தைகள் காட்டி கடுப்பேற்றுகிறார்கள்.
இவர்களது பாலிடிக்ஸ் எப்படி என்றால், பக்கத்து வீட்டு பாயை நட்பாகப் பார்க்கும் நம்மை எங்கோ வடநாட்டில் இருக்கும் முஸ்லிமை வெறுப்பாகப் பார்க்க வைப்பார்கள்.
பின் அதே வெறுப்பை நம் முஸ்லிம் நண்பர்கள் மீது காட்ட வைப்பார்கள். இதே கதை தான் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் காட்டும் வெறுப்பும். எங்கோ இருப்பவனை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு நம் அருகில் இருப்பவரோடு துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருப்போம்,/கொண்டிருக்கிறோம். இது தான் சமீபகாலமாக நடந்து வருகிறது.
இது வேண்டாம். கட்சி, மதம் சார்ந்த அரசியல்வாதிகள், மேதாவிகள் பேசும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். மீடியாக்கள் கூப்பாடு போடும் செய்திகளை அறவே கண்டு கொள்ளாதீர்கள். சக மனிதர்கள் நமக்கு முக்கியம்.
தீபாவளியன்று நம் வீட்டுப்பலகாரம் அவர்கள் வீடுகளிலும், கிறிஸ்துமஸ் அன்று ஜோசப் வீட்டு கேக்கும், ரம்ஜான் அன்று அவர்கள் வீட்டு பிரியாணி நம் வீட்டிலும் மணக்கட்டும்.
No comments:
Post a Comment