மாவட்டச் செயலர் மடல். 11-12-2017
அன்புத் தோழர்களே!
அனைவருக்கும் வணக்கம். நமது ஊதிய மாற்றம், டவர் நிறுவனம் என்ற பெயரில் BSNL நிறுவனத்தை துண்டாக்கும் முயற்சி ஆகியவற்றை எதிர்த்து, துண்டான நாமெல்லாம் ஒன்று சேர்ந்து அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். வருகின்ற 12, 13 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்தத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த போராட்டம் மத்திய அரசாங்கத்திற்கு மிகப் பெரிய அதிர்வை, எச்சரிக்கையை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக ஒரு சில செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்.
நடத்திய போராட்டங்கள்:
* கடந்த நவம்பர் 9, 10, 11 ஆகிய 3 நாட்கள் டெல்லியில் பாராளுமன்றம்
முன்பு தர்ணா நடத்தினோம்.
* 23-11-2017 அன்று மனித சங்கிலிப் போராட்டம் நாடு முழுவதும்
மாவட்டத் தலைமையகங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.
* 30-11-2017 துவங்கி இன்றுவரை 543 பாராளுமன்ற உறுப்பினர்கள்
அனைவருக்கும் நமது கோரிக்கையின் நியாயத்தை
பாராளுமன்றத்தில் எடுத்துச் சொல்வதற்காக மகஜர்
கொடுத்திருக்கிறோம்.
* அடுத்தக் கட்டப் போராட்டம்தான் டிசம்பர் 12, 13 இரண்டு நாள் வேலை
நிறுத்தப் போராட்டம்.
* இதற்கும் அரசு அசையாவிட்டால் கால வரையற்ற வேலை
நிறுத்தத்தை நடத்தவிருக்கிறோம்.
இப்படிப் பலகட்ட போராட்டங்களை நடத்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதேபோல், அந்தந்த மாநில, மாவட்ட, கிளைச் செயலர்கள் இது நாள் வரை பம்பரமாய் சுழன்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
நம்மில் பலர் டெல்லிப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்க முடியாது. அதேபோல் 543 MP களிடமும் அலைந்து மனு கொடுத்தார்களே! அதிலும் பங்கேற்றிருக்க முடியாது. அடுத்து நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பெரும்பான்மையோர் பங்கேற்றிருக்கிறோம். அதிலும் சிலர் பங்கேற்றிருக்க முடியாது.
ஆனால், நாளை நடைபெறப் போகும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் எவரும் ஒதுங்குதல் ஆகாது. இது பொது வேலை நிறுத்தம் அல்ல. நமக்கான போராட்டம். நஷ்டமடைகிற துறைக்கெல்லாம் சம்பள மாற்றம் வரும்போது நமக்கு மட்டும் மறுக்கின்ற அரசாங்கத்தை எதிர்க்காமல் இருக்க முடியுமா!
தேசத்தின் ஒட்டுமொத்த வாராக்கடன் ஏழரை லட்சம் கோடியில், நாலரை லட்சம் கோடியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாம் பெற்றிருக்கின்றன. BSNL ஒரு பைசாக் கூட கடன் பெறவில்லை. வெறும் 200 கோடி ரூபாயில் துவங்கிய நமது துறை இன்றைக்கு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை பெற்றிருக்கிறது அதற்கு நமது உழைப்புதான் காரணம். நஷ்டம் வந்ததற்கு BSNL பொதுத்துறை மீது அரசாங்கத்தின் பாராமுகமே காரணம். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டாக நஷ்டம் குறைந்து, லாபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் தோழர்களே!
இவ்வளவு விரிவாக உங்களிடம் பேசுவதற்குக் காரணம், எல்லோரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே. இப்படி சிரத்தையெடுத்து நடத்துகின்ற போராட்டத்தை எவரும் காட்டிக் கொடுக்கலாகாது. 4000, 5000 ரூபாயை பெரிதாக எண்ணி விட்டீர்களென்றால் மாதா மாதம் 8000 த்திலிருந்து 15000 ரூபாய் வரை இழந்து விடுவோம் தோழர்களே!! இது நம்மில் பலருக்கு இறுதி ஊதிய மாற்றம் என்பதை உணர்வோம்.
எனவே, வரலாற்றுச் சிறப்பு மிக்க இப் போராட்டத்தில் கண்டிப்பாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் 100 % வெற்றிக்கு கடுமையாக உழையுங்கள். நமது NFTE ன் போராட்ட பாரம்பரியத்தை காத்திடுங்கள். போராடாமல் நாம் எதையும் பெற்றதில்லை தோழர்களே! வெற்றி ஒன்றே இலக்காக இருக்கட்டும்!
வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன்.
N F T E ஜிந்தாபாத்.
அனைத்துச் சங்கக் கூட்டமைப்பு ஜிந்தாபாத்.
No comments:
Post a Comment