தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, December 15, 2017

தோழர். பொன்னீலன் வயது 77
15-12-1940

கலை இலக்கிய பெருமன்றத்தின் கர்த்தா, 
மிகச் சிறந்த படைப்பாளி 
அன்புத்  தோழர். பொன்னீலன் அவர்களின்
 77 வது  பிறந்த நாள் இன்று. 
========================================================
வணங்கி, வாழ்த்தி மகிழ்வோம் தோழர்களே! 
======================================================

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பொன்னீலனின் “மறுபக்கம்” நாவல் The Dance of flames என்ற பெயரில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வுக்காக குமரியிலிருந்து வந்திருந்த பொன்னீலனோடு (வயது 77) நடந்த நேர்காணல் இது.
 த டைம்ஸ் தமிழிற்காக நேர்காணல் செய்தவர்: பீட்டர் துரைராஜ்.
கேள்வி: சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லுங்களேன்?
பதில்: என்னுடைய மறுபக்கம் நாவல் மண்டைக்காடு கலவரத்தை(1982) மையமாக வைத்து 2010 ல் வெளியானது.நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. வெறுப்பு அரசியல் மேலோங்கி இருக்கும் இந்த காலத்தில் தமிழ்நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லும் முயற்சியில் இது ஆங்கிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.கன்னியாகுமரியைச் சார்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை மிசியா டேனியல் (Mysia Daniel) இதனை அற்புதமாக மொழிபெயர்த்து உள்ளார். இந்த நாவல் The Dance of Flames என்ற பெயரில் வெளியாகிறது. இதனை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் (ரூ.700) வெளியிட்டுள்ளது. இந்த நாவல் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
கே: கரிசல், புதிய தரிசனங்கள், தேடல், உறவுகள், ஊற்றில் மலர்ந்தது, கொள்ளைக்கார்கள், மறுபக்கம் போன்ற நாவல்களை எழுதி இருக்கிறீர்கள். இதில் உங்களுக்கு பிடித்த நாவல் எது?
பதில்: நெருக்கடி நிலை காலகட்டத்தில் 1975 முதல் 1977 வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை புதிய தரிசனங்கள். என்னுடைய 14 ஆண்டு கால உழைப்பின் பயனாக வெளியான நாவல் இது. இந்த நாவல் குறித்து தமிழகம் முழுவதும் இலக்கியத் துறையில் விவாதங்கள் நடந்தன. ஆனால் இந்த நாவல் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியோ , மார்க்சிஸ்ட் கட்சியோ , மார்க்சிய லெனினிய கட்சியோ விவாதம் நடத்தவில்லை.
இந்த நாவல் அரசியல் நாவல் என்று பரவலாக அறியப்பட்டாலும் இது மெய்யியல் துறையில் அறம் சார்ந்த பல கேள்விகளை எழுப்புகிறது; இதனை பலரும் பதிவு செய்து உள்ளனர். அந்த வகையில் புதிய தரிசனங்களை ஒரு முக்கியமான நாவலாக பார்க்கிறேன். இது எனக்கு பிடித்த நாவல்.
மூன்று பதிப்புகள் வெளிவந்து விட்டன. நாவலும் தீர்ந்து விட்டது. ஆனால் அடுத்த பதிப்பை 17 ஆண்டுகளாக நியூ செஞ்சுரி புத்தக நிலையம் கொண்டு வரவில்லை. ஏன் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
இந்த நாவலுக்குத்தான் 1994ல் எனக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. அப்போது நான் கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். கல்வித்துறையில் பணியாற்றிய யாருக்கும் கிடைக்காத விருது இது. ஆனால் கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை.அதே போலத்தான் கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூமணிக்கு ‘அஞ்ஞாடி” நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. கூட்டுறவுத் துறையும் கண்டு கொள்ளவில்லை.
கே: புதிய திருமண முறையை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். பொதுவுடமை திருமண முறை என்று இதைச் சொல்லலாமா?
பதில்:  பொதுவுடமை என்ற வார்த்தை பொருளாதாரத்தை மட்டும்தான் குறிக்கும். நான் எப்பொழுதும் சமதர்மம் என்ற வார்தையைதான் பயன்படுத்துவேன். இந்த முறையில் திராவிட இயக்க திருமண கூறுகளும் உண்டு. மனித விரோத கூறுகளை விலக்கி, நமது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கி, சாதி கடந்து, மதம் கடந்து, சமதர்ம கண்ணோட்டத்தில் நாங்கள் உருவாக்கிய இந்த திருமண முறையில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என பாகுபாடின்றி இம்முறையில் திருமணம் செய்துள்ளனர். இந்த முறையில் மாமனார், பங்காளிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் இம்முறைப்படி திருமணம் பரவலாக நடந்து கொண்டு இருக்கிறது.
கே: குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி என்ற நூலை மார்க்சியவாதியான நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இதனை எப்படி புரிந்து கொள்ளுவது?
பதில்: ” நான் கடவுளை நம்புகிறேன், ஆனால் மனிதனை கீழ்மைப்படுத்தும் எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ” என்ற உறுதியான கொள்கை கொண்டவர் குன்றக்குடி அடிகளார். கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றை தவிர மார்க்சியத்திற்கும் சைவத்திற்கும் வேறுபாடு இல்லை என்று நம்பியவர் அடிகளார். அறிவியல் வழி செயல்பட வேண்டும் என்றவர் அவர். அவருடைய மடம் இருந்த பகுதிகளில் திடீர், திடீரென்று குடிசைகள் எரியும். வேறு யாராவது இருந்தால் மக்கள் நம்பிக்கையை தவறாக வழி நடத்தி இருப்பர். ஆனால் அவர் சிக்கரியிலிருந்து விஞ்ஞானிகளை வரவழைத்து ஆராய்ச்சி செய்து காரணத்தை (கந்தகம்) கண்டுபிடிக்கச் செய்தவர். மண்டைக்காடு கலவரம் நடந்த போது மற்ற மதத் தலைவர்களை நேரில் சந்தித்து அமைதி ஊர்வலம் நடத்தி சகஜ நிலையை கொண்டு வந்தவர். வாழ்ந்த குன்றக்குடி அடிகளாருக்கு ஈடாக வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியாது.
கே: நீங்கள் நடத்திய பாதயாத்திரை பற்றி?
பதில்: சமாதானத்தை, நல்லிணக்கத்தை வலியுறுத்தி என் தலைமையில் குமரி முதல் சென்னை வரை 22 நாட்கள் 22 பேர கலந்து கொண்ட பாதயாத்திரை நடந்தது. உலக சமாதான கழகம் கொடுத்த அறைகூவலுக்கு இணங்க 1985 ஆண்டு இந்த இயக்கம் நடந்தது.
கே: மத்திய அரசு கருத்துரிமைக்கு எதிராக இருப்பதை கண்டித்து நாடு முழுவதும் எழுத்தாளர்கள் விருதை திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால், தமிழ் நாட்டிலிருந்து யாரும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: மூன்று தமிழ் அறிஞர்களால் தேர்வு செய்யப்பட்டுதான் சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிறது. இதில் யாரும் தலையிட முடியாது. இந்நிலையில் நான் விருதை திருப்பிக் கொடுப்பது என்பது தமிழறிஞர்களை அவமதிப்பதற்கு சமம். எனவே நான் விருதை திருப்பிக் கொடுக்கவில்லை. இது சரியான முடிவு என்றுதான் நான் இப்பொழுதும் நினைக்கிறேன்.
கே: ‘நல்ல இலக்கியங்கள் படமாக்கப்பட வேண்டும். அதனைச் சாதனையாக நிகழ்த்திக் காட்டும் ஞான. ராஜசேகரன் மோகமுள்கள் பெருக வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறீர்கள் ?
பதில்: என்னுடைய ‘உறவுகள்’ நாவலை ‘பூட்டாத பூட்டுகள்’ என்று மகேந்திரன் எடுத்தார். இது வணிக ரீதியிலும் வெற்றி பெறவில்லை; நல்ல கலைப்படமாகவும் இல்லை. மோகமுள் நல்ல படம், ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. நல்ல இலக்கியங்கள் திரைப்படமாக்கப்பட வேண்டும். அவை வணிக ரீதியிலும் வெற்றி பெற வேண்டும்.
கே: மக்களுடைய வாசிப்பு பழக்கம் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்: நூலகத்துறை நல்ல நூட்களை வாங்குவது இல்லை. நாளுக்கு தாள் இது மோசமாகிக் கொண்டு வருகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது. வெளிப்படைத்தன்மையோடு தேர்வுக்குழுவை அமைத்து தரமான நூட்களை தேர்வு செய்ய வேண்டும்.
கே: ‘திராவிட இயக்கச் சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கு யாரும் கொண்டாடுவது இல்லை’ என்று  தமிழ் மகன் சொல்லுகிறாரே இது பற்றி என்ன நினைக்கிறார்கள்?
பதில்: தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை. பொதுவாக அரசியல்வாதிகள் சமூக நாவல்களை படிப்பதும் இல்லை; விமர்சிப்பதும் இல்லை. ஆனால், இது கேரளத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டு அரசியல் மீது எனக்கு திருப்தி இல்லை. இங்கு இருப்பது இரவல் அரசியல்தான். அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை.
கே: உங்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: என்னுடைய சிந்தனைகளை பெரிய அளவு இங்கு யாரும் அங்கீகரிக்கவில்லை. என்னை அங்கீகரித்தால் என்னுடைய படைப்புகளை அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு யாரும் தயாராக இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை நான் கேரளத்தில் இருந்திருந்தால் மிகப் பெரிய அளவுக்கு (அழுத்திச் சொல்லுகிறார்) அங்கீகரிக்கப்பட்டு இருப்பேன்.
கே: நீங்கள் படைப்பாளியாக, அரசு அதிகாரியாக, இலக்கியப் போராளியாக பல தளங்களில் பணி புரிந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு இதில் எது மிகவும் பிடிக்கும்?
பதில்: நான் மூன்று துறையிலும் திருப்தியோடு பணிபுரிந்து இருக்கிறேன். குறிப்பிடத்தக்க வெற்றிகளை அனைத்து தளங்களிலும் பதித்து இருக்கிறேன். அனைத்து பணிகளையும் சம ஆர்வத்தோடுதான் செய்கிறேன்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR