தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, December 22, 2017

பட்டுக்கோட்டை தோழர். கவிஞர். 
யூமா வாசுகி 
( மாரிமுத்து ) அவர்களுக்கு 
சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.


அவரை வாழ்த்திப் பாராட்டுகிறோம்!
=====================================

பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது ஓ.வி.விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம்’ நாவலைத் தமிழாக்கம் செய்த யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் யூமா வாசுகி, பிரதானமாக ஒரு கவிஞர். ‘எங்கே யாருக்கு அவர்கள் கையசைத்தாலும்/ அங்கே நானும் நின்று ஏற்றுக்கொள்வதெப்படி’ என்று கையசைக்கும் குழந்தைகளின் உலகில், குழந்தைகளின் கையசைப்பை விரும்பி யாசிக்கும் எளிய மனிதராகத் தன்னை இருத்திக்கொள்ள விரும்புவர் யூமா வாசுகி.
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும், அவருக்குள் நிரம்பியிருப்பது குழந்தைகளின் மனவுலகில் குழந்தையாகச் சஞ்சரிக்க விரும்பும் குழந்தை மனம் மட்டுமே. கவிதைகளில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த அவர், குழந்தைகளுக்காகக் கதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியதைக் கூட இந்தக் குழந்தை மனநிலையின் தொடர்ச்சியாகவே பார்க்க முடிகிறது. குழந்தையாக இருந்துகொண்டே தனக்குள் இருக்கும் படைப்பாளியையும் விழிக்கச் செய்துவிடுகிறார் யூமா. சட்டைப் பையில் கோலியுடன் ‘பாரில்’ வேலை பார்க்கும் சிறுவன், முதலாளியின் ஏவலுக்குப் பயந்தபடி தன் சக்தியைவிட அதிகமாக வேலை செய்யும் சிறுமி என்று நிராதரவான குழந்தைகளைப் பற்றி அவர் எழுதியுள்ள கவிதைகள் நம்மைத் தூங்க விடாமல் துரத்தியபடியே இருப்பவை.
யூமா வாசுகியின் ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ கவிதைத் தொகுப்பு, தமிழின் மிகச் சிறந்த காதல் கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. காதலின் தெய்வீகமா, காமத்தின் உன்மத்தமா, பெண்ணை இறைநிலையில் வைத்துக் கொண்டாடும் பக்தியின் வெளிப்பாடா என்று பிரித்தறிய முடியாத கவிதைகளின் தொகுப்பு அது. தனது சிறுவயது வாழ்வின் துயரங்களையே அவர் ‘ரத்த உறவு’ நாவலாக எழுதியுள்ளார். திருக்கை மீனின் முள் எப்பொழுது முதுகில் பதம்பார்க்குமோ என்ற பயமும் பதற்றமும் நிரம்பிய சிறுவன் நம் கண்ணிமையில் நின்றுகொள்கிறான். இப்படியே, யூமாவின் பல்வேறு படைப்புகள் துயரம் தோய்ந்த குழந்தைகளை நம்முன் நிறுத்துகின்றன.
யூமா என்ற கவிஞரை, ஓவியரை நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும், பல நேரம் துன்பப்படும் குழந்தையின் தோற்றத்துடனேயே அவர் நம்கண் முன் இருப்பார். யூமா வாசுகி பேசுவதைப் பார்ப்பதே அபூர்வம். ‘கலைஞன் தன் படைப்புகளின் வழியாகப் பேசுவதே சிறந்தது’ என்பதை யூமா வாசுகி பிரதிபலித்துக்கொண்டிருப்பார். தன்னுடைய அக எழுச்சியை வெளிப்படுத்த படைப்பாளிக்குச் சாதகமான புறச்சூழலும் முக்கியம். தீவிரமான தன் படைப்பு மனநிலையைத் தக்க வைக்கவே ஒவ்வொரு படைப்பாளியும் போராட வேண்டியிருக்கிறது. சாதகமான புறச்சூழல் என்பது, படைப்பாளியின் எழுத்துகள் வாசிக்கப்படுதல், அதைப் பற்றிய விவாதங்கள், அங்கீகாரம் ஆகியவையே. “ஒரு மட்டரகமான சினிமா கலைஞனுக்கு இருக்கும் அங்கீகாரம்கூட தீவிர எழுத்தாளனுக்கு இல்லை” என்று கோபப்படும் யூமா வாசுகியின் வார்த்தைகள் இந்த வேதனையின் வெளிப்பாடே.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் 1966 ஜூன் – 23-ம் தேதி பிறந்த யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்று, தமிழின் நவீன ஓவியராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். அந்த வகையில் ‘மோர்னிங் திக்கெட்ஸ்’ எனும் யூமாவின் ஓவிய நூல் குறிப்பிடத்தக்கது. பொருளாதார நெருக்கடியான சூழலிலும் ‘குதிரைவீரன் பயணம்’ எனும் சிற்றிதழை தீவிரத்தன்மையோடு வெளிக்கொண்டுவந்தவர். ‘தோழமை இருள்’, ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ உள்ளிட்ட கவிதை நூல்கள், ‘உயிர்த்திருத்தல்’ எனும் சிறுகதைத் தொகுப்பு, ‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’ என 2 நாவல்கள் ஆகியவை படைப்புரீதியில் இவரது முக்கியமான பங்களிப்புகள். சிங்கிஸ் ஐத்மாத்தவின் ‘சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று’, ‘ஆண்டர்சன் கதைகள்’, ஜோனதன் ஸ்விஃப்ட்டின் ‘கலிவரின் பயணங்கள்’, எஸ்.சிவதாஸின் ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என்று ஆங்கிலத்திலிருந்தும் மலையாளத்திலிருந்தும் ஏராளமான இலக்கிய நூல்களையும் சிறார் இலக்கிய நூல்களையும் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார்.
‘ரத்த உறவு’ நாவலுக்காக 2000-ல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றுள்ளார். தற்போது சாகித்ய அகாடமி விருதும் சேர்ந்துகொள்கிறது. யூமா வாசுகியின் தொடர்ச்சியான மொழிபெயர்ப்புச் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் சாகித்ய அகாடமி, அவரது படைப்பு முகத்துக்கும் ஒரு அங்கீகாரம் விரைவில் கொடுக்க வேண்டும். வாழ்த்துகள் யூமா வாசுகி!
-மு.முருகேஷ்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR